புது மேம்பாலத்தில் துணை முதல்வர்... சீட் பெல்ட் கண்ணுக்கு தெரியலயே!! இப்படி கூடவா சர்ச்சையில் சிக்குவாங்க...
ஓர் நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டுமெனில், அந்த நாட்டில் சாலை உள்கட்டமைப்பு ஆனது மிக முக்கியமான ஒன்றாகும். இதன் வெளிப்பாடாகவே, நாடு முழுவதும் விரைவுச்சாலைகள் புதியது, புதியதாக கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் மறுப்பக்கம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ இரயில்கள் விரிவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவை இரண்டையும் ஒரே நேரத்தில், ஒரே திட்டத்தில் செயல்படுத்தினால் எப்படியிருக்கும் என்று எப்போவாவது யோசித்துள்ளீர்களா? அதாவது, மெட்ரோ இரயிலுக்காக போடப்பட்ட அதே மேம்பாலத்தில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, மேம்பாலத்திற்கு மேலே மெட்ரோ இரயிலுக்கான தண்டவாளம் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதற்கு கீழே வாகனங்களுக்கான சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கும் கீழே வழக்கமான சாலை செல்கிறது. இவ்வாறான கட்டமைப்பு நம் அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த டபுள்-டெக்கர் மேம்பாலம் பெங்களூரில் கிட்டத்தட்ட கடந்த 5 வருடங்களாக அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் உண்மையில், 5 வருடங்கள் என்பது குறைவு என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், இரண்டு மேம்பாலங்களாக, பிரம்மாண்டமாக இந்த டபுள்-டெக்கர் மேம்பாலத்தை உருவாக்கி உள்ளனர். பெங்களூரின் மிகவும் பிசியான பகுதியில் எழுப்பப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தை கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் திறந்து வைத்துள்ளார்.
மேலும், புதியதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் நம்பகத்தன்மையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் துணை முதல்வர் சிவக்குமார் பாலத்தில் காரை ஓட்டியுள்ளார். இந்த பயணத்தில் சிவக்குமார் சீட் பெல்ட் அணியவில்லை என கூறப்படுகிறது. இதனை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். மத்திய சில்க் போர்டை பெங்களூரின் வெளிவட்ட சாலை மற்றும் ஓசூர் சாலை உடன் இணைக்கும் விதத்தில் இந்த டபுள்-டெக்கர் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் முதல் டபுள்-டெக்கர் மேம்பாலம் இதுவாகும்.

இதுகுறித்து பெங்களூர் மெட்ரோ இரயில் கார்ப்பிரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "டபுள்-டெக்கர் என பரவலாக அறியப்படும் இந்த இரயில்-சாலை மேம்பாலம், ராகிகுடாவில் இருந்து மத்திய சில்க் போர்டு வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 5.12கிமீ தொலைவிற்கு ராகிகுட்டாவில் இருந்து எச்.எஸ்.ஆர் லேஅவுட் மற்றும் ஓசூர் சாலைக்கு தடையின்றி பயணிக்க இது உதவுகிறது.
இதனால் பயண நேரம் 30% குறையும். எச்.எஸ்.ஆர் லேஅவுட்டை ராகிகுட்டா மற்றும் பிடிஎம் லேஅவுட் உடன் இணைக்கும் மேம்பாலத்தின் 1.37கிமீ தொலைவிலான சரிவுப் பாதைகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன. இது 2025 ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகிகுட்டாவில் இருந்து சில்க் போர்ட் வரையிலான இந்த ரயில்-சாலை மேம்பாலம் பெங்களூரின் புதுமையான உள்கட்டமைப்புக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேம்பாலத்தை திறந்து வைத்த பின் பேசிய கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், "நிலங்களை கையகப்படுத்துவது தற்போதைய சூழலில் சவாலாக உள்ளது. இரட்டை-அடுக்கு மேம்பாலங்கள் சற்று அதிக விலை கொண்டவைகளாக இருந்தாலும், போக்குவரத்தை எளிதாக்குகின்றன. இந்த 5.25கிமீ தொலைவு இரட்டை அடுக்கு மேம்பாலம், 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. தற்போதைய கட்டமான செலவுகளின் அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கும்போது இது குறைவே.
பெங்களூர் மாநகராட்சி (BBMP) மற்றும் பெங்களூர் மெட்ரோ இரயில் நிர்வாகம் (BMRCL) இந்த திட்ட செலவை பகிர்ந்துக் கொள்ளும். இந்த இரட்டை அடுக்கு மேம்பாலத்தால் ஓசூர் சாலையை நோக்கி செல்லும் 30% பயணிகள் பயனடைவார்கள். இதனால், எலக்ட்ரானிக் சிட்டி, எச்.எஸ்.ஆர் லேஅவுட் மற்றும் மகாதேவபுரத்தில் வசிப்பவர்கள் பயனடைவார்கள். பெங்களூரில் 9.5கிமீ தொலைவிற்கான மேல் எழுப்பப்பட்ட 5-வழி சாலைக்கு ரூ.5,475 கோடி செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது வழக்கமான மெட்ரோ இரயில் மேம்பாலமும் கிடையாது, அதேபோல் இது வழக்கமான மேம்பால சாலையும் கிடையாது. ஏனெனில், இரண்டையும் சேர்த்து கட்டியுள்ளதால் நிச்சயமாக நிறைய ஆய்வுகள் மற்றும் சோதனைகள் செய்ய வேண்டியிருக்கும். ஆதலால், 5 வருடங்களில் இந்த பிரம்மாண்ட டபுள்-டெக்கர் மேம்பாலத்தை கட்டி இருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை தருகிறது. இதில் இருந்து கொரோனா ஊரடங்கு காலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








