இந்த ஒரு பழைய பாட்டை புது படத்துல வெச்சா அதுக்காகவே 100 நாள் ஓடும்! எப்படி இத்தன நாள் விட்டாங்கன்னே தெரியல!
மிகவும் பரபரப்பான ஒரு உலகில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அலுவலக பணி மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் என நிற்க கூட நேரம் இல்லாமல், கால்களில் சக்கரங்களை கட்டியதை போல், நாம் தொடர்ந்து ஓடி கொண்டே இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே ஒரு சில நாட்கள் விடுமுறை கிடைத்தால் கூட, வழக்கமான பணிகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, சாலை மார்க்கமாக ஒரு தொலை தூர பயணத்திற்கு பலரும் கிளம்பி விடுகின்றனர். இந்த பயணங்கள், உண்மையிலேயே நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன. நாம் தொடர்ந்து இயங்க தேவையான இளைப்பாறுதலையும் அவை நமக்கு வழங்குகின்றன.

சாலை மார்க்கமாக கார்களில் எங்கெல்லாம் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளலாம்? என்பது போன்ற செய்திகளை எல்லாம் கடந்த காலங்களிலேயே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. அப்படியானால் இந்த செய்தி எதற்காக? என நீங்கள் மனதில் நினைப்பது எங்களுக்கு புரிகிறது.
நீங்கள் ஏற்கனவே முடிவு செய்த தொலை தூர பயணத்தை மேலும் இனிமையாக்க இந்த செய்தி உதவி செய்யும். ஆம், சாலை மார்க்கமாக கார்களில் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போது, என்னென்ன பாடல்களை எல்லாம் நீங்கள் கேட்டு ரசிக்கலாம்? என்பதைதான் இந்த செய்தியில் கூறியுள்ளோம்.

உண்மையில் இந்த பட்டியலை உருவாக்குவது மிக கடினமானது. ஏனெனில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த இசையமைப்பாளர்கள் ஏராளமான பாடல்களை நமக்கு வாரி வழங்கியுள்ளனர். எதை சேர்ப்பது? எதை விடுவது? என்ற குழப்பமே எங்களுக்கு ஏற்பட்டு விட்டது. இருப்பினும் தொலை தூர பயணங்களுக்கான சிறந்த 10 பாடல்களை தேர்வு செய்து உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
பூங்காற்றே... பூங்காற்றே: யுவன் ஷங்கர் ராஜா இசையில் பையா படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பென்னி தயாள் பாடிய இந்த பாடல் இல்லாமல், தொலை தூர பயணங்கள் முழுமை பெறாது. உண்மையில் வழக்கமான நகர வாழ்க்கையின் பரபரப்புகளை மறந்து, நம்மை வேறு ஒரு உலகத்திற்குள் இந்த பாடல் அழைத்து சென்று விடும்.

யேலோ புல்லேலோ: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை பாடியவர் அனிருத். கவலைகளை மறப்பதற்காக தொலை தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டதை போல் இந்த பாடல் அமைந்துள்ளது. தொலை தூர பயணங்களின்போது இந்த பாடலை கேட்டால் மனதில் வரும் உற்சாகத்தை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அர்ஜூனரு வில்லு: கில்லி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். உண்மையில் தொலை தூர பயணங்களின்போது, அர்ஜூனரு வில்லு பாடலை கேட்டால், காரின் வேகத்தில் அனல் பறக்கும். எனவே இந்த பாடலை கேட்கும்போது சாலையில் கவனம் வைத்து கொண்டு காரை எச்சரிக்கையாக ஓட்டுங்கள்!
தி லைஃப் ஆஃப் ராம்: உண்மையில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, 96 திரைப்படத்தில் பயணங்களுக்கான ஒரு தேசிய கீதத்தையே உருவாக்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். பயணங்களை மேற்கொள்பவர்களின் ரீல்ஸ்களில் வாழாய் என் வாழ்வை வாழவே என்ற இந்த பாடல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
உனக்கென்ன வேணும் சொல்லு: ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், என்னை அறிந்தால் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இது. புது இடம் புது மேகம் தேடி போவேமே என இந்த பாடலில் வரும் வரிகள், உங்கள் கவலைகளை மறந்து, மனதை வருடி விடும்.
பளபளக்கற பகலா நீ: அயன் திரைப்படத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இடம்பெற்ற பாடல் இது. தொடர்ச்சியான அலுவலக பணிகளால் துவண்டு போயுள்ள உங்கள் மனதிற்கு, கண்டிப்பாக இந்த பாடல் புத்துணர்ச்சியை வழங்கும். குறிப்பாக இந்த பாடலின் வரிகள் இன்ட்ரோவெர்ட்களையும் கூட, சேட்டை செய்ய தூண்டும்.
தள்ளி போகாதே: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இது. ஏனோ வானிலை மாறுதே என்ற இந்த பாடலின் ஆரம்ப வரிகள், கண்டிப்பாக உங்கள் கவலைகளை எல்லாம் மறக்கடிக்க செய்து, புது உலகத்திற்குள் அழைத்து செல்லும்.
மஞ்சள் வெயில் மாலை இதே: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இது. தொலை தூர பயணங்களின்போது, இந்த பாடல் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல மனநிலையை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
நதியே நதியே: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரிதம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இது. எந்த சூழலில் இந்த பாடலை கேட்டாலும் கூட, மனம் பரபரப்புகளில் இருந்து விலகி சாந்தமடையும். குறிப்பாக தொலை தூர பயணங்களின்போது, உங்களை இந்த பாடல் உற்சாகமாக வைத்து கொள்ளும்.
ஏப்ரல் மேயிலே: இசைஞானி இளையராஜாவின் பாடல் இல்லாமல் இந்த செய்தியை முடிக்க முடியுமா என்ன? இதயம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். இந்த ஊரும் பிடிக்கல... உலகம் பிடிக்கல... போரு போருடா... என சலிப்பாக உணர்பவர்களை, இந்த பாடல் துள்ளலான மனநிலைக்கு கொண்டு வந்து விடும்.
தமிழ் சினிமாவில் பழைய பாடல்களை தற்போது வெளியாகும் புதிய திரைப்படங்களில் பயன்படுத்தும் 'டிரெண்ட்' வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள்தான் முக்கியமான காரணம். எதிர்காலத்தில் ஏப்ரல் மேயிலே பாடல் கண்டிப்பாக ஏதாவது ஒரு புதிய திரைப்படத்தில் இடம்பிடிக்கும் என நாம் நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தொலை தூர பயணங்களின்போது ரிலாக்ஸாக பாடல்களை கேட்கும் அதே நேரத்தில், காரை ஓட்டுவதிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்து கொள்கிறோம். மேற்கண்ட பாடல்கள் உடன் உங்கள் எதிர்கால பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications









