பிரதமர் திறந்து வைத்து 5 மாதம் கூட முழுசா ஆகல!! விபத்தில் இறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
கடந்த மார்ச் மாதத்தில் திறக்கப்பட்ட பெங்களூர் - மைசூர் விரைவுச்சாலையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் விபத்துகளினால் சுமார் 100க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக ஓர் அதிர்ச்சிக்கர தகவல் வெளியாகி உள்ளது. இவ்வளவு குறைவான காலத்தில் எவ்வாறு இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன? இதனை குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன? என்பதை பற்றிய விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் புதிய புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு அமைக்கப்பட்டு, கடைசியாக பெங்களூர்- மைசூரு விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வந்தது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைத்தார். இந்த விஷயங்கள் அனைத்தையும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இந்த விரைவுச்சாலையில் புதிய டோல் பூத்களை அமைத்து வருவாயை பெருக்கும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது. இந்த வருவாய்கள் 118கிமீ நீளமுள்ள இந்த விரைவுச்சாலையை பராமரிப்பதற்கும், வேறு பகுதிகளில் புதியதாக நெடுஞ்சாலையை அமைப்பதற்கும் செலவிடப்படும். இவ்வாறு, வாகன ஓட்டிகளிடம் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு சாலைகளை நன்கு பராமரிக்க மத்திய அரசு திட்டமிட்டாலும், சாலைகளில் எவ்வாறு வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் பலருக்கு தெரிவதில்லை.
இதனை வெளிக்காட்டும் விதமாகவே, வெறும் கடந்த 5 மாதங்களில் பெங்களூர் - மைசூரு விரைவுச்சாலையில் நடந்துள்ள விபத்துகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பார்க்கும்போது, கடந்த 5 மாதங்களில் 118கிமீ நீளமுள்ள பெங்களூர்-மைசூரு விரைவுச்சாலையில் சுமார் 500க்கும் அதிகமான சாலை விபத்துகள் நடந்துள்ளன. சமீபத்தில் கூட, பெரிய கனரக லாரி ஒன்று டிவைடரை உடைத்துக் கொண்டு சாலையின் மறுப்பக்கத்தில் கவிழ்ந்து நின்றதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இவ்வாறு நடக்கும் சாலை விபத்துகளினால் மட்டும் சுமார் 100க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த புள்ளி விபரங்கள் தேசிய நெடுஞ்சாலை துறை (NHAI)-க்கு தலைவலியாக அமைந்த காரணத்தினால், நெடுஞ்சாலையின் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அடங்கிய குழுவையும் NHAI நியமித்துள்ளது.
இந்த குழு நேரில் பெங்களூர்-மைசூரு விரைவுச்சாலையை ஆய்வு செய்து, விபத்துகள் அதிகம் நடைபெறக்கூடிய பகுதி மற்றும் விபத்து நடப்பதற்கு வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படுவதற்கான மற்ற காரணங்களையும் கண்டறிய இந்த குழு முயற்சிக்கும்.

NHAI-ஆல் அமைக்கப்பட்ட இந்த குழுவின் சோதனை & ஆய்வு பணிகள் இன்று (ஜூலை 20) முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அடுத்த 10 நாட்களில் இதுகுறித்த அறிக்கையை NHAI-இடம் இந்த குழு சமர்பிக்கும். மொத்தம் 10 பாதைகளை கொண்டதாக சுமார் ரூ.8,480 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை பெங்களூர்-மைசூரு இடையே 4 முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது நெடுஞ்சாலை என கூறுவதை விட, விரைவுச்சாலை என கூறுவதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் இந்த சாலை ஆனது வாகனங்கள் அதிகப்பட்சமாக மணிக்கு 110கிமீ - 120கிமீ வேகத்தில் சென்றாலும் சேதமடையாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகன ஓட்டிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகப்பட்ச வேகம் 100kmph மட்டுமே. ஆனால் 80-90kmph வேகத்தில் சென்றாலே பெங்களூரில் இருந்து மைசூரை வெறும் 75 நிமிடங்களில் அடைந்துவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: புதியதாக போடப்பட்ட சாலையை பார்த்தாலே பலருக்கு அதிவேகமாக வாகனத்தை ஓட்ட வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுகிறது போல. ஏனெனில், பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையில் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் புதியதாக அமைக்கப்படும் சாலைகளிலேயே அதிக விபத்துகள் பதிவாகுவதாக போலீஸாரின் விசாரணைகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications









