“உயிர் பயத்த காட்டிட்டான் பரமா...” இந்திய சாலைகளில் மட்டுமே இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும்!!
பைக்கில் வேகமாக சென்று கொண்டிருக்கும் பொழுது குறுக்கே நாய் வந்தால் என்ன நடக்கும்? நினைக்கும் போதே பக்கென்று உள்ளது அல்லவா. ஆனால், அத்தகைய சூழலை ஒருவர் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் (BMW S1000RR) என்ற விலையுயர்ந்த சூப்பர் பைக்கில் சந்தித்துள்ளார். அதன்பின் என்ன ஆனது? என்பதை, இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் இனி பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்வதற்கு நம் நாட்டு சாலைகளின் தரம் ஒரு காரணம் என்றாலும், அதைவிட முக்கிய காரணமாக சாலைகளில் பயண சூழலை சொல்லியாக வேண்டும். ஏனெனில், இந்திய சாலைகளில் எது எப்போது குறுக்கே வரும் என்றே சொல்ல முடியாது. சாலையில் பயணித்து கொண்டிருக்கும்போது வேறொரு வாகனம் தான் குறுக்கே வரும் என்றில்லை... ஆடு, மாடு, நாய் போன்றவை கூட வரலாம்.

இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், குறுக்கே வாகனம் ஒன்று வருகிறது என்றால் சத்தத்தை வைத்து ஓரளவிற்கு முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். ஆனால், மேற்கூறப்பட்ட பிராணிகள் சாலையின் குறுக்கே வருவதை கடைசி வினாடியில் தான் அறிய முடியும். சில பிராணிகள் சாலையின் குறுக்கே வந்த பின், வாகனங்களை கண்டு பயந்து எந்த பக்கம் செல்வது என தெரியாமல் சாலையிலேயே முன்னும், பின்னுமாக செல்லும்.
குறிப்பாக, நாய் அல்லது பூனை தான் அவ்வாறு வாகனங்களை பார்த்து பயந்து, என்ன செய்வது என தெரியாமல் குழப்பமடையும். சாலையின் குறுக்கே வந்த பின் வேகமாக சாலையை கடந்துவிட்டாலே சில நேரங்களில் பிரச்சனை ஏற்படாது. இத்தகைய சூழலை பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் ரைடர் சமீபத்தில் சந்தித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள வீடியோவை கீழே காணலாம்.
நெடுஞ்சாலை ஒன்றில், சில சூப்பர் பைக் ரைடர்கள் குழுவாக இணைந்தப்படி பயணம் செய்துள்ளனர். இதனை, ரைடர்களுடன் வந்த சிலர் காரில் அமர்ந்தப்படி படம் பிடித்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென அவ்வளவு பெரிய நெடுஞ்சாலைக்குள் வெள்ளை & கருப்பு நிறத்திலான நாய் ஒன்று நுழைந்து விடுகிறது. அந்த நாய், படம் பிடித்து கொண்டிருந்தவர்களின் மஹிந்திரா தார் வாகனத்தை கடந்து சாலையின் மையத்தை நோக்கி சென்றுள்ளது.
சரியாக அந்த நேரத்தில், குழுவாக வந்து கொண்டிருந்த பைக்குகள் நாயை சந்தித்தன. அதில் குறிப்பாக, சிவப்பு நிற பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கில் வந்து கொண்டிருந்த ரைடர் நேரடியாக நாயின் குறுக்கீடை சந்திக்க வேண்டியதாகி விட்டது. நாய் குறுக்கே வருவதை கடைசி வினாடிகளில் பார்த்த அந்த பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் ரைடர் நாயின் மீது மோதிவிடுவாரோ... அடுத்த என்ன நடக்க போகுதோ என்கிற பயம் நமக்குள் ஏற்படுகிறது.

ஆனால் அந்த ரைடர் உடனடியாக பிரேக் கொடுத்து, பைக்கை ஒரு இன்ச் கூட நகர விடாமல் நிறுத்தி விட்டார். இவ்வாறு, சடர்ன் பிரேக் அடித்து நிறுத்திய காரணத்தினால், பைக்கின் பின்பக்கம் வீலிங் செய்வது போல் தூக்கிவிட்டது. இதனை கண் முன் கண்ட அந்த நாய் பயத்தில் வேறு பக்கம் திரும்பி எப்படியோ சாலையை கடந்துவிட்டது. அப்போதும் கூட, பின்னால் வந்த மற்றொரு காரில் சிக்க வேண்டியது, நல்ல வேளையாக அந்த கார் ஓட்டுனரும் நாயை கண்டு பிரேக் பிடித்ததால் நாய்க்கு ஒன்றும் ஆகவில்லை.
இந்த நிகழ்வு குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "மழை காலத்தில் 100kmph வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது 2 வினாடிகளில் பைக்கை நிறுத்துவீர்களா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு, அந்த நாயை நெட்டிசன்கள் பலர் திட்ட, சிலர் நாயை காப்பாற்றியதற்காக அந்த ரைடருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த இன்ஸ்டா பதிவில் தெரிவித்து இருப்பதுபோல், சம்பவத்தின் போது பைக் 100kmph வேகத்தில் வந்து கொண்டிருந்தது போல் தெரியவில்லை. அதனை காட்டிலும் சற்று மெதுவாகவே அந்த ரைடர் வந்துள்ளார். ஆனால் உண்மையில், அந்த மெதுவான பயணமே அவரை நாய் மீது மோதாமல் தவிர்த்துள்ளது என சொல்ல வேண்டும். முன்னால் சென்று கொண்டிருந்த தார் வாகனத்தை கடந்து, அந்த நாய் வந்ததினாலேயே நாயை அந்த ரைடரால் சரிவர கவனிக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications









