இனி ரோட்ல திரும்பன பக்கமெல்லாம் டபுள் டெக்கர் பஸ்ஸா ஓடப்போகுது! இத்தன பஸ்களுக்கு ஆர்டர் குடுத்துருக்காங்களா!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களை போல், எலெக்ட்ரிக் வாகனங்களையும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. குறிப்பாக குக்கிராமங்களில் கூட நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்துள்ளனர். டூவீலர், கார் போன்ற தனிநபர் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையும் கூட இந்தியாவில் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது.
குறிப்பாக பெங்களூர் (Bangalore) மற்றும் மும்பை (Mumbai) போன்ற பெரு நகரங்களில் அதிகப்படியான எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த 2 நகரங்களிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மும்பை நகரில் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயரவுள்ளது. மும்பை நகரில் பெஸ்ட் (BEST) என சுருக்கமாக அழைக்கப்படும் Brihanmumbai Electric Supply and Transport நிறுவனம், பஸ் போக்குவரத்தை கையாண்டு வருகிறது. பெஸ்ட் நிறுவனத்திடம் தற்போதைய நிலையில் 2,911 பஸ்கள் உள்ளன.
இதில், எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 711 ஆகும். இந்த 711 எலெக்ட்ரிக் பஸ்களில் ஏசி டபுள் டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 50 ஆகும். அத்துடன் கூடுதலாக 150 எலெக்ட்ரிக் ஏசி டபுள் டெக்கர் பஸ்களை கொள்முதல் செய்யும் பணிகளை பெஸ்ட் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

இந்த 150 பஸ்களின் கொள்முதல் பணிகள் முடிந்த பிறகு, 1,000 எலெக்ட்ரிக் ஏசி டபுள் டெக்கர் பஸ்களை பெஸ்ட் நிறுவனம் சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. இவை பயன்பாட்டிற்கு வந்த பிறகு பெஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஏசி டபுள் டெக்கர் பஸ்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,200 ஆக உயரும்.
இவ்வாறு படிப்படியாக எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே சென்று, வரும் 2027ம் ஆண்டிற்குள், 100 சதவீதம் எலெக்ட்ரிக் பஸ்களை மட்டும் இயக்கும் நிறுவனமாக மாற பெஸ்ட் திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் 2027ம் ஆண்டிற்குள் பெஸ்ட் நிறுவனம் இயக்கும் அனைத்து பஸ்களும் எலெக்ட்ரிக் பஸ்களாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பெஸ்ட் நிறுவனத்தின் முடிவு உண்மையிலேயே மிகவும் வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் (Chennai) கூட, இன்னும் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடு சொல்லி கொள்ளும்படியாக இல்லை. இது சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னைக்கு வழிவகுக்கலாம்.
ஆனால் மும்பை நகரில் பெஸ்ட் நிறுவனம் முன்கூட்டியே திட்டமிட்டு, எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்திருப்பது, எதிர்காலத்தில் காற்று மாசுபாடு பிரச்னைகளை திறம்பட கையாள உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் எலெக்ட்ரிக் பஸ்கள் என்பதால், இயக்குவதற்கான செலவும் (Operating Cost) குறைவாக இருக்கும்.
இது பெஸ்ட் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் பெஸ்ட் நிறுவனம் டபுள் டெக்கர் பஸ்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் அதிக பயணிகளை ஏற்றி செல்ல முடியும். இது ஒரு வகையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைப்பதற்கு உதவி செய்யும்.


Click it and Unblock the Notifications








