வளைத்து வளைத்து பிடிக்கும் கர்நாடக போலீஸார்!! 100kmph வேகத்திற்கு மேல் இந்த ஹைவே-இல் போக கூடாது...
பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் 100kmph வேகத்திற்கு மேல் சென்றால் போலீசார் அதிரடியாக அபராதம் விதிப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. தென்னிந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளுள் ஒன்றாக விளங்கும் பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையில் எந்தெந்த வாகனங்களில் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்ற விபரங்களை இனி பார்க்கலாம்.
ஓர் நாட்டின்/ மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை பிரதிபலிப்பவையாக அந்த நாட்டின்/ மாநிலத்தின் நெடுஞ்சாலைகளே விளங்கும். இதனை நன்கு உணர்ந்து செயல்பட்டுவரும் நமது மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளை அமைத்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லி- மும்பை விரைவுச்சாலையை மொத்த நாடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வரிசையில், கடந்த மார்ச் மாதத்தில் பெங்களூர்- மைசூரு இடையேயான விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவங்கி வைத்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். ஆனால் அப்போதில் இருந்து பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையை சுற்றிலும் பல்வேறு சர்ச்சைகளும், எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இந்த நெடுஞ்சாலையில் அதிக சுங்க கட்டணத்தை வசூலிப்பதாக ஆரம்பத்தில் இருந்து தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவதுபோல், கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் சுங்க கட்டணங்களை பெற புதியதாக ஓர் மையம் திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழல் இந்த விரைவுச்சாலையில் நிலவிவரும் நிலையில், பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையில் எந்தெந்த பகுதிகள் அதிக விபத்து நடக்கக்கூடிய பகுதிகளான உள்ளன என்பதை அறிய போக்குவரத்து & சாலை பாதுகாப்புக்கான கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் அலோக் குமார் சமீபத்தில் பார்வையிட்டார். அதன் மூலம் கிடைத்த தரவுகளை வைத்து இந்த விரைவுச்சாலையில் இயங்குவதற்கான வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அலோக் குமார், "விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது அதிவேகம் ஆகும். மணிக்கு 100kmph வேகத்திற்கு மேல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை இந்த விரைவுச்சாலையில் போலீசார் துவங்கியுள்ளனர்" என்றார். இதன்படி, முதல் நாளான ஜூலை 4ஆம் தேதியில் மட்டும் 44 வழக்குகள் இதுகுறித்து போலீஸாரால் பதியப்பட்டுள்ளன.

போலீஸார் தங்களிடம் இருந்த 3 மொபைல் ஸ்பீடு ரேடார்களை வைத்து இந்த 44 போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, பெங்களூர்- சன்னாபட்னா இடையேயான 55கிமீ தொலைவில் வெறும் 30 நிமிடங்களுக்கு உள்ளாக 30 மோட்டார்சைக்கிள் ரைடர்கள் 120kmph வேகத்திற்கு மேல் சென்றதற்காக அபராதத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையின் விதிகளின்படி, விரைவுச்சாலைகளில் கார், வேன் போன்ற எடை குறைவான வாகனங்களும், பேருந்துகளும் அதிகப்பட்சமாக மணிக்கு 100கிமீ வேகத்தில் செல்லலாம். கனரக லாரிகளுக்கு 80kmph மட்டுமே. இதை வைத்துதான், போலீசார் அலோக் குமார் 100kmph வேகத்திற்கு மேல் பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளார்.

இருப்பினும், எடை குறைவான வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஓவர்டேக் செய்ய 120kmph வேகம் வரையில் செல்லலாம். ஆனால் ஓவர்டேக் செய்வதற்காக தான் அவ்வளவு வேகத்தில் சென்றோம் என போலீஸாரிடம் நிரூப்பிப்பது கடினம். பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையில் தற்சமயம் வாகன ஓட்டிகளின் வேகத்தை கண்காணிக்க தடுப்புகள் இருப்பது தற்காலிகமானவையே என்றும், விரைவில் AI-சார்ந்த கேமராக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியா, சாலை விபத்துகளில் உலகளவில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு, போலீஸார் அலோக் குமார் தெரிவித்ததை போல் அதிவேக பயணம் முக்கிய காரணமாக விளங்குகிறது. ஆதலால், சாலை புதியதாக, தரமானதாக உள்ளது என மிக அதிக வேகத்தில் பயணிக்காமல் நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்குள் பயணிப்பது நல்லது. அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையாக இருப்பினும், நம் நாட்டில் சாலையின் குறுக்கே எது எப்போது வரும் என்றே சொல்ல முடியாது.


Click it and Unblock the Notifications









