பெங்களூரில் கொஞ்ச நேரத்தில் எல்லாருக்கும் பயம் தொண்டைய கவ்விடுச்சு!! பயத்தில் ஊழியர் செய்த செயல்!
பெங்களூரில் மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் மேல்மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை உடன் ஷோரூமை சுற்றிலும் நிலவும் அந்த அசாதாரண சூழலை காட்டும் வீடியோக்களும், படங்களும் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஆரம்ப காலக்கட்டத்தில் ஆட்டோமொபைல் வாகனங்கள் எளிதில் தீப்பற்றக் கூடியவைகளாக இருந்தன. வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் & டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் இதற்கு காரணமாக இருந்தன. குறிப்பாக, நம் இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த நாடுகளில் வாகனம் தீப்பற்றி கொள்வது பரவலாக ஏற்பட்டது.

ஆனால், இன்றைய காலக்கட்டத்தின் ஆட்டோமொபைல் வாகனங்கள் கடந்த நூறு ஆண்டுகளில் நன்கு முன்னேற்றம் கண்டவை. வாகனங்களையும், பயணிகளையும் பாதுகாக்க, பல்வேறு சென்சார் தொழிற்நுட்பங்கள் வாகனத்தை சுற்றிலும் பயன்படுத்தப் படுகின்றன. இருப்பினும், இன்றைய நாட்களிலும் மிகவும் அரிதாக சில பகுதிகளில் கார்கள் தீப்பற்றிக் கொள்வதை பார்க்க முடிகிறது.
ஆனால், பெங்களூரில் மாருதி சுஸுகி நெக்ஸான் டீலர்ஷிப் ஷோரூம் மையத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்துக்கு, ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் காரணம் கிடையாது. இன்று (அக்.18) பகல் 11.45 மணியளவில் இந்த தீ விபத்து பெங்களூர், கோரமங்களாவின் தாவாரேகேரே பகுதியில் உள்ள ஒரு நெக்ஸா கார் ஷோரூமில் ஏற்பட்டுள்ளது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், தரை தளத்தில் கார் ஷோரூம் உள்ளது, அதற்கு மேல் மாடியில் கல்ட்.ஃபிட்டின் உடற்பயிற்சி கூடம் உள்ளது, அதற்கும் மேலே தனியார் காஃபி ஷாப் ஒன்று இருந்துள்ளது. இந்த தீ விபத்து அந்த காஃபி ஷாப்பின் சமையலறையில் தான் ஏற்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், புகைக்கு நடுவே திடீரென குண்டு வெடித்தது போன்று பெரிய நெருப்பு பிளம்பை காண முடிகிறது. காஃபி ஷாப்பின் சமையலறையில் இருந்த சிலிண்டர் வெடித்தத்தினால் அந்த பெரும் தீ பிளம்பு ஏற்பட்டிருக்கலாம். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தீ கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த சமயத்தில் கட்டடத்தின் 4வது மாடியில் காஃபி ஷாப்பின் ஊழியர் ஒருவர் இருந்துள்ளார்.
கட்டடத்தின் கீழ் மாடிகளுக்கும் தீ பரவ துவங்கியதை கண்ட அந்த ஊழியர் பயத்தில் 4வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். கீழே இருந்த மரங்களை நோக்கி குதித்தாலும், 4வது மாடியில் இருந்து குதித்த காரணத்தினால் பலத்த காயம் அடைந்துள்ள அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த தீ விபத்து சம்பவத்தினால் அந்த பகுதி முழுவதுமே பரபரப்பாக காணப்படுகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியை சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நல்லவேளையாக தீ தரைத்தளத்தை அடையும் முன்னரே அணைத்துவிட்டனர். ஏனெனில், மாருதி சுஸுகியின் நெக்ஸா ஷோரூமில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அவையும் தீயில் சேதமாகினால் பெரும் பண இழப்பை சந்திக்க வேண்டியதாகி இருக்கும். ஆதலால், இந்த விபத்தில் விரைவாக செயல்பட்ட போலீஸாரையும், தீயணைப்பு வீரர்களையும் நாம் பாராட்ட வேண்டும்.


Click it and Unblock the Notifications









