கோடி, கோடியாய் செலவழித்து சாலையை போட்டாலும், மக்கள் இப்படி இருந்தா நோ யூஸ்!! விபத்து நடக்க இதுவும் ஒரு காரணம்!
கோடிக் கணக்கில் செலவு செய்து சாலையை அமைத்தாலும், மக்கள் சாலை விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும். ஆனால் பெங்களூ- மைசூர் விரைவுச்சாலையில் வாகன ஓட்டிகள் சிலர் ஆபத்தை உணராமல் எதிர்பக்க சாலையில் பயணிக்கின்றனர். இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஆதார வீடியோவை இனி பார்க்கலாம்.
நாடு முழுவதும் எந்த அளவிற்கு நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு செய்ய மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவின் இரு முக்கிய மாநகரங்களாக விளங்கும் டெல்லி மற்றும் மும்பை இடையே விரைவுச்சாலை கடந்த பல மாதங்களாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒவ்வொரு பகுதிகளாக பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன.

தென்னிந்தியாவை பொறுத்தவரையில், கடந்த மார்ச் மாதத்தில் கர்நாடகாவில் பெங்களூர் மற்றும் மைசூரு இடையே விரைவுச்சாலை 118கிமீ தொலைவிற்கு திறக்கப்பட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரில் இந்த விரைவுச்சாலையினை திறந்து வைத்தார். மார்ச்சில் திறக்கப்பட்டதில் இருந்து பெங்களூர்-மைசூரு விரைவுச்சாலை தொடர்பாக பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
நெடுஞ்சாலை திறக்கப்பட்ட புதியதில், சுங்க வரி கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும், இதற்காக 118கிமீ தொலைவு சாலையில் பல இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தன. இருப்பினும், கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து புதிய டோல் பூத் ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன் பெங்களூர்-மைசூரு விரைவுச்சாலையில் கண்டெயினர் லாரி ஒன்று டிவைடரை உடைத்து கொண்டு எதிர்பக்க சாலையில் கவிழ்ந்தது. இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, இணையத்தில் வெளியிடப்பட்டு பலரை அதிர்ச்சியடைய செய்தது. இந்த ஒரு விபத்து மட்டுமின்றி, இந்த விரைவுச்சாலை திறக்கப்பட்டதில் இருந்து 4 மாதங்களில் 500க்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.
மேலும், இந்த 500+ சாலை விபத்துகளில் சிக்கி இதுவரையில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் வெளியான புள்ளி விபரங்கள் தேசிய நெடுஞ்சாலை துறை (NHAI) அலுவலகம் வரையில் எதிரொலித்தன. இதன் காரணமாகவே, பெங்களூர்-மைசூரு விரைவுச்சாலையில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கான காரணத்தை அறிய ஒரு குழுவை NHAI அமைத்தது. இதன்படி, சாலையை சில தினங்களாக ஆராய்ந்த இந்த குழு தனது அறிக்கையை NHAI முன் சமர்பித்துள்ளது.

பெங்களூர்-மைசூரு விரைவுச்சாலையில் சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், எதிர்பக்க டிரைவிங்கை அவற்றுள் முக்கிய காரணமாக சாலையை பயன்படுத்திய வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, வாகனங்கள் அதிவேகமாக இயங்கும் நெடுஞ்சாலை என்று கூட யோசிக்காமல் சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையின் எதிர்திசையில் ஓட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை தான் மேலே காண்கிறீர்கள். விரைவுச்சாலைகளில் வாகன ஓட்டிகள் பொதுவாக 100kmph வேகம் வரையில் செல்ல அனுமதி உண்டு. அப்படியிருக்கையில், 90-100kmph வேகத்தில் செல்லும் வாகனத்திற்கு எதிரே திடீரென ஒரு வாகனம் வந்தால் கண்ணிமைப்பதற்குள் எல்லாமே முடிந்து போய்விடும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பெங்களூர்-மைசூரு விரைவுச்சாலையில் நீண்ட தொலைவிற்கு கிராஸிங்கிற்கு எந்த குறுக்கு பாதையும் இல்லை. அதிவேகமாக வாகனங்கள் இயங்கும் என்பதால் வேறெந்த வாகனமும் இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக இவ்வாறு சாலையை வடிவமைத்துள்ளனர். ஆனால், யு-டர்ன் செய்ய விரும்பும் வாகன ஓட்டிகளில் சிலர் அவ்வாறான கிராஸிங் இல்லாததால் சாலையில் எதிர்பக்க திசையில் வாகனத்தை ஓட்டி செல்ல முயற்சிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









