பெண்களுக்கு இலவச பஸ் விட்டதில் இப்படி ஒரு பிரச்சனை இருக்குதா? குடும்ப வாழ்வாதாரமே அழிஞ்சு போச்சே!
பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணத் திட்டத்தை அறிவித்ததால் வருமானம் இல்லை என ஆட்டோ டிரைவர் ஒருவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் அவர் 5 மணி நேரத்தில் வெறும் 40 ரூபாய் தான் சம்பாதித்து உள்ளதாக கூறுகிறார். இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியான பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் என்ற திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ளதை போல தற்போது கர்நாடகாவில் பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கதறி அழும் வீடியோ வைரலாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் என அறிவிக்கப்பட்ட பின்பு ஆட்டோ டிரைவர்களுக்கு வருமானம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். ஆட்டோவில் மக்கள் ஏறுவதேயில்லை என்றும், பஸ்களிலேயே பயணிக்கின்றனர் என்றும் கூறுகிறார்.
இந்த வீடியோ எடுக்கும் தினத்தன்று அவர் காலை 8 முதல் மதியம் 1 மணி வரை ஆட்டோ ஓட்டியும் வெறும் 40 ரூபாயை தான் சம்பாதித்துள்ளதாக கூறுகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு டிவி சேனலுக்கு அவர் இந்த பேட்டியை கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் எடுத்து வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோ பெங்களூருவில் எந்த பகுதியில் பதிவு செய்யப்பட்டது மற்றும் என்று பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் இல்லை. அதே நேரம் இந்த ஆட்டோ ஓட்டுனரின் இன்றைய நிலைமை குறித்து தகவல்களும் இல்லை.
இருந்தாலும் பெண்களுக்கு பஸ்களில் இலவசமாக பயணம் அறிவித்தது ஒரு தரப்பில் பெண்களுக்கு நன்மையாக இருந்தாலும் மற்ற தரப்பில் இது ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையே பாதித்துள்ளது. இந்த வீடியோவில் அந்த ஆட்டோ டிரைவர் தன் பையில் உள்ள இரண்டு 20 ரூபாய் நோட்டுகளை காண்பித்து கண்ணில் கண்ணீர் வடிக்கிறார்.
இந்த வீடியோ வைரலான பிறகு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் இது குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆட்டோவிற்கு பணம் கொடுத்தும் செல்லும் அளவில் பணம் படைத்த பெண்கள் கூட தற்போது இலவச பஸ் சேவை இருப்பதால் பஸ்ஸில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
கர்நாடகா மட்டுமல்ல தமிழகத்திலும் இதே போல பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் இப்படியான ஒரு சூழ்நிலை இருக்கலாம் ஆனால் இது குறித்து இதுவரை எந்த பதிவும் வெளியாகவில்லை. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதால் இந்த பதிவு தற்போது வெளியாகி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு போக பெண்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதற்காக அரசு கொடுக்கும் இந்த சலுகை தகுதியான மக்களுக்கு மட்டுமே செல்லும்படி திட்டமிடப்பட வேண்டும். இதனால் மற்றவர்கள் பாதிப்படைவது குறையும்.


Click it and Unblock the Notifications








