கோவை ஏர்போர்டில் இப்படியொரு பிரச்சனை அடிக்கடி நடக்கிறதா!! டேக்-ஆஃப் ஆகும் முன் திடீரென நிறுத்தப்பட்ட விமானம்..
தரையில் போகும் வாகனங்களிலேயே பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும்போது, வானில் பறக்கும் வாகனங்களில் நடக்கும் விஷயங்களுக்கு பஞ்சமே இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி தான் சில மாதங்களுக்கு முன்னர் கூட லடாக் விமான நிலையத்தில் டேக்-ஆஃப் இன் போது நாய் குறுக்கே வந்ததால் விமானத்தின் டேக்-ஆஃப் தாமதமானது. அதனை பற்றி நமது செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம்.
அதாவது நூற்றுக்கணக்கானோரின் பயணம் வெறும் ஒரு நாயினால் சில மணிநேரங்களுக்கு தாமதமானது. அதேபோன்று தான் ஒரு சம்பவம் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த ஜனவரி 2ஆம் தேதி ஏர் அரேபியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி புறப்பட தயாரானது. விமானம் டேக்-ஆஃப் ஆகுவதற்கு முன்னர் ரன்வே-இல் சென்று கொண்டிருந்த இரு கழுகு பறவைகள் விமானத்தின் இடதுப்பக்க என்ஜினில் சிக்கியுள்ளன.

இதன் காரணமாக விமானத்தின் இயக்கம் உடனடியாக நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது விமானத்திற்குள் மொத்தம் 164 பயணிகள் இருந்துள்ளனர். விமான என்ஜினின் பிளேடில் சிக்கிய இரு கழுகுகளில் ஒன்று அப்போதே இறந்துள்ளது. மலைத்தொடர்கள் அதிகம் உள்ள நமது தமிழக மாவட்டமான கோயம்புத்தூரில் விமானங்களில் பறவைகள் சிக்குவது அவ்வப்போது நடைபெறக்கூடிய ஒன்று தான். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிலேயே பறவை மோதல் அதிகம் நடைபெறும் விமான நிலையமாக கோயம்புத்தூர் விமான நிலையம் அறியப்படுகிறது.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து டேக்-ஆஃப் ஆகும் விமானங்களில் மாதத்திற்கு 3 பறவைகள் சிக்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பறவை விமானத்தில் சிக்கியதால் விமானம் அப்போதே நிறுத்தப்பட்டு, அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு வேறெதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளனவா என கடந்த ஜனவரி 2ஆம் தேதி சம்பவத்தின்போது தான் முதல்முறையாக சரிப்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 7 ஆண்டுகளிலேயே இவ்வாறான சம்பவம் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ஏற்பட்டது கிடையாது என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனாலேயே இந்த நிகழ்வால் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சற்று நேரத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இந்த சம்பவம் குறித்து கோயம்புத்தூர் விமான நிலைய இயக்குனர் எஸ் செந்தில் வலவன் பின்னர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பறவை இடையூறுகளை கட்டுப்படுத்த பறவை பராமரிப்பு துப்பாக்கிகளை பயன்படுத்துதல், பறவைகளை துரத்துபவர்களை பயன்படுத்துதல் மற்றும் தாவர வளர்ச்சியை கட்டுப்படுத்த களைக்கொல்லிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பறவைகள் பொதுவாக இனப்பெருக்கம் செய்யும் இடமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு புல்லின் உயரம் குறைந்தப்பட்ச மட்டத்திற்கு தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது என கூறினார். மர, செடிகள் இல்லாவிடினும் சில பறவைகள் குப்பைகளிலும் கூடுக்கட்ட கூடும் மற்றும் உணவிற்காக தேடிவர கூடும். இதனாலேயே கோயம்புத்தூர் விமான நிலையம் மட்டுமின்றி, எந்தவொரு விமான நிலையத்தை சுற்றிலும் குறிப்பிட்ட கிமீ தொலைவிற்கு குப்பைகளை கொண்ட முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது.
இருப்பினும் கோயம்புத்தூர் விமான நிலையத்தை பொறுத்தவரையில், மலைகளும், அடர்ந்த காடு போன்றதான பகுதிகளும் அதிகம் இருப்பதால் பறவைகள் விமான நிலையத்திற்கு வருவதை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அதற்கான ஆய்வுகளில் ஈடுப்பட உள்ளதாகவும் கோயம்புத்தூர் விமான நிலைய அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விமானங்களில் விளக்குகளும், வானிலையை அறிய பயன்படுத்தும் ரேடார்களுமே பறவைகளை விமானத்திற்கு எதிராக வரவிடாமல் எச்சரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
இருப்பினும் சில சமயங்களில், தற்போது கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ஏற்பட்டிருப்பது போல் விமானங்களின் இயக்கத்திற்கு இடையூறாக பறவைகள் நுழைந்துவிடுகின்றன. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி நடந்துள்ள இந்த பறவைகள் மோதலால் சம்மந்தப்பட்ட ஏர் அரேபியா விமான பயணம் ரத்து செய்யப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏர் அரேபியா விமானம் ஜனவரி 2ஆம் தேதி காலை 7:17 மணியளவில் கோயம்புத்தூரில் இருந்து சார்ஜாவிற்கு செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications