எத்தனை நாள் கோபமோ... லாரி டிரைவர் கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல! பதைபதைக்க வைக்கும் வீடியோ
டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache), இந்தியாவின் பிரபலமான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று. வேகமாக இயங்கக்கூடிய பைக்குகளாக அப்பாச்சி பைக்குகள் விளங்குவதால், இந்த பைக்குகளை வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வகையில், அப்பாச்சி பைக்கை வாங்கி பயன்படுத்தி வந்த இளைஞர் ஒருவர் அதில் நடுரோட்டில் சாகசத்தில் ஈடுப்பட்ட போது தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது அருகில் சென்ற லாரியின் சக்கரத்துக்கு மிக நெருக்கமாக அந்த இளைஞர் விழும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
சாலை எல்லாருக்கும் சொந்தமானது என்கிற வாக்கியத்தை அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் கூறி வருகிறோம். இருப்பினும், மொத்த சாலையும் தனது தனிப்பட்ட சொத்து என்பதுபோல ஒரு சிலர் ஆக்ரோஷமாக, சாகசம் செய்த வண்ணம் வாகனம் ஓட்டுகின்றனர். இதனாலேயே பெரும்பாலான சாலைகள் விபத்துகள் நடக்கின்றன.

அந்த வரிசையில், பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில் நடந்துள்ள இந்த விபத்து ஆனது இளைஞர் ஒருவர் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் (RTR) பைக்கில் சாகசம் செய்ய முயற்சித்த போது நடந்துள்ளது. இத்தனைக்கும், லாரி மிக அருகில் சென்ற போது இந்த பைக் சாகசத்தை அவர் முயற்சித்து இருப்பது பார்ப்போரை பதற வைத்துள்ளது.
பைக் ரைடர்கள் சிலர் குழுவாக தங்களது விலையுயர்ந்த பைக்குகளில் ஒரு நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அவர்களுள் இந்த விபத்தில் சிக்கிய நபரும் ஒருவராவார். பொதுவாகவே, இவ்வாறு மோட்டார்சைக்கிள்களில் குழுவாக செல்லும்போது அவர்களுக்கு அருகில் செல்லவே கொஞ்சம் பயமாக இருக்கும். அந்த அளவிற்கு ஆக்ரோஷமாக பைக்குகளை ஓட்டியவாறு செல்வதை பார்க்க முடியும்.

அந்த குழுவில் யார் எப்போது பைக் ஸ்டண்ட்டில் ஈடுப்பட முயற்சிப்பர் என்பதே யூகிக்க முடியாது என்பதால், அவ்வப்போது நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் கார் & பைக் ஓட்டிகள் அவ்வாறான பைக் குழுவினரை கண்டாலே, முடிந்தவரையில் அவர்களுக்கு அருகாமையில் செல்ல முயற்சிக்க மாட்டார்கள். ஆனால், லாரி டிரைவர்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டார்கள்.
இந்த சம்பவத்தில், பைக் ஸ்டண்டில் ஈடுப்பட்ட சம்பந்தப்பட்ட இளைஞரை வேண்டுமென்றே லாரி டிரைவர் இடித்து கீழே தள்ளியதுபோல் வீடியோவில் தெரிகிறது. ஆம்... பைக் ரைடர் பேலன்ஸ் தவறி தானாக கீழே விழவில்லை. இத்தனைக்கும் சாலையின் ஓரமாகவே இந்த பைக் ரைடர் சென்றுள்ளார்.

இந்த பைக் ரைடர் குழுவில், மற்ற ரைடர்கள் ஓரளவிற்கு நிதானமாக பைக் ஓட்டினாலும், விபத்தில் சிக்கிய இந்த குறிப்பிட்ட பைக் ரைடர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே லாரிகளுக்கு இடையில் புகுந்து வருவது, ஹேண்டில்பாரை விட்டு பைக் ஓட்டுவது, பயணத்தின்போது பைக்கிற்கு கீழே குனிவது, வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டும், பேசி கொண்டும் பயணம் செய்வது என வெறும் 10 நிமிட வீடியோவிற்குள்ளாக பல்வேறு சாகசங்களை நிகழ்த்துகிறார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதே இளைஞர் கேமரா மட்டும் இல்லையென்றால், இத்தனை சாகசங்களை செய்து இருப்பாரா என்பது சந்தேகமே. ஆக, சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் இந்த வகையில் பாதகமாக அமைகிறது. நடுரோட்டில் பைக்கின் மீது ஏறி நின்று சாகசம் செய்தது பைக் ரைடரின் தவறு என்றால், அவரை வேண்டுமென்றே இடித்தது லாரி டிரைவரின் தவறு ஆகும்.


Click it and Unblock the Notifications









