பல்சர் பைக்குக்கு உண்டான மரியாதை போச்சே!! போலீஸ் கொஞ்சம் இவரை கவனிக்கணும்!
"என்ன இது விசித்திரமாக இருக்கே" என்பது போல், பஜாஜ் பல்சர் பைக்குடன் ஒருவர் டிராக்டரை பொருத்தி வித்தியாசமான செயலில் ஈடுப்பட்டுள்ளார். பார்ப்பதற்கு பயங்கரமாக, உள்ளூர் கிராமவாசிகளை மட்டுமின்றி, இணையத்திலும் பலத்தரப்பட்ட மக்களை இந்த மாடிஃபை பைக் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்தியாவில் மக்கள் பலர் வாங்கும் பைக்குகளுள் ஒன்றாக பஜாஜ் பல்சரை சொல்லலாம். ஒவ்வொரு மாதத்திலும் 80 ஆயிரத்தில் இருந்து 1 இலட்ச பல்சர் பைக்குகள் சர்வ சாதாரணமாக விற்பனையாகுகின்றன. பல்சர் பைக்குகள் 125சிசி-இல் இருந்து 250சிசி வரையில், பல்வேறு ஸ்டைல்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் மூலமாக தமிழ் மக்களிடையே பல்சர் பைக்குகள் பிரபலமாகின. அதேபோன்று, மற்ற மாநிலங்களிலும், ஏதோ ஒரு காரணத்தினால், பல்சர் பைக்குகள் அந்த பகுதிகளை கவர்ந்துவிட்டன. தான் வைத்திருக்கும் பல்சர் பைக்கை உயிர் போல் பாதுகாப்போரும் நம்மில் இருக்கின்றனர். ஆனால், இங்கு ஒருவர் டிராக்டர் டயரை பல்சர் பைக்கில் பொருத்துவார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
டிராக்டர் டயர் இந்த பல்சர் பைக்கின் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப, பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகளையும் பிரத்யேகமாக உருவாக்கி பொருத்தியுள்ளனர். இந்த மாடிஃபை பைக் குறித்த படங்கள் மிஸ்டர்.ஹைஃபை என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு இதுவரையில் இன்ஸ்டாகிராமில் 2.94 லட்ச லைக்குகள் கிடைத்துள்ளன.

பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கும் இந்த பைக்கை நிச்சயமாக தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது. ஏனெனில், இந்தியாவில் இவ்வாறான மாடிஃபிகேஷன்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த பைக்கை நகர் பகுதிகளுக்கு கொண்டு சென்றாலே போலீஸார் உங்களை பிடித்துவிடுவர். போலீஸார் பார்க்கவில்லை என்றாலும், மற்ற வாகன ஓட்டிகள் உங்களை பிடித்துக் கொடுத்துவிடுவர்.
ஏனெனில், பயங்கரமான தோற்றத்தில் இருப்பது மட்டுமின்றி, இந்த மாடிஃபை பைக் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. முதலில், இந்த மாடிஃபை பைக்கை ஓட்டுவதற்கு உங்களுக்கு ஓர் தனி ரைடிங் திறன் இருக்க வேண்டும். பைக்கிற்கு பின்னால் இருந்தால் கூட பிரச்சனையில்லை. ஆனால், முன்பக்கத்தில் டிராக்டர் டயர் இருப்பதால், அவ்வளவு பெரிய டயரை திருப்புவது என்பது உண்மையில் சிரமமான காரியம் ஆகும்.

அத்துடன், இத்தகைய பைக்குகள் பெட்ரோலை நன்றாக, அதிகளவில் குடிக்கும். ஏனெனில், ஓர் பைக்கின் மைலேஜை நிர்ணயிப்பதில் பைக்கின் டயர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வளவு பெரிய டயரை சுழற்ற என்ஜின் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இது, அதிக பெட்ரோல் உறிஞ்சப்படுவதற்கு காரணமாக அமைகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்ட குறைகள் இருந்த போதிலும், இந்த பைக் பார்ப்பதற்கு அட்டகாசமானதாக உள்ளது. அத்துடன், எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்ல ஏற்றதுபோல் தெரிகிறது. இருப்பினும், இத்தகைய மாடிஃபிகேஷனை யாரும் மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில், இது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமின்றி, சில நேரங்களில் உங்களது உயிருக்கும் ஆபத்தாக முடிந்துவிடும்.


Click it and Unblock the Notifications









