ரோடு போட்டே 3 மாசம் தான் ஆகுது, அதற்குள் இன்னொரு டோல் பூத்!! மத்திய நெடுஞ்சாலை துறை கல்லா கட்ட ரெடி...
வாகன ஓட்டிகளிடம் இருந்து அதிக சுங்க கட்டணத்தை பெறும் நோக்கத்தில் பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையில் புதிய டோல் மையத்தை திறக்க மத்திய நெடுஞ்சாலை துறை தயாராகி வருகிறது. பெங்களூர், மைசூர் இடையே எந்த பகுதியில் இந்த டோல் மையம் அமைய உள்ளது? எப்போதில் இருந்து இது பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்பதை இனி பார்க்கலாம்.
மத்திய அரசு நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை கொண்டுவருவதில் முனைப்புடன் உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. நாடே எதிர்பார்த்திருக்கும் டெல்லி-மும்பை நெடுஞ்சாலை பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளன. இதற்கிடையில் கடந்த மார்ச் மாதத்தில் பெங்களூர் - மைசூர் இடையே விரைவுச்சாலை பிரதமர் மோடியின் முன்னிலையில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையில் டோல் கட்டணங்கள் பெற புதிய மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை தயாராகி வருகிறது. ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்ட இந்த புதிய டோல் மையம் ஜூலை 1ஆம் தேதி காலை 8 மணி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. மைசூர்-நிடாகட்டா இடையே மட்டூர் என்ற பகுதியில் இந்த புதிய டோல் மையம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், மைசூருக்கு அருகே ஸ்ரீரங்கபட்னா தாலுகாவில் உள்ள கனன்கூர் கிராமத்திலும் புதிய டோல் பிளாஸாவை திறக்க மத்திய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் மாநிலத்தின் இரு முக்கியமான நகரங்களுக்கு இடையே கூடுதலாக கொண்டுவரப்படும் இந்த சுங்க வரி மையங்களுக்கு ஆளும் மாநில காங்கிரஸ் அரசு தனது கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

மைசூர்-நிடாகட்டா இடையே கார் அல்லது வேனில் பயணிப்பவர்கள் மட்டூர் பகுதியில் அமையும் புதிய டோல் மையத்தில் ரூ.155 சுங்க கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். அதுவே, அதே வழியில் திரும்ப வர உள்ளீர்கள் எனில் மொத்தமாகவே ரூ.235 செலுத்தினால் போதுமானது. ஆனால் இந்த ரிட்டர்ன் பயணம் 24 மணிநேரத்திற்குள் இருக்க வேண்டும்.
எடை குறைவான கமர்ஷியல் & சரக்கு வாகனங்கள் மற்றும் மினி பேருந்துகளுக்கு ஒன்-வே ட்ரிப் கட்டணம் ரூ.235 ஆகும். 24 மணிநேரத்திற்குள் ரிட்டர்ன் பயணத்திற்கு மொத்தமாக ரூ.375 செலுத்தினால் போதும். கனரக லாரிகள் & பேருந்துகள் ஒன்-வே பயணத்திற்கே ரூ.525 செலுத்த வேண்டியிருக்கும். 24 மணிநேரத்திற்குள்ளாக ரிட்டர்ன் பயணிக்க மொத்த ரூ.790 செலுத்த வேண்டும்.

இந்த சுங்க கட்டணங்கள் அனைத்தும் நிடாகட்டா-மைசூர் இடையே அமையவுள்ள புதிய டோல் கட்டண மையத்திற்கு மட்டுமானது என்பதை மறந்துவிட வேண்டாம். ஏனெனில், பெங்களூர்-நிடாகட்டா இடையே ஏற்கனவே ஒரு டோல் பூத் உள்ளது. பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையில் பயணிப்பதற்காக கமர்ஷியல் அல்லாத வாகனங்களுக்கு (கார், வேன் உள்ளிட்டவை) மாதாந்திர பாஸ் முறையையும் தேசிய நெடுஞ்சாலை துறை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மத்திய அரசு சுங்க வரி என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் கொள்ளையடிப்பதாக ஏற்கனவே ஓர் பேச்சு உள்ள நிலையில் தற்போது தென்னிந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலையான பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையில் புதிய டோல் பூத் பயன்பாட்டிற்கு வருகிறது. இதனை வாகன ஓட்டிகள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள உள்ளனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









