கண்ணாடி மாளிகை போன்ற சொகுசு படகை உருவாக்கிய பிரபல கார் நிறுவனம்... தண்ணீரில் மிதக்கும் அரண்மனை தயார்...
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), டைட் (Tyde) எனும் படகு உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து சொகுசு படகு ஒன்றை தயாரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படகின் வாயிலாக நிறுவனம் கடலிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சியில் களமிறங்கி இருப்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.
தற்போது நிறுவனம் சாலைகளில் பயன்படுத்தக் கூடிய சொகுசு வாகனங்களின் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய ஆதிக்கத்தைச் சாலைகளுடன் சேர்த்து கடல் பரப்பிலும் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் பிஎம்டபிள்யூ களமிறங்கி இருக்கின்றது. இந்த படகை முழு லக்சூரி வசதிகள் நிறைந்த வாகனமாக நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

தன்னுடைய அல்ட்ரா லக்சூரி கார்களில் வழங்கப்பட்டிருக்கும் பெரும்பாலான சொகுசு வசதிகளை இந்த படகிலும் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் எதிர்காலத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆதிக்கம் கடல் பரப்பிலும் விரிவடைந்துக் காணப்படும் என தெரிகின்றது. பிஎம்டபிள்யூ மற்றும் டைட் கூட்டணியில் தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த படகு ஓர் எலெக்ட்ரிக் படகு ஆகும்.
இதற்கு ஐகான் என நிறுவனம் பெயர் சூட்டி இருக்கின்றது. இந்த படகை நிறுவனங்கள் தற்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே தயார் செய்திருக்கின்றன. அதேவேளையில், அது உற்பத்தி நிலைக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால் வெகு விரைவில் இந்த படகின் உற்பத்தி பணியை நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிக நீளமான படகாக இதனை பிஎம்டபிள்யூ கூட்டணி தயாரித்து இருக்கின்றது. 43 அடி நீளத்தில் அது உருவாக்கப்பட்டு உள்ளது. மிகவும் லக்சூரியான மற்றும் பிரீமியம் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நீளமான அமைப்பை அது வழங்கி இருக்கின்றது. இந்த போட்டில் மின்சார பவருக்காக ஆறு பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இவற்றின் 240 kWh ஆகும். இத்துடன், 100 kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் படகில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த படகால் 24 க்நாட்ஸ் வேகத்தில் செல்ல முடியும். அதாவது, மணிக்கு 44 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இதேபோல், இதன் ரேஞ்ஜ் திறன் 50 நாட்டிக்கல் மைல்கள் ஆகும்.

அதாவது ஒரு முறை எலெக்ட்ரிக் படகை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுமட்டுமா இந்த 43 அடி நீள வாட்டர்கிராஃப்டில் இன்னும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை டைட் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் இணைந்து வாரி வழங்கி இருக்கின்றன.
சுழலும் இருக்கைகள், டேப் ரக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டால்ஃபி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, பிரபல திரைப்பட இசை கலைஞர் ஹான்ஸ் ஜிம்மரைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான எஞ்ஜின் சத்தம் வழங்கும் வசதியையும் இந்த படகில் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
மின்சார வாகனங்கள் பொதுவாகவே சைலண்டாக இயங்கக் கூடியவை என்பதால் இந்த வசதியை நிறுவனம் வழங்கி இருக்கின்றது. மேலும், வழக்கமான படகுகளுக்கு மாற்றாகவே இதனை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. கண்ணாடி பெட்டி போன்று அதனை வடிவமைத்து உள்ளது. இந்த படகில் கூடுதல் சிறப்பு வசதிகளாக யோக் ஸ்டைலிலான வீல், 32 அங்குல 6கே தொடுதிரை சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்தகைய தரமான மின்சாரத்தில் இயங்கும் வாட்டர்கிராஃப்டையே பிஎம்டபிள்யூ நிறுவனம் பிரபல படகு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயார் செய்திருக்கின்றது. வெகு விரைவில் இதனை பிஎம்டபிள்யூ நிறுவனம் உலக சந்தையில் மில்லியனர்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் பரப்பு, தீவுகள் உள்ளிட்டவற்றை படகில் இருந்தபடியே ரசித்து பார்க்க இந்த ஐகான் படகு உதவியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூவின் சொகுசு கார்களைப் போலவே இந்த படகும் பார்க்க மிகவும் அழகாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்கின்றது. தொடர்ந்து, அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்டதாகவும் அது உருவாக்கப்பட்டு உள்ளது. ஆகையால், அதானி, அம்பானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களை இந்த படகு கட்டாயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









