இப்படிப்பட்ட காரில் பெரும் பணக்காரர் பில் கேட்ஸா... செம்ம தைரியமான மனுஷன் - லண்டனில் நடந்துள்ள சம்பவம்!!
உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் லண்டனில் செல்ஃப்-டிரைவிங் காரில் பயணம் செய்து புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளார். பில் கேட்ஸின் இந்த பயணத்திற்கான காரணம் என்ன? என்பது உள்பட முக்கிய விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
மனிதன் எலக்ட்ரிக் கார்களை தாண்டி, செல்ஃப்-டிரைவிங் கார்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். ஓட்டுனர் இன்றி, தன்னுள் செயல்படுத்தப்பட்ட பிரோகிராமின் அடிப்படையில் தன்னிச்சையாக இயங்கக்கூடியவையே செல்ஃப்-டிரைவிங் கார்கள் ஆகும். இத்தகைய கார்கள் இயங்குவதற்கு அடாஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும், தெளிவான சாலை வரைப்படமும் தான் முக்கியமான தேவைகளாகும். செல்ஃப்-டிரைவிங் கார்கள் தற்சமயம் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளன.

இன்னும் சொல்லப்போனால், நம் நாட்டில் இத்தகைய கார் ஒன்றை கூட சாலையில் பார்க்க இயலாது. ஆனால் பொருளாதாரத்தில் வளர்ந்த அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் செல்ஃப்-டிரைவிங் கார்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட தற்போதைய சூழலில்தான் உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸ் லண்டனில் தன்னிச்சையாக இயங்கக்கூடிய செல்ஃப்-டிரைவிங் கார் ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
இந்த தானியங்கி காரை லண்டனை சேர்ந்த வேவ் (Wayve) என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடிக்கும் நிறுவனம் உருவாக்கி உள்ளது. வேவ் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான அலெக்ஸ் கெண்டல் மற்றும் அவசரகால பாதுகாப்புக்கான ஆப்ரேட்டர் ஒருவருடன் பில் கேட்ஸ் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வை காட்சிப்படுத்தி தனது அதிகாரப்பூர்வ யுட்யூப் சேனலிலும் பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.
பில் கேட்ஸ் பயணம் செய்த இந்த செல்ஃப்-டிரைவிங் கார் ஆனது இன்னமும் மேம்பாட்டு பணிகளில்தான் உள்ளதாம். அதாவது காரின் வடிவமைப்பு இன்னும் முழுமை அடையவில்லை. உலகளவில் வாகனங்களை இயக்குவதற்கு சவாலான போக்குவரத்து சூழலை கொண்ட நகரங்களுள் லண்டனும் ஒன்றாகும். அத்தகைய நகரத்திலும் செல்ஃப்-டிரைவிங் காரை இயக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை கூறும் விதமாக பில்கேட்ஸின் இந்த பயணம் அமைந்துள்ளது.
கணினிகளை தொடர்ந்து, தன்னிச்சையாக இயங்கக்கூடிய வாகனங்கள் எதிர்காலத்தில் முக்கிய கேம்-சேஞ்சராக விளங்கும் என்பதை மற்ற ஆட்டோமொபைல் வல்லூநர்களை போன்று ஒப்புக் கொண்டுள்ள பில் கேட்ஸ், அடுத்த 10 வருடங்களில் செல்ஃப்-டிரைவிங்கிற்கான தொழிற்நுட்பத்தில் வேவ் நிறுவனம் முதன்மையானதாக விளங்கும் என நம்பிக்கை கொண்டுள்ளார். வேவ் நிறுவனத்தின் தானியங்கி வாகனம் குறித்து, கருத்து தெரிவித்த பில் கேட்ஸ், இந்த வாகனம் மனிதர்களை போன்று செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஆழமான கற்றல் தொழிற்நுட்பத்தை கொண்ட இந்த வேவ் தானியங்கி வாகனம் ரியல்-டைமில் தனது பதிலை பயணிகளுக்கு வழங்குகிறது. மற்ற பெரும்பாலான செல்ஃப்-டிரைவிங் கார்களில் செல்ல வேண்டிய இடத்தை ஏற்கனவே ப்ரீ-அப்லோட் செய்ய வேண்டும். ஆனால், வேவ் நிறுவனத்தின் தானியங்கி வாகனம் ஆனது பயண சூழலில் ஒவ்வொரு வினாடியையும் அந்தந்த நேரத்தில் எதிர்கொள்கிறது. லண்டனின் வேவ் நிறுவனத்துடன் பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
எலக்ட்ரிக் வாகனங்கள், அதன்பின் செல்ஃப்-டிரைவிங் வாகனங்கள் தான் நமது எதிர்காலம் என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். தற்போது இந்த ஸ்டேட்மெண்ட் உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான பில் கேட்ஸிடம் இருந்தே வெளிவந்துள்ளது. தனது மைக்ரோசாஃப்ட் உடன் கூட்டணியில் உள்ளதினால் இவ்வாறு வேவ் நிறுவனத்தை பில் கேட்ஸ் புகழ்ந்து பேசுகிறார் என்றாலும், எதிர்காலத்தில் செல்ஃப்-டிரைவிங்கிற்கான தொழிற்நுட்பத்தை உருவாக்குவதில் இந்த நிறுவனம் முன்னிலை வகித்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications








