மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஓ-வின் ஓய்வு தினத்தை கொண்டாடிய பிஎம்டபிள்யூ: காட்டு தீயாய் வைரலாகும் வீடியோ...!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு, பிஎம்டபிள்யூ நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஜெர்மனியைச் சேர்ந்த டைம்லர் ஏஜி குழுமம் உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. அவ்வாறு, இந்த நிறுவனம் தயாரிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் உலகளாவிய அளவில் புகழ்பெற்றதாக இருக்கின்றது.

அதற்கு, இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட சொகுசு காராக இருப்பதே முதல் காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், இந்த நிறுவனம் முதல் தர கார்களை தயாரிப்பதில் ஜாம்பவானாக செயல்பட்டு வருகின்றது. இதனால், பல்வேறு சொகுசு கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, இது கடுமையான போட்டியாளராக இருந்து வருகின்றது.

இந்நிலையில், இந்த புகழ்வாய்ந்த நிறுவனத்தின் சிஇஓ டீய்டர் ஸெட்ஸ்சே (Dieter Zetsche), அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார். இவர் ஓய்வு பெற்றதுகுறித்து, பிஎம்டபிள்யூ நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவினை அவருக்கு மரியாதைச் செலுத்தும் நிமித்தமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகின்றது. அவ்வாறு ட்விட்டர் பக்கத்தில் மட்டும் இந்த வீடியோவினை 2.62 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் மற்றும் ஷேர் செய்துள்ளனர்.

'லாஸ்ட் டே' என தொடங்கும் இந்த வீடியோவில் டீய்டர் ஸெட்சே அவரது இருக்கையை விட்டு வெளியே கிளம்புகிறார். பின்னர், அங்கிருந்து நகர்ந்து வெளியேச் செல்லும் அவர், அனைவருக்கும் 'குட் பை' சொல்லும் வகையில் கையாட்டிக் கொண்டு வெளியேறுகிறார். மேலும், அவரது அக்சஸ் கார்டை வரவேற்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரில் அவரது இல்லத்திற்கு புறப்படுகிறார்.

பின்னர், அவரது வீட்டை அடைந்த டீய்டர் ஸெட்சே, அவரது கார் கராஜை திறந்து மெட்டாலிக் ஆரஞ்சு நிறத்திலான பிஎம்டபிள்யூ ஐ8 ரோட்ஸ்டர் காரை ஓட்டிச் செல்கிறார். முன்னதாக வீடியோவில் இறுதியை விளக்கும் வகையிலும், அவர் பணியில் விடுவிக்கப்பட்டதை விளக்கும் வகையிலும் 'ஃப்ரீ அட் லாஸ்ட்' என்ற கேப்ஷன் திரையில் தோன்றுகிறது.
இறுதியாக "இத்தனை வருடங்களாக எங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தி, ஊக்குவித்தமைக்கு டீய்டர் ஸெட்ஸ்சே-விற்கு நன்றி" என அந்த வீடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத் தீயாய் வைரலாகி வருகின்றது.

மேலும், இந்த வீடியோவிற்கு பலர் அவர்களது வாழ்த்துக்களையும், கமெண்ட்டுகளையும் அந்த குறிப்பிட்ட வீடியோவின் கீழ் பதிவிட்டு வருகின்றனர். அதில், ஓர் நபர், "நான் பென்ஸ் தயாரிப்புகளின் தீவிர ரசிகன் ஆவேன். இந்த வீடியோ நகைச்சுவையாகவும், மரியாதைக்குறியதாகவும், நல்ல ஆக்கபூர்வமான படைப்பாகவும் இருக்கின்றது" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றுமொருவர், "வாவ், இதுதான் உண்மையான தோழமை உணர்வு கொண்ட போட்டி. எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது" என கமெண்ட் செய்திருந்தார். மேலும், பிஎம்டபிள்யூவின் இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், டுவிட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளது.
அதில், "பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த முயற்சி நன்றி. ஆனால், டீய்டர் ஸெட்ஸ்சே ஏற்கனவே இக்யூ மெர்சிடிஸ் பென்ஸின் புதிய எலக்ட்ரிக் காரை தேர்வு செய்துவிட்டார்" என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








