பணக்காரங்க நல்லவங்களா இருக்க மாட்டாங்கன்னு யார் சொன்னது? சின்ன செயலால் உலகம் முழுக்க பிரபலமான BMW கார் ஓனர்!
நாம் மிகவும் பரபரப்பான ஒரு சூழலில் வாழ்ந்து வருகிறோம். அவரவர் வேலைகளில் பிஸியாக இருப்பதால், மற்றவர்களை பற்றி நலம் விசாரிக்கவோ அல்லது அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கவோ நமக்கு நேரம் இருப்பதில்லை. அல்லது நேரம் இல்லாதது போல் நடிக்கிறோம். சக மனிதர்களின் மீதே பரிவு காட்டுவதற்கு நேரம் இல்லாதபோது, நாய், பூனை போன்ற ஐந்தறிவு ஜீவன்களுக்காக நேரம் செலவிட நமக்கு எப்படி மனது வரும்? இந்திய சாலைகளில் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகள் பலவும், கவனிக்க ஆள் இல்லாமல், எப்படியாவது ஒருவேளை உணவு கிடைக்காதா? என்ற சூழலில் வாழ்ந்து கொண்டுள்ளன.
இதில் ஒரு சில விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. இப்படிப்பட்ட காட்சிகளை காணும் நம்மில் பலரும், நமக்கு என்ன? என்ற ரீதியில், கண்டும், காணாதது போல் சென்று விடுகிறோம். ஆனால் இப்படிப்பட்ட மனிதர்களுக்கு எல்லாம் விதிவிலக்காக செல்வந்தர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கூடிய காரியம் ஒன்றை தற்போது செய்துள்ளார்.

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், மிகவும் பரபரப்பான சாலையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series) கார் ஒன்று வந்து நிற்பதை நம்மால் காண முடிகிறது. அந்த காரில் இருந்து கையில் ஒரு பையுடன் இறங்கிய அதன் உரிமையாளர், சாலையோரமாக தவித்து கொண்டிருந்த பூனை குட்டியை மீட்கிறார்.
பின்னர் அந்த பூனை குட்டியுடன் தனது காரில் ஏறி சென்று விடுகிறார். இந்த நல்ல செயலுக்காக, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உண்மையில் இந்த வைரல் வீடியோ மனதிற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் உரிமையாளர் இந்த செயலை செய்யாமல் போயிருந்தால், 2 விஷயங்கள் நடந்திருக்கலாம்.
ஒன்று, அந்த பூனை குட்டி சாலையில் அடிபட்டு இறந்திருக்கலாம். மற்றொன்று இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த 2 விஷயங்களும் நடக்காமல், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் உரிமையாளர் தடுத்துள்ளார். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது.
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் உரிமையாளர் பூனை குட்டியை மீட்கும் சமயத்தில், பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்து அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தவில்லை. அவரது நல்ல மனதை புரிந்து கொண்டு அமைதி காத்துள்ளனர். எனவே அவர்களுக்கும் கூட நாம் பாராட்டுக்களை தெரிவித்துதான் ஆக வேண்டும்.
மிகவும் நெகிழ்ச்சிகரமான இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெறவில்லை. தாய்லாந்து நாட்டில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்த நல்ல செயலை செய்த நபரை பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் அவர் தாய்லாந்தில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
அவர் ஓட்டி சென்ற பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவிலும் பிரபலமான ஒன்றாகவே உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 74.90 லட்ச ரூபாய் என்ற விலையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் உரிமையாளர் உண்மையில் நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார். சாலையில் பரிதவிக்கும் ஐந்தறிவு ஜீவன்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதை அவர் தனது செயலின் மூலம் அழுத்தம் திருத்தமாக எடுத்து கூறியுள்ளார். இவரை பின்பற்றி இனி வரும் காலங்களில் பலரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என நாம் நம்பலாம்.


Click it and Unblock the Notifications








