திடீர் திடீர்னு தீ பிடிக்குது! தயாரிச்சது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க! பஸ்ல ஏர்றதுக்கே ரொம்ப பயமா இருக்கு!
இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயக்கப்படும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே அவற்றுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் (CNG Vehicles) பயன்பாடு வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களும், சிஎன்ஜி வாகனங்களும் அவ்வப்போது தீப்பிடித்து எரியும் நிகழ்வு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையில் (Mumbai), சமீப காலமாக நடைபெற்று வரும் சம்பவங்கள் இதற்கு ஒரு உதாரணம். மும்பை நகரில், பெஸ்ட் நிறுவனம்தான் ( BEST - Brihanmumbai Electricity Supply And Transport) பயணிகளுக்கு பஸ் சேவையை வழங்கி வருகிறது.

பெஸ்ட் நிறுவனத்திடம் மொத்தம் 3,619 பஸ்கள் இருக்கின்றன. இதில், சிஎன்ஜி மூலம் இயங்கும் பஸ்களின் எண்ணிக்கை மட்டும் 2,927 ஆகும். அதே சமயம் 266 டீசல் பஸ்களையும், 426 எலெக்ட்ரிக் பஸ்களையும் பெஸ்ட் நிறுவனம் வைத்துள்ளது. இதில், சிஎன்ஜி பஸ்கள் (CNG Buses) தீப்பற்றி (Fire) எரியும் சம்பவங்கள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 25ம் தேதி ஒரு சிஎன்ஜி பஸ் தீப்பிடித்து எரிந்த நிலையில், பிப்ரவரி 11ம் தேதி இரண்டாவது சிஎன்ஜி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மூன்றாவதாக ஒரு சிஎன்ஜி பஸ் சமீபத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி (நேற்று முன் தினம்) நடைபெற்றுள்ளது. சிஎன்ஜி பஸ்கள் தொடர்ச்சியாக தீப்பிடித்து எரிவதால், தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து அபாயம் உள்ள 400 சிஎன்ஜி பஸ்களை மும்பை சாலைகளில் இருந்து பெஸ்ட் நிறுவனம் விலக்கியுள்ளது. எதிர்காலத்தில் தீ விபத்து சம்பவங்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்த பிறகுதான், இந்த பஸ்களின் சேவை மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ள 400 சிஎன்ஜி பஸ்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா? என்பது பரிசோதித்து பார்க்கப்படவுள்ளது. இதன்பின் எதிர்காலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான், இந்த பஸ்களின் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 400 சிஎன்ஜி பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதாவது பஸ்களுக்கு நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற பிரச்னைகளை அவர்கள் சந்திக்கலாம். ஆனால் பயணிகளின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசத்தையும் செய்து கொள்ள முடியாது என பெஸ்ட் நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த பிரச்னையை சமாளிப்பதற்காக ஓரளவிற்கு மாற்று ஏற்பாட்டை பெஸ்ட் நிறுவனம் செய்து விட்டது.
400 சிஎன்ஜி பஸ்களை திரும்ப பெற்றதன் காரணமாக பாதிப்புகளுக்கு உள்ளான வழித்தடங்களில் 297 பஸ்களை உடனடியாக சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக பெஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பஸ்கள், பயணிகளின் பிரச்னையை ஓரளவிற்கு ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பஸ்கள் தீப்பிடித்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள பலர் பொது போக்குவரத்திற்கு பதிலாக சொந்த வாகனங்களை பயன்படுத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தீப்பிடித்து எரிந்த 3 சிஎன்ஜி பஸ்களுமே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை ஆகும். பொதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் பாதுகாப்பிற்கு பெயர் பெற்றவை ஆகும். அதன் காரணமாகதான் வாடிக்கையாளர்கள் பலரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை நேசிக்கின்றனர். அப்படியிருக்கும்போது அந்த நிறுவனம் தயாரித்த சிஎன்ஜி பஸ்கள் அடிக்கடி தீப்பற்றி எரிவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








