ஸ்கூல் பிள்ளைகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.. நல்ல மனசுடன் பீகார் மெக்கானிக் தயாரித்த விலை குறைவான இ-சைக்கிள்!
பீகாரைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் மலிவு விலையில் எலெக்ட்ரிக் சைக்கிளை உருவாக்கி அசத்தி இருக்கின்றார். இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விலை குறைவாக சில வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் மின்சார வாகனங்களை விற்பனைக்கு களமிறக்கினாலும், பலரால் அதை நுகர முடியாத சூழலே நிலவுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டே பீகாரைச் சேர்ந்த மெக்கானிக் தற்போது மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் சைக்கிளை தயார் செய்துள்ளார். தன்னுடைய இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் கிராமப்புறத்தில் பள்ளி மாணவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என அவர் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
பீகாரின் சர்போக்ஹரி பிளாக்-இல் உள்ள பசூர் கிராமத்தில் வசித்து வருபவர் மேனோடோஷ் ஷர்மா. வெல்டிங் தொழிலில் இவர் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையிலேயே ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கில் அவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு வேலையில் ஈட தொடங்கி இருக்கின்றார்.

பேட்டரியில் இயங்கும் மிதிவண்டியை உருவாக்கும் பணியிலேயே அவர் களமிறங்கியிருக்கின்றார். இந்த பணியிலேயே அவர் தற்போது வெற்றியையும் கண்டிருக்கின்றார். ஆமாங்க, அந்த விலை குறைவான மின்சாரத்தில் இயங்கும் மிதிவண்டியை அவர் தற்போது தயார் செய்துவிட்டார். தன்னுடைய கிராமத்திலும், பிற கிராமத்திலும் போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்து வந்த நிலையிலேயே இந்த வாகனத்தை அவர் தயார் செய்திருக்கின்றார்.
முழுக்க தன்னுடைய கை வண்ணத்திலேயே அவர் இந்த இ-சைக்கிளை தயார் செய்திருக்கின்றார். அதாவது இதன் ஃப்ரேமை முழுக்க வழக்கமான மிதிவண்டியை பிரதிபலிக்கும் வகையில் மேனோடோஷ் ஷர்மா-வாகவே தயார் செய்துள்ளார். தொடர்ந்து, பேட்டரி, மோட்டார் ஆகியவற்றையும் அவர் இந்த வாகனத்தில் பொருத்தி இருக்கின்றார்.
இதில் மணிக்கு 35 கிமீ வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் மோட்டாரையே மேனோடோஷ் ஷர்மா பயன்படுத்தி இருக்கின்றார். இவருடைய இந்த தயாரிப்புக்கு தற்போது கிராம மக்கள் மத்தியிலும், உள்ளூர் அதிகாரிகள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. விரைவில் இது சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரூ. 22 ஆயிரத்திற்கும் குறைவான விலையிலேயே இந்த வாகனத்தை அவர் தயார் செய்திருக்கின்றார். இதன் உற்பத்தி மிகப் பெரிய அளவில் தொடங்கப்படும்பட்சத்தில் இந்த விலை இன்னும் பலமடங்காகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹாரன், இன்டிகேட்டர், பேட்டரி, மோட்டார் மற்றும் ஆக்சலரேட்டர் உள்ளிட்ட முக்கிய பாகங்களை பயன்படுத்தியதன் விளைவாகவே இதன் விலை சற்று அதிகமாக ஆகியிருப்பதாக அவர் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
தொடர்ந்து, இந்த வாகனத்தை சார்ஜ் செய்துக்கொள்ள ஏதுவாக பேட்டரி மற்றும் சார்ஜர் ஆகியவற்றையும் அவர் தயார் செய்திருக்கின்றார். இதுபோன்ற அம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் மிதிவண்டிகள் இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி ரூ. 50 ஆயிரம் தொடங்கி ரூ. 60 ஆயிரம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதைவிட பலமடங்கு குறைவான விலையைக் கொண்டதாகவே தற்போது மேனோடோஷ் ஷர்மா தன்னுடைய இ-சைக்கிளை தயார் செய்திருக்கின்றார். இதில் ஓர் முழு சார்ஜில் 45 கிமீ முதல் 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதிக வேகத்தைக் கன்ட்ரோல் செய்யும் விதமாக இந்த எலெக்ட்ரிக் மிதிவண்டியில் சிறப்பான பிரேக்கிங் சிஸ்டத்தையே அவர் பயன்படுத்தி இருப்பதாக தெரிகின்றது. ஆகையால், பாதுகாப்பான ரைடையே இந்த இ-சைக்கிள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மணிக்கு 35 கிமீ வேகம், ஃபுல் சார்ஜில் 50 கிமீ பயணம் என்பது ஓர் பிரீமியம் தர இ-சைக்கிளுக்கான திறன் ஆகும். இத்தகைய ஓர் எலெக்ட்ரிக் சைக்கிளையே பீகாரைச் சேர்ந்த வெல்டிங் மெக்கானிக் தற்போது தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்காக தயார் செய்திருக்கின்றார். விரைவிலேயே இது பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








