ஒவ்வொரு தெரு முக்குக்கும் நிக்குறாங்க... விரட்டி விரட்டி அபராதம் விதிக்கும் ஆர்டிஓ ஆபிசர்ஸ்! போலீசாரும் கூட
சாலை வரி (Road Tax) ஆனது எந்தவொரு நாட்டிற்கும் அவசியமான ஒன்றாகும். நாட்டின் சாலை வசதிகளில் இருந்து ஆட்டோமொபைல் துறை வரையிலானவற்றை மேம்படுத்துவதற்கு சாலை வரிகள் தான் அடிப்படையாக உள்ளன. இந்தியாவில் சாலை வரிகளை அந்தந்த மாநில அரசாங்கங்கள் வசூலிக்கின்றன. புதியதாக ஒரு வாகனம் வாங்கும்போது சாலை வரியை செலுத்தினால்தான் ஆர்டிஓ-இல் அந்த வாகனத்திற்கான பதிவெண் வழங்கப்படும். இந்த வேலைகள் அனைத்தையும் டீலர்ஷிப் ஷோரூம் அதிகாரிகள் செய்துக் கொடுப்பதால், இதனை பற்றி உங்களில் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.
டீலர்ஷிப் ஷோரூம் இதனை ஒன்றும் இலவசமாக செய்துக் கொடுக்கவில்லை. இதற்கெல்லாம் சேர்த்து வசூலித்து விடுவார்கள். இதனால்தான், வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைக்கும், ஆன்-ரோடு விலைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்ததுதான் ஆன்-ரோடு விலை ஆகும்.

மற்ற மாநிலங்களை போல, நம் தமிழ்நாட்டிலும் சாலை வரிகள் பல்வேறு விதமான வகைகளில் வசூலிக்கப்படுகின்றன. அதாவது, ரூ.5 லட்சத்திற்குள் விலை கொண்ட வாகனம் என்றால், அதன் விலையில் 12% சாலை வரியாகவும், ரூ.5- 10 லட்சம் மதிப்பிலான வாகனங்களுக்கு 13 சதவீதமும், ரூ.10- 20 லட்சம் மதிப்பிலான வாகனங்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட வாகனங்களுக்கு 20 சதவீதமும் சாலை வரியாக தமிழ்நாட்டில் வசூலிக்கப்படுகிறது.
சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட வாகனம் என்றால், வாங்கும்போது ஒருமுறை சாலை வரி கட்டினால் போதும். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், சாலை வரி மாநில அரசாங்கத்திற்கு செல்வதால் பிற மாநிலங்களுக்கு செல்லும்போது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இலவசமாக அந்த மாநில சாலைகளை பயன்படுத்த அனுமதிப்பர். இந்த 'குறிப்பிட்ட காலம்' ஆனது மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படுகிறது.

அந்த குறிப்பிட்ட காலத்தை கடந்து அந்த மாநிலத்தில் வாகனத்தை பயன்படுத்த நேர்ந்தால், அந்த மாநிலத்தின் சாலை வரியை செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் எப்போதுமே முனைப்புடன் இருக்கும் மாநிலங்களுள் ஒன்று, கர்நாடகா (Karnataka) ஆகும். பொதுவாகவே, கர்நாடகாவில் சாலை விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பர் என்பதை பெங்களூர், மைசூர் போன்ற முக்கியமான மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு தெரியும்.
அந்த வகையில், கர்நாடகாவில் இயங்கும் கர்நாடகாவில் பதிவு செய்யப்படாத வாகனங்களை விரட்டி விரட்டி பிடித்து பெங்களூர் ஆர்டிஓ அதிகாரிகள் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர். 11 மாதங்களாக கர்நாடகாவில் இயங்கும் பிற மாநில வாகனங்களுக்கு கர்நாடகா மாநிலத்தின் முழு சாலை வரியை செலுத்த பெங்களூர் ஆர்டிஓ அதிகாரிகள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

இது எப்போதும் இவர்கள் செய்யக்கூடிய பணி தான் என்றாலும், கடந்த சில நாட்களாக இந்த விஷயத்தில் பெங்களூர் ஆர்டிஓ அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். சாலை வரியை செலுத்துவதோடு, அதற்கான அபராதங்களையும் செலுத்த வலியுறுத்துகின்றனர். மிடில்-கிளாஸ் மக்களின் பைக் & கார்களை மட்டுமில்லாமல், மெர்சிடிஸ் (Mercedes), பிஎம்டபிள்யூ (BMW) போன்ற விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கும் செல்வந்தர்களின் வாகனங்களையும் இந்த சோதனை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த ஆய்வுகள் யாவும், சமீபத்தில் கர்நாடகா அல்லாத மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட விலையுயர்ந்த ஃபெராரி (Ferrari) மற்றும் ஆடி (Audi) கார்களின் ஓனர்கள் வரி ஏய்ப்பு செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து பெங்களுரில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, பிற மாநில வாகனங்கள் 11 மாதங்களுக்கும் மேலாக ஒரு மாநிலத்தில் ஓட்டப்பட்டால், அந்த மாநிலத்தில் மறுபதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், கர்நாடகா அரசு கடந்த 2014ஆம் ஆண்டில் இதனை வெறும் 30 நாட்களாக குறைத்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 30 நாட்களை கூட மறுபதிவு செய்வதற்காக தான் கர்நாடக அரசு வழங்குகிறது. ஆக, கர்நாடகாவில் நுழைந்தாலே அவர்களது மாநிலத்தின் நம்பர் பிளேட்டை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அந்த மாநிலத்தின் நோக்கமாக உள்ளது. பெங்களூருவிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பிற மாநில வாகனங்களை கர்நாடக போலீசார் விரட்டி, விரட்டி பிடித்து அபராதம் விதித்து வருவதால், அங்கு வசிக்கும் பிற மாநிலத்தவர்கள் முடிந்தவரையில் உங்களது வாகனத்தை அங்கேயே மீண்டும் ஆர்டிஓ-இல் பதிவு செய்யுங்கள் அல்லது வாகனத்தை சொந்த மாநிலத்திற்கு கொண்டுவரவும்.


Click it and Unblock the Notifications









