காசு இருக்கற அசால்ட்டு! 4 கோடி ரூபாய் காரை சுக்குநூறாக்கியது அவரா! அம்மாக்கும், பையனுக்கும் இதே வேலையா போச்சு!
இந்தியாவில் சூப்பர் கார்களை வைத்துள்ள ஒரு சிலருக்கு, அதனை எப்படி ஓட்ட வேண்டும்? என்பது தெரிவதில்லை. பணம் இருக்கிறது என்பதால், முறையான டிரைவிங் திறன்கள் இல்லாமலேயே, சூப்பர் கார்களை எடுத்து கொண்டு சாலைக்கு வந்து விடுகின்றனர். இதன் காரணமாக சாலை விபத்தில் சிக்க நேரிடுகிறது.
இந்த வரிசையில் மும்பை நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு விபத்து சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் எம்எல்ஏ-வாக இருந்தவர் நரேந்திர மெஹ்தா. இவர் பாஜக-வை சேர்ந்தவர். நரேந்திர மெஹ்தாவின் மகன் தக்ஸீல் மெஹ்தா. இவர்கள் குடும்பத்தில் லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) கார் ஒன்று உள்ளது.

சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புடைய லம்போர்கினி ஹூராகேன் காரில், தக்ஸீல் மெஹ்தா சமீபத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தக்ஸீல் மெஹ்தா காரை அதிவேகத்தில் ஓட்டியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் மழை வேறு பலமாக பெய்து கொண்டிருந்தது. இதனால் தக்ஸீல் மெஹ்தாவின் கட்டுப்பாட்டை இழந்த கார், விபத்தில் சிக்கியது.
மும்பை நகரில் உள்ள பிரபலமான பாலத்தின் மீது இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக தக்ஸீல் மெஹ்தா இந்த விபத்தில் உயிர் தப்பி விட்டார். எனினும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே உடனடியாக அருகில் உள்ள தக்ஸீல் மெஹ்தா அழைத்து செல்லப்பட்டார்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பில் உள்ள கட்சியை சேர்ந்தவர் என்றாலும் கூட, நரேந்திர மெஹ்தாவின் மகன் தக்ஸீல் மெஹ்தா மீது காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டியது மற்றும் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ், தக்ஸீல் மெஹ்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த லம்போர்கினி ஹூராகேன் கார் சாலை விபத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல. நரேந்திர மெஹ்தா குடும்பத்தின் லம்போர்கினி ஹூராகேன் கார், கடந்த சில ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சாலை விபத்தில் சிக்கியுள்ளது.
அப்போது விபத்தை ஏற்படுத்தியவர் நரேந்திர மெஹ்தாவின் மனைவி சுமன் மெஹ்தா ஆவார். டெலிவரி எடுத்த நாளன்றே அவர் ஆட்டோ ரிக்ஸாவின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தற்போது அவர்களது மகன் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களை எப்போதும் அதிவேகத்தில் ஓட்ட கூடாது. குறிப்பாக மழை பெய்து கொண்டிருக்கும் சமயங்களில் மிகவும் நிதானமாகதான் பயணம் செய்ய வேண்டும். ஆனால் தக்ஸீல் மெஹ்தா அதை பொருட்படுத்தாமல், மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் அதிவேகத்தில் காரை ஓட்டியுள்ளார். இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications