மாநிலத்தின் முதல்வரே இப்படி நடந்துகிட்டா...!! பீகார் சிஎம் நிதிஷ்குமார் செய்யுற ஒவ்வொரு காரியமும் பக்கா மாஸ்!
எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles)-க்கான மார்க்கெட் மெல்ல மெல்ல வளர்ந்துவரும் நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் புதிய எலக்ட்ரிக் காரில் மாநில சட்டசபைக்கு வந்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அப்படி எந்த எலக்ட்ரிக் காரை வாங்கினார்? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மக்களிடையே அதிகரித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகுகின்றன. பெட்ரோல்/ டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதால் சில பல நன்மைகள் உள்ளன.

வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசு எலக்ட்ரிக் வாகனங்களினால் முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்பது அந்த நன்மைகளுள் முக்கியமானது. அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்காக எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் நம் இந்திய அரசு கடந்த பல வருடங்களாகவே முனைப்புடன் உள்ளது.
மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டுமெனில், அதற்கு முன் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இந்த நிலையில்தான், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் புதியதாக ஹூண்டாய் ஐயோனிக் 5 என்ற எலக்ட்ரிக்கை வாங்கி உள்ளார். மேலும், இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் காரில்தான் சமீபத்தில் கூட்டப்பட்ட பீகார் மாநில சட்டசபைக்கு நிதிஷ்குமார் வருகை தந்தார்.
ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரை ஓட்டுவதும், இந்த காரில் பயணம் செய்வதும் சவுகரியமானதாக உள்ளதாக நிதிஷ்குமாரின் டிரைவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த எலக்ட்ரிக் காரில் பயணிப்பது முதல்வர் நிதிஷ்குமாருக்கும் மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் விலை மிகவும் அதிகமும் கிடையாது, அதேநேரம் மிகவும் குறைவும் கிடையாது.
இந்தியாவில் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் விலை தற்சமயம் ரூ.46.05 லட்சமாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்சங்கள் அதிகமாக வரும். இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சம் என்னவென்றால், உலகின் அதிக ரேஞ்சை கொண்ட எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக இது விளங்குகிறது. ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 631கிமீ ஆகும்.
அதாவது, இந்த காரின் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 631கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 5 இருக்கைகளை கொண்ட எலக்ட்ரிக் காரான ஐயோனிக் 5-இல் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் காரில் 72.6kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 631கிமீ தொலைவிற்கு பயணம் செய்யலாம்.
இந்த காரில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 214.56 பிஎச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் காரை 350 கிலோவாட்ஸ் நேர்திசை மின்னோட்ட ஃபாஸ்ட் சார்ஜரில் வெறும் 18 நிமிடங்களில் 10% - 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும் என்கிறது ஹூண்டாய் நிறுவனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாநிலத்தின் முதலமைச்சர் எலக்ட்ரிக் காரை பயன்படுத்துவது, எலக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய அவரது ஆர்வத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. முதலமைச்சர் எலக்ட்ரிக் காரை பயன்படுத்தினால், இதனை பார்த்து மேலும் சில மாநில அமைச்சர்கள் எலக்ட்ரிக் காரை வாங்குவர். அத்துடன், எலக்ட்ரிக் காரை பயன்படுத்துவதில் இருக்கும் சில சார்ஜிங் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்வதால், மாநிலத்தில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுவர நிதிஷ்குமார் இன்னும் ஆர்வம் காட்டலாம்.


Click it and Unblock the Notifications








