நம்ம தமிழ்நாடு முதல்வருக்கும் இப்படியொரு கார் தேவை! கான்வேயில் மற்ற கார்களை பார்த்த பிறகுதான் உண்மை தெரிஞ்சுது
எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோர் குறித்த கிண்டல் பதிவுகளை பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். அதாவது, எலக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்த டீசல் ஜெனரேட்டர் மூலமாக சார்ஜை பெறுகிறீர்களே என நிறைய பேர் கிண்டலடிக்கின்றனர். இந்த நிலை சாதாரண மக்களுக்கு மட்டுமில்லை, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கூட அவ்வாறான கிண்டல் பதிவுகளை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. யார் அந்த மாநில முதலமைச்சர் என்பதையும், அவர் வைத்துள்ள எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டும் என்ன அதில் விதிவிலக்கா... நம் நாட்டில் எலக்ட்ரிக் கார் பயன்பாடு கொஞ்சம் மெதுவாகவே சூடுப்பிடித்து வருகிறது. இதனை வேகப்படுத்த மத்திய அரசாங்கமும், பல மாநில அரசாங்கங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக அரசாங்க அதிகாரிகள் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கேற்ப அரசாங்க அதிகாரிகளுக்கு எலக்ட்ரிக் கார்களை வாங்குவதில் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அரசாங்க அதிகாரிகள் மட்டுமின்றி, சில மாநிலங்களில் முதலமைச்சர் கூட எலக்ட்ரிக் காரை பயன்படுத்துகின்றனர். அவ்வாறான முதலமைச்சர்களும் ஒருவர்தான் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆவார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார் ஒன்று உள்ளது. மேலும், அதைதான் அவர் தனது அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார். தற்போது அந்த கார் நெட்டிசன்களின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி உள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், மஹிந்திரா ஸ்கார்பியோ உள்பட பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரில் வருகிறார்.

அதாவது, எலக்ட்ரிக் காருக்கு பாதுகாப்பு கொடுக்க டீசல் கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலிலும், நிதிஷ் குமாரின் பாதுகாப்பு படையில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் அனைத்தும் பழைய பிஎஸ்4 மாடல்கள் போல் தெரிகிறது. முதலமைச்சர் தனது பயன்பாட்டிற்கு மட்டும் மாடர்னான எலக்ட்ரிக் காரை வைத்துக்கொண்டு, பாதுகாப்புக்கு டீசல் கார்களை பயன்படுத்துகிறாரா என எக்ஸ் தளத்தில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, ரத்தன் தில்லோன் என்பவர், "திரு. நிதிஷ் குமார், உங்கள் முழு வாகன கான்வேயும் பிஎஸ்4 டீசல் வாகனங்களை கொண்டிருக்கும் போது மின்சார காரை பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார். எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமே அவை பூஜ்ஜிய மாசு உமிழ்வை வழங்கக்கூடியவை என்பதினால் ஆகும்.
ஆனால், நீங்கள் ஒருவர் மட்டும் எலக்ட்ரிக் காரை வைத்துக்கொண்டு, உங்களது பாதுகாப்பு வாகனங்களை டீசல் கார்களாக கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில், உங்களது எலக்ட்ரிக் கார் வழங்காத கார்பன் மாசு உமிழ்வை மற்ற டீசல் கார்கள் வழங்கிவிடும். போதாக்குறைக்கு அவை பழைய பிஎஸ்4 கார்களாக உள்ளன. தற்போதைய பிஎஸ்6 வாகனங்களை காட்டிலும், பிஎஸ்4 வாகனங்களில் இருந்து மாசு உமிழ்வானது இன்னும் அதிகமாகவே இருக்கும்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காருக்கு இந்த 2024ஆம் ஆண்டு துவக்கத்தில் மாறினார். எலக்ட்ரிக் வாகனங்களில் வழங்கப்படும் கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தின் காரணமாக நிதிஷ் குமாருக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் மீது தனி ஆர்வம் உள்ளது. இதற்கு முன்னர் பீகார் முதலமைச்சர் அம்பாசிடார் மற்றும் டாடா சஃபாரி கார்களில் சென்று கொண்டிருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பீகார் முதலமைச்சரை போன்று எல்லா மாநில முதல்வர்களும் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த முன்வர வேண்டும். ஏனெனில், மாநிலத்தின் முதலமைச்சர் பின்பற்றினால்தான் அதனை பார்த்து அம்மாநில மக்களும் பின்பற்றுவர். ஆனால், பீகார் சிஎம் நிதிஷ் குமாரை போல் இல்லாமல், தனது கான்வேயில் உள்ள அனைத்து கார்களையும் எலக்ட்ரிக் கார்களாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









