ஆறே நாளில் பல் இழித்த பிரதமர் மோடி திறந்து வைத்த நெடுஞ்சாலை - தண்ணீரில் மிதந்து செல்லும் வாகன ஓட்டிகள்!!
பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் ஓர் 'சிறப்பான' சம்பவம் நடந்துள்ளது. அதனை பற்றி முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து இங்கே பார்க்கலாம்.
எந்தவொரு நாட்டுக்கும் நெடுஞ்சாலைகள் என்பது மிகவும் அவசியமாகும். இன்னும் சொல்லப்போனால், நெடுஞ்சாலையின் தரத்தை வைத்தே ஒரு நாட்டின் பொருளாதார நிலையை கூறிவிடலாம் என சொல்வார்கள். இந்த விஷயத்தில் நமது மத்திய அரசை எந்தவொரு குறையும் கூறிவிட முடியாது. எந்தெந்த பகுதிகளில் புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள் தேவை என்பதை பார்த்து பார்த்து விரிவாக்கம் செய்து வருகிறது.

நாடு முழுவதுமே கவனத்தை பெற்றுள்ள மும்பை - டெல்லி இடையேயான விரைவுச்சாலை சிறிது சிறிதாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வகையில் தென்னிந்தியாவில் பரபரப்பான இரு நகரங்களான பெங்களூர், மைசூர் இடையே ரூ.8,480 கோடி செலவில் புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மிக சமீபத்தில், கடந்த மார்ச் 12ஆம் தேதிதான் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், பெங்களூர் - மைசூர் இடையே ராமநகரா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலையை மழைநீர் ஆக்கிரமித்துள்ளன. ராமநகரா மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக இவ்வாறு நடந்துள்ளது. குறிப்பாக, நெடுஞ்சாலையில் அண்டர் பாஸ் அமைந்துள்ள பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் அளவுக்கு அதிகாக தேங்கி உள்ளதால் வாகனங்கள் நீரில் மிதந்தப்படி செல்கின்றன.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும், சாலையில் மழைநீர் காரணமாக சில பல விபத்துகளும் நடப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ஹைலைட் என்னவென்றால், கடந்த ஆண்டில் இதே ராமநகரா மாவட்டத்தில் பழைய நெடுஞ்சாலையின் பல்வேறு அண்டர் பாஸ்களில் குளம் போல மழைநீர் தேங்கி இருந்தன.
புதிய நெடுஞ்சாலையிலாவது இவ்வாறு நடக்காது என நினைத்தோம், ஆனால் எந்த மாற்றமும் இல்லை என பெங்களுர்-மைசூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர். இதன் காரணமாக, மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எந்த அளவிற்கு சோதனை செய்து, புதிய நுட்பங்களின்படி சாலையை அமைத்தனர்? என்கிற சந்தேகம் எழுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலையில் பயணம் செய்த வாகன ஓட்டி ஒருவர் அளித்த பேட்டியில், "எனது மாருதி ஸ்விஃப்ட் கார், நீர் தேங்கிய அண்டர் பிரிட்ஜில் பாதியளவு மூழ்கிவிட்டது. இதனால் கார் ஆஃப் ஆனது, பின்னால் வந்த லாரி ஒன்று என் கார் மீது மோதியது. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? எனது காரை சரி செய்து தருமாறு கர்நாடக முதல்வர் பொம்மையிடம் கேட்டு கொள்கிறேன்.
பிரதமர் மோடி இந்த நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். அந்த சாலை திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளதா என்று தனது சாலை & போக்குவரத்து அமைச்சகத்துடன் சேர்ந்து சோதித்தாரா? ஓட்டு வங்கி அரசியலுக்காக நாங்கள் கஷ்டப்பட வேண்டுமா? அவர்கள் பெரும் டோல் கட்டணம் கேட்கிறார்கள்" என சரமாரியாக கேள்வியெழுப்பி உள்ளார்.

கடந்த மார்ச் 12ஆம் தேதி பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை ஆனது மொத்தம் 118 கிமீ தொலைவு நீளம் கொண்டது. இந்த நெடுஞ்சாலையினால் பெங்களூர் - மைசூரு இடையேயான பயணம் நேரம் வெறும் 75 நிமிடங்களாக குறைந்துள்ளது. ஆனால் தற்போது மழைநீர் தேங்கி இருப்பதால் பயணம் நேரம் பல மணிநேரங்களாக கூட அதிகமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









