எக்ஸ்பிரஸ்வே-க்கு போட்ட காசை எல்லாம் திரும்ப எடுக்கணும்!! டோல் ஃபீஸ் 2வது முறையா உயர போகுது - எவ்வளவு தெரியுமா
பிரதமர் மோடி கடந்த ஆண்டில் திறந்து வைத்த பெங்களூர் - மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் 2வது முறையாக அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, எப்போதில் இருந்து சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது என்பதையும், இந்த விரைவுச்சாலையை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சாலை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், விரைவுப்படுத்துவதற்கும் விரைவுச்சாலைகள் மிக முக்கிய காரணியாக விளங்குகின்றன. இதன் காரணமாகவே, நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் விரைவுச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தலைநகர் டெல்லியையும், மும்பையையும் இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு வரும் விரைவுச்சாலை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை பொறுத்தவரையில் சென்னை - பெங்களூர் இடையே எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை வந்த பின், சென்னையில் இருந்து மைசூருக்கு விரைவுச்சாலையில் விரைவாக செல்ல முடியும். ஏனெனில், பெங்களூர் - மைசூரு இடையே ஏற்கனவே விரைவுச்சாலை பயன்பாட்டில் உள்ளது.
பெங்களூர் - மைசூரு விரைவுச்சாலையை கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரில் திறந்து வைத்தார். 2023 பிப்ரவரியில் விரைவுச்சாலை திறக்கப்பட்ட பின் ஜூன் மாதத்தில் சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும், 2வது முறையாக பெங்களூர்-மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.

இந்த மார்ச் 31ஆம் தேதியுடன் 2023-24ஆம் நிதியாண்டு நிறைவடைந்து, ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து புதிய 2024-25ஆம் நிதியாண்டு துவங்கவுள்ளது. புதிய நிதியாண்டு துவங்கவுள்ளது என்றால், பல்வேறு சரக்கு & சேவைகளின் விலைகள்/ கட்டணங்கள் உயர போகின்றன என்று அர்த்தம். இதன்படியே, பெங்களூர் - மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
வருகிற 2024 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்குவர உள்ள இந்த கட்டண உயர்வின்படி, பெங்களூர்- மைசூரு விரைவுச்சாலையை முழுவதுமாக பயன்படுத்தும் 4-சக்கர வாகனங்களுக்கான கட்டணம் ரூ.10 அதிகரிக்கப்படுகிறது. தற்சமயம், இந்த விரைவுச்சாலையை கார் ஓட்டிகள் முழுவதுமாக ஒருமுறை பயன்படுத்துவதற்கு ரூ.320 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதாவது, பெங்களூரில் இருந்து மைசூருக்கு இந்த எக்ஸ்பிரஸ்வேயில் ஒருமுறை செல்ல கார்களுக்கு ரூ.320 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நாளில் ரீட்டர்ன் வந்துவிடுவீர்கள் என்றால், சென்று வருவதற்கு மொத்தமாகவே ரூ.485 செலுத்தினால் போதும். இந்த கட்டணங்களில்தான் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 10 ரூபாய் அதிகரிப்பு கொண்டுவரப்படுகிறது.
இந்த விரைவுச்சாலையை முழுவதுமாக பயன்படுத்தாமல், குறிப்பிட்ட தொலைவுக்கு பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அதற்கு ஏற்ற தொகையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணங்களும், பயண தூரத்தை பொறுத்து அதிகரிக்கப்பட உள்ளன. சுங்க கட்டணங்கள் பயண தூரத்தை பொறுத்து மட்டுமின்றி, வாகனங்களை பொறுத்தும் வேறுப்படுகின்றன. அதாவது, பெரிய பெரிய லாரிகளுக்கு அதிக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூர்-மைசூரு விரைவுச்சாலையில் பயணிப்பதற்கு மாதாந்திர சந்தா திட்டமும் உள்ளது. அந்த மாதாந்திர சந்தா திட்டத்துக்கான கட்டணங்களும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ரூ.10 அதிகரிப்பு என்பது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சாலை சுங்க கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவதை மறந்துவிடாதீர்கள். இந்த கட்டண தொகைகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்காக செல்கின்றன என நம்புவோம்.


Click it and Unblock the Notifications









