BMW நிறுவனத்திற்கு மக்கள் செல்லமா வச்ச பெயர்கள் என்னென்ன தெரியுமா? கேட்டா ஆச்சரியப்படுவீங்க
உலகம் முழுவதும் சொகுசு கார்களை தயாரித்து விற்பனை செய்யும் முதன்மையான நிறுவனங்களில் ஒன்று பிஎம்டபிள்யூ. இந்த நிறுவனத்திற்கு மிக நீண்ட பாரம்பரியம் இருக்கிறது என்பதெல்லாம் நமக்கு நன்றாக தெரிந்த ஒரு விஷயம்தான்.
ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு Beemer, Bimmer, Beamer மற்றும் Bao Ma என பல்வேறு செல்ல பெயர்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? நம்மில் நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆங்கிலம் பேசும் மக்கள் பலர் இன்றும் கூட இப்படியான ஒரு செல்ல பெயரை வைத்துதான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தை அழைக்கின்றனர். இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் சுமார் 110 ஆண்டுகள் பழமையானது. இந்நிறுவனம் 1916ம் ஆண்டு, முதன் முதலில் விமானங்களுக்கான இன்ஜின்களை தயாரிக்கும் நிறுவனமாக துவங்கப்பட்டது. பின்னர் 1923களில் மோட்டார்சைக்கிள் இன்ஜின்களை தயாரிக்கும் வேலையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இறங்கியது.
Beemer (முதல் செல்ல பெயர்): பிரிட்டனில்தான் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு முதன் முதலில் செல்ல பெயர் வைக்கப்பட்டது. 1930களில் இந்நிறுவனத்தின் பைக்குகள், ரேஸ்களில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவுடன், மக்கள் இந்த பைக்குகளை Beemer பைக்குகள் என்று அழைத்தனர். Beemer என்ற இந்த பெயர் வர காரணம், இதன் போட்டியாளர்தான்.

அந்த காலத்தில் Beezers என்ற பெயரில் ரேஸிங் பைக்குகளை பிஎஸ்ஏ நிறுவனம் தயாரித்து வந்தது. அந்த காலத்தில் Beezers பைக்குகளே ரேஸ்களில் அதிகம் காணப்பட்டன. ஆனால் ஆங்காங்கே பிஎம்டபிள்யூ பைக்குகள் தென்பட துவங்கிய நிலையில், மக்கள் பிஎம்டபிள்யூ பைக்குகளை, Beemer என்று அழைக்க துவங்கினர். Beezers -Beemer என்று அழைக்க வசதியாக இருந்ததால் மக்கள் இப்படியாக அழைத்தனர்.
சில காலங்களில் இது அப்படியே மருவி, 'Beamers' என மாறியது. இந்த Beemer மற்றும் Beamers ஆகிய இரண்டு செல்ல பெயர்களும் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு பிரிட்டனிலேயே கிடைத்து விட்டது. அடுத்து, 2ம் உலகப்போர் துவங்கியது. பிஎம்டபிள்யூ தனது உற்பத்தியை நிறுத்திவிட்டு போருக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது.

அப்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் ஐரோப்பாவிற்கு மேற்கு பகுதியை நோக்கி தனது வியாபாரத்தை விஸ்தரிப்பு செய்தது. குறிப்பாக அமெரிக்காவில் களம் இறங்கியது. 1970களில் பிஎம்டபிள்யூ அமெரிக்காவிலும் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெற்றது. பல புதிய உச்சங்களை இந்நிறுவனம் எட்டியது. அப்போது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் செல்ல பெயரான Beamers என்ற பெயரை அமெரிக்கர்களும் பயன்படுத்த துவங்கினர்.
இதற்கிடையில் தி பாஸ்டன் சேப்டர் பிஎம்டபிள்யூ கிளப் ஒரு நியூஸ் லெட்டரை வெளியிட்டது. அதில் அவர்கள் Bimmer என பிஎம்டபிள்யூ நிறுவனத்தை குறிப்பிட்டனர். அதுதான் இந்த பெயர் முதன் முதலில் வெளியான இடம். அதுவரை Beamers என்ற பெயர் அமெரிக்கர்களுக்கு தெரிந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பிஎம்டபிள்யூ என்றே அழைத்தனர். ஆனால் இந்த நியூஸ் லெட்டருக்கு பிறகு Bimmer என்ற பெயர் அமெரிக்கர்கள் மனதில் பதிந்தது.
அதன் பின்னர் அமெரிக்காவில் Bimmer என்ற பெயர் பிரபலமானது. இது அமெரிக்கா மட்டுமல்லாமல், பிஎம்டபிள்யூவின் பிறப்பிடமான ஜெர்மனியிலும் பரவியது. இப்பொழுது Beemer, Beamers, Bimmer என்ற 3 செல்ல பெயர்கள் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு கிடைத்து விட்டது.
Bao-Ma: பிஎம்டபிம்யூ நிறுவனத்திற்கு கடைசியாக கிடைத்த பெயர்தான் Bao-Ma. இந்த பெயர் கிழக்கு ஆசிய நாடுகளில் துவங்கியது. முக்கியமாக சீனாவில்தான் இந்த பெயர் ஆரம்பமானது. Bao-Ma என்ற பெயருக்கு 'விலையுயர்ந்த குதிரை' என்று பொருள். சீனாவில் குதிரைகளுக்கு என்று பெரும் மதிப்பு இருக்கிறது. அந்த பெயர் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு வந்ததால் அந்நிறுவனமும் பிரபலமானது.
குதிரைகள் சீனாவில் வளம் மற்றும் ராயலிட்டியையும் குறிப்பிடும் என்பதால், பிஎம்டபிள்யூ தன்னை ஒரு சொகுசு பிராண்டாகவும், பிரிமியம் பிராண்டாவும் சீனாவில் எளிதாக நிலைநிறுத்த முடிந்தது. இதன் மூலம் தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு 4 செல்ல பெயர்கள் வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனம் ஒரு நூற்றாண்டை கடந்த பாரம்பரியமான நிறுவனம் . இந்நிறுவனம் இன்னும் நம்மை 4வீலர் மற்றும் 2வீலர் தயாரிப்பில் பிரம்மிக்க வைக்கிறது. சொகுசு வாகனங்களுக்கான செக்மெண்டில் தரமான தயாரிப்புகளை வெளியிடுவதில் உலக அளவில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் இருக்கிறது. சொகுசு மட்டுமல்லாது, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வாகனங்களில் சில பெர்ஃபாமென்ஸ் அம்சங்களும் இருக்கிறது.
அப்படிப்பட்ட பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு இத்தனை செல்ல பெயர்கள் இருக்கும் விஷயமும், இந்த பெயர்களுக்கு பின்னால் உள்ள கதைகளும் உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமாகதான் இருக்கின்றன. ஒரு வேலை நீங்கள் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்றால் என்ன பெயரை வைப்பீர்கள்?


Click it and Unblock the Notifications









