பீகார் இரயில் விபத்துக்கு இதுதான் காரணமா இருக்கும் என்று நினைத்தே பார்க்கல!! இனியாவது அலார்ட் ஆவோமா?
பீகாரில் நேற்றிரவு அரங்கேறிய இரயில் விபத்துக்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கலாம் என போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் அவை தான் காரணமா என்பதையும், இந்த இரயில் விபத்தை பற்றியும் இனி முழுமையாக பார்க்கலாம்.
இந்திய வடகிழக்கு இரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட டெல்லி- காமாக்யா விரைவு இரயில் பீகாரில் நேற்றிரவு 9.53 மணி அளவில் தடம் புரண்டு, விபத்திற்கு உள்ளாகியுள்ளது. 23 பெட்டிகளை கொண்ட வடகிழக்கு விரைவு இரயில் எண் 12506 கடந்த அக்டோபர் 11ஆம் தேதி காலை 7.40 மணியளவில் டெல்லியின் ஆனந்த் விஹாரில் இருந்து புறப்பட்டது.

கிட்டத்தட்ட 33 மணிநேர பயணத்திற்கு பிறகு அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா என்ற பகுதியை சென்றவடைவது இந்த விரைவு இரயிலின் பயண திட்டம். உத்திர பிரதேசம் என்ற முழு மாநிலத்தையும் கடந்து, 14 மணிநேர பயணத்திற்கு பிறகு பீகார் மாநிலத்தில் சென்றுக் கொண்டிருக்கையில் இரயில் இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் உள்ள ராகுநாத்புர் இரயில் நிலையத்திற்கு அருகே இரயில் சென்றுக் கொண்டிருந்த போது, இரயிலின் கடைசி பெட்டிகளில் வழக்கத்தை காட்டிலும் மிக அதிக உணர்வுகளை ஓட்டுனர் உணர்ந்துள்ளார். அதன்பின், இரயிலின் பின் பெட்டிகள் முதலாவதாக தண்டவாளத்தில் இருந்து தடம்புரள ஆரம்பித்துள்ளன. இந்த அதிர்வில், இரயிலின் மற்ற பெட்டிகளும் தடம் புரண்டன.

இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறைந்தது 70 பேர் காயப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரயில்வே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் முதற்கட்டமாக, இந்த விபத்து தண்டவாளத்தில் இருந்த பிரச்சனையினால் ஏற்பட்டிருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். விபத்தின்போது இரயிலை ஓட்டிய ஓட்டுனரும் இதைதான் கூறுகிறார்.
குறிப்பாக, இரயில் நிலைய பகுதியை கடந்த பின்பே அந்த அதிர்வுகளை உணர்ந்ததாக இரயில் ஓட்டுனர் தெரிவித்துள்ளார். ஆதலால், இந்த இரயில் விபத்துக்கு பழுதான தண்டவாளம் தான் பிரச்சனை என்கிற கோணத்தில் அடுத்தடுத்த விசாரணைகளை மேற்கொள்ள போலீஸார் துவங்கியுள்ளனர். "ஈடு செய்ய முடியாத இழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இரயில் தடம் புரண்டதற்கான மூல காரணத்தை கண்டுப்பிடிப்பார்கள்" என மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், மீட்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன மற்றும் அனைத்து பெட்டிகளிலும் செக் செய்யப்பட்டன எனவும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்த விபத்தில், இரயிலின் இரு ஏசி-3 டயர் பெட்டிகள் கவிழ்ந்துள்ளன. அதேபோல், இந்த விபத்து குறித்து வெளியாகியுள்ள படங்களிலும், வீடியோக்களிலும் மேலும் 4 மற்ற பெட்டிகள் கவிழ்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில மாதங்களுக்கு முன்னர் தான் ஒடிசாவில் கோர இரயில் விபத்து நடந்தது. அதில் இருந்து நாம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், தற்போது மற்றொரு இரயில் விபத்து நடந்துள்ளது. இந்தியா போன்ற மிக பெரிய நாட்டில் இரயில் தண்டவாளங்களை எப்போதும் முறையாக பராமரிப்பது மிக சிரமமான காரியம் தான். ஆனால் வேறு வழியில்லை, அவ்வப்போது அவற்றை முறையாக பராமரித்துதான் ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications









