பெங்களூரில் அறிமுகமாகிறது ரோப் கார் போன்ற 'பாட் டாக்சி'!
பெங்களூரில் பாட் டாக்சி சாதனத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் அந்நகரின் பெருநகர மாமன்றம் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தால் விழி பிதுங்கி வரும் பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரும் சவாலாக மாறி இருக்கிறது. கால விரயம், உற்பத்தி திறன் இழப்பு, எரிபொருள் விரயம் என பல வகைகளில் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை மூலமாக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த மெட்ரோ ரயில் சேவை மிக விரிவாக அமைந்தால் மட்டுமே அது பலனளிக்கும் நிலை உள்ளது.

போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன பெங்களூர் நகரில், தற்போது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதத்தில் பாட் டாக்சி எனப்படும் புதிய போக்குவரத்து சாதன கட்டமைப்பு முறையை அறிமுகம் செய்ய பெங்களூர் பெருநகர மாமன்றம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ரோப் கார் போல கம்பி வடத்தில் தொங்கிச் செல்லும் இந்த பாட் டாக்சி போக்குவரத்து சாதனம், பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

பெங்களூரில் உள்ள எம்ஜி சாலையிலிருந்து பழைய விமான நிலைய சாலையில் உள்ள லீலா பேலஸ் சாலை சந்திப்பு வரையிலும் 4 கிமீ தூரத்திற்கு ஒரு வழித்தடத்திலும், அதிலிருந்து மார்த்தஹள்ளி வரையிலும் 6 கீமீ தூரத்திற்கு மற்றொரு வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது.

மேலும், எம்ஜி ரோடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கோரமங்களா வரையில் 7 கிமீ தூரத்திற்கு மற்றொரு வழித்தடமும், ஜெயநகர் 4வது பிளாக்கிலிருந்து ஜேபி நகர் 6வது ஃபேஸ் வரை மற்றொரு வழித்தடத்திலும் இந்த பாட் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய திட்டம் உள்ளது.

மேலும், நகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சோனி வேர்ல்டு ஜங்ஷன் வரை 6.7 கிமீ தூரத்திற்கு இந்த பாட் டாக்சி போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க பெங்களூர் பெருநகர மாமன்றம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பம் உலக அளவில் கோரப்பட்டது. இதில், ஒரு அமெரிக்க நிறுவனம் உள்பட 3 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கு கொண்டுள்ளன. அந்த நிறுவனங்கள் கொடுத்திருக்கும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தனியார் நிறுவனமே அமைத்து, இயக்கும் விதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு வசமிருந்து நிதி தேவைப்படாது என்பதால், மிக விரைவாக இந்த திட்டம் நிறைவேற்றும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை விட இந்த பாட் டாக்சிகளுக்கான கட்டுமானப் பணிகள் மிக விரைவாக முடிக்க முடியும். 7 முதல் 8 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்க முடியும் என்றும் பாட் டாக்சி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முதலீடும், இடமும் குறைவாக தேவைப்படும். எந்த சாலையிலும் மிக விரைவாக இந்த கட்டமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும். இந்த பாட் எனப்படும் ரோப் கார் போன்ற சாதனங்கள் ஒவ்வொன்றிலும் 4 முதல் 6 பேர் வரை பயணிக்க முடியும்.

மேலும், பாட் டாக்சிகள் சூரிய மின்சக்தியில் இயங்குவதும் சிறப்பானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பாட் டாக்சி போக்குவரத்தை விரைவாக கொண்டு வருவதற்கும் பெங்களூர் பெருநகர மாமன்றம் அனைத்து முயற்சிகளையும், உதவிகளையும் செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications








