விபத்தில் சிக்கிய கார்... உள்ளே இருந்தது அவரா! தேர்தல் நேரத்தில் நடந்த திடீர் சம்பவத்தால் பெரும் பரபரப்பு!
இந்தியாவில் சாலை விபத்து (Road Accident) என்பது தற்போதெல்லாம் சர்வ சாதாரணமான ஒரு நிகழ்வாக மாறி விட்டது. சாமானிய மக்கள் மட்டுமல்லாது, அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை உலக நட்சத்திரங்கள் என பிரபலமான மனிதர்களும் சாலை விபத்துக்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) சாலை விபத்தில் சிக்கிய சம்பவம் இந்தியாவில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிஷப் பண்ட் தற்போது காயத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். இந்த சூழலில் முன்னாள் முதல்வர் ஒருவர் தற்போது கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் குறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

திரிபுரா மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்தவர் பிப்லப் குமார் தேவ் (Biplab Kumar Deb). இவர் பாரதிய ஜனதா கட்சியை (BJP - Bhartiya Janata Party) சேர்ந்தவர். பிப்லப் குமார் தேவ் நேற்று (பிப்ரவரி 20) டெல்லியில் இருந்து சண்டிகர் நோக்கி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பயணம் செய்தது மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) கார் ஆகும். வழியில் டயர் பஞ்சர் ஆன காரணத்தால் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த பிப்லப் குமார் தேவின் கார் எதிர்பாராதவிதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஞ்சர் ஆன கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக பிப்லப் குமார் தேவும், அவருடன் வந்தவர்களும் இந்த விபத்தில் பெரிதாக காயமின்றி தப்பித்து விட்டனர். அதேபோல் பஞ்சர் ஆன காரில் வந்தவர்களுக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமல்கா மற்றும் பானிபட் ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. எனினும் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும். ஆனால் சிறிய அலட்சியத்தால் இந்த விபத்து நடைபெற்று விட்டதாக கூறப்படுகிறது. அனேகமாக பிப்லப் குமார் தேவ் பயணம் செய்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில், அடாஸ் (ADAS - Advanced Driving Assistance Systems) வசதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த வசதி ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கார் ஓட்டும்போது அடாஸ் வசதியின் குறுக்கீட்டை பலரும் விரும்புவதில்லை. எனவே அதனை பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றனர். ஆனால் அடாஸ் வசதி பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். ஏனெனில் அடாஸ் தொழில்நுட்பமானது, முன்னால் நின்று கொண்டிருந்த காரை கண்டறிந்து, தானியங்கி எமர்ஜென்ஸி பிரேக்கை அப்ளை செய்திருக்கும். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் பழுது உள்ளிட்ட காரணங்களால் வாகனங்களை நிறுத்தினால், அதை மற்ற வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை மூலம் தெரிவிப்பதும் அவசியம்.
அப்போதுதான் அவர்கள் கவனமாக வாகனத்தை ஓட்ட முடியும். இதுபோன்ற எளிமையான விஷயங்களை பின்பற்றினாலோ இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை ஓரளவிற்கு குறைக்க முடியும். நல்ல வேளையாக இந்த விபத்தில் 2 கார்களுக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும்.
ஏனெனில் குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. இது இந்தியாவிற்கு பெருமையான ஒரு விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்திருப்பதற்கு, இந்த 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
திரிபுரா மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் (Tripura Assembly Elections 2023) நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதிதான் அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழலில்தான் பிப்லப் குமார் தேவ் பயணம் செய்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் விபத்தில் சிக்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








