பெண் ஓட்டிய பிஎம்டபிள்யூ கார் மோதி உயிரிழந்த உயர் அதிகாரி! இன்சூரன்ஸ் கிடைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்குதா?
டில்லியில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று தறிகெட்டு ஓட்டிய நிலையில் அது பைக் மற்றும் பஸ் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் டில்லி மாநில அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இன்சூரன்ஸ் பணம் எப்படி கிடைக்கும்? யாருக்கு கிடைக்கும்? இதை பெற என்ன செய்ய வேண்டும்? இது குறித்த விவாதம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டில்லியில் மத்திய நிதியமைச்சகத்தின் வடக்கு பிளாக் பகுதியில் துணை செயலாளராக பணியாற்றி வருபவர் நவ்ஜூத் சிங், இவர் தனது மனைவியுடன் பைக்கில் டில்லியில் உள்ள ஹரிநகர் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மெட்ரோ பில்லர் 57 அருகே சென்று கொண்டிருந்த போது இவரது பைக்கை பின்னால் வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று மோதியது. இது மட்டுமல்லாமல் அங்கிருந்த ஒரு பஸ் மீது மோதியது.

இந்த விபத்தை நேரடில் பார்த்தவர்கள் இந்த பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்தது. ஒரு பெண் எனவும், அவரது கணவரும் உடன் இருந்தார் எனவும், இவர்கள் விபத்து நடந்ததும் வந்து காயமடைந்தவர்களை ஒரு கேப் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் என கூறினர். இந்நிலையில் இந்த விபத்தில் படுகாயமடைந்த நவ்ஜூத் சிங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த விபத்து நடந்த இடத்திற்கும், இவர்கள் கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனைக்கும் 22 கி.மீ தூரம் உள்ளது. விபத்து நடந்தவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் காரில் வந்தவர்கள் அவர்களுக்கு தெரிந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் அதிக நேரம் எடுத்துள்ளது. இதன் காரணமாக தான் அவர் உயிரிழந்துள்ளார் என பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் காரில் வந்த ககன் பிரீத் என் பெண்ணையும் போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் எப்படி இன்சூரன்ஸ் கிடைக்கும் என பலர் பேசி வருகின்றனர். பலர் இந்த வழக்கில் இன்சூரன்ஸ் கிடைக்காது, ககன்பிரீத் வாகனம் ஓட்ட உரிமம் இல்லாதவர் இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிளைமை ஏற்றுக்கொள்ளாது என பலர் சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ஆனால் உண்மை அப்படியல்ல. இந்த விபத்திற்கு இன்சூரன்ஸ் கிடைக்கும்.
ஒருவர் சாலையில் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்து கிளைம் தீர்ப்பாயத்தில் விண்ணப்பத்து அவர்களுக்கான கிளைமை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு எந்த விதமான வரை முறையும் கிடையாது. இவ்வளவு தான் பணம் வழங்க வேண்டும் என யாராலும் கூற முடியாது. விபத்தில் உயிரிழந்தவரால் அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை கணக்கீடு செய்து தீர்ப்பாயம் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். இதை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும்.

விபத்து நடந்ததும் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று விபத்து குறித்து தெளிவாக சொல்லி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அதை வைத்து மோட்டார் வாகன விபத்து கிளைம் தீர்ப்பாயத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அப்பொழுது குறிப்பிட்ட நபர் சாலை விபத்தில் இறந்ததற்கான சான்று, அதற்கான இறப்பு சான்றிதழ், மற்றும் விபத்திற்கான சான்று சமர்பிக்க வேண்டும்.
மேலும் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் செய்பவர் இறந்தவருக்கு எந்த உறவு முறை வேண்டும் என்பதையும், மேலும் இறந்தவரை சார்ந்து அந்த குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதையும், அவரது வருமானம் எவ்வளவு இருந்தது என்பதையும் தகவலாக வழங்க வேண்டும். தீர்ப்பாயம் இது குறித்து விசாரணை நடந்தி இறந்தவரால் அந்த குடும்பத்திற்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை கணக்கீடு செய்து இழப்பீட்டு தொகையை முடிவு செய்யும். அந்த பணத்தை வழங்க வேண்டும்.
இதில் விபத்தில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்தவர் மீது தான் தவறு என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. இந்த மாதிரியான விபத்துக்களில் உயிரிழந்தவர் மது போதையி்ல இரந்தார் அல்லது, அவர் வாகனத்தை இயக்கும் நிலையில் இல்லை. அதையும் மீறி வாகனத்தை இயக்கினார் ஆகிய விஷயங்கள் இருந்தால் மட்டுமே கிளைம் ரிஜெக்ட் செய்யப்படும். மற்றபடி தவறு மற்றவர் மீது இருந்தால் அது பற்றி எந்த நிரூபணமும் செய்ய தேவையில்லை மூன்றாம் நபருக்கான காப்பீட்டு அடிப்படையில் அவருக்கான இழப்பீடு வழங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் சாலையில் செல்லும் போது விபத்தில் சிக்கினால் முதலில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றுவது கட்டாயம். இந்த விபத்தில் இன்சூரன்ஸ் கிடைப்பதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இந்த விபத்து போல் நீங்களும் விபத்தில் சிக்கினாலோ அல்லது ஏற்படுத்தினாலோ உடனடியாக காயமடைந்தவர்களை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள் விபத்தால் பிரச்சனை ஏற்படும் பதறி தவறு செய்து உயிரிழிப்புக்கு காரணமாகி விடாதீர்கள்.


Click it and Unblock the Notifications









