தாய்லாந்தில், டிரக்கில் தீப்பிடித்து எரிந்த சூப்பர் கார்கள்: பல கோடி சேதம்
தாய்லாந்தில், டிரக்கில் ஏற்றிச் செல்லப்பட்ட விலையுயர்ந்த கார்கள் தீப்பிடித்து எரிந்து நாசமானதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏலம் விடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட கார்கள்தான் தீயில் கருகி உருக்குலைந்தன.
ஃபெராரி எஃப்430 ஸ்குடேரியா, பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர், லம்போர்கினி மூர்சிலாகோ மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 ஆகிய 4 கார்கள் ஏலம் விடுவதற்காக டிரக்கில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டன. அப்போது, டிரக்கில் இருந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியுள்ளது. காற்றின் வேகத்தில் அந்த தீ மளமளவென பிற கார்களுக்கும் பரவியுள்ளது. இதில், அந்த டிரக்கில் எடுத்துச் செல்லப்பட்ட 4 விலையுயர்ந்த கார்களும் தீயில் கருகி நாசமானது.
பின்னால் ஏற்றப்பட்டிருந்த கார்கள் தீப்பிடித்தது குறித்து, அந்த டிரக்கை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு தெரியவில்லை. மற்றொரு டிரக் டிரைவர் கார்கள் தீப்பிடித்து எரிவதை கூறியவுடன்தான் டிரக்கை நிறுத்தியுள்ளார். முன்கூட்டியே தெரிவித்திருந்தால், ஓரளவு சேதத்தை தவிர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீயில் கருகிய கார்கள்
தீயில் கருகிய கார்களின் விபரத்தை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

உருக்குலைந்த ஃபெராரி
இந்த விபத்தில் ஃபெராரி எஃப்430 ஸ்குடேரியா கார் அதிக சேதமடைந்தது. எஞ்சின் பகுதி மற்றும் கூரை முற்றிலும் சேதமானது. கடந்த 2007ம் ஆண்டு பிராஃங்க்பர்ட் ஆட்டோ ஷோவில் மைக்கேல் சூமேக்கர்தான் இந்த கார் மாடலை அறிமுகப்படுத்தினார். ஃபெராரி எஃப்43 கார் மாடலைவிட எஃப்430 ஸ்குடேரியா கார் 100 கிலோ எடை குறைவானது.

லம்போர்கினியும் தப்பவில்லை
டிரக்கில் எடுத்துச்செல்லப்பட்ட கார்களில் லம்போர்கினி மூர்சிலாகோவும் ஒன்று. கடந்த 2001ம் ஆண்டு கூபே மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ஆடி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் லம்போர்கினி வந்ததன் பின் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் மாடல். 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்டது. 2004ம் ஆண்டில் இதன் ரோட்ஸ்டெர் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 4,099 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன் வாரிசாக வந்ததுதான் லம்போர்கினி அவென்டேடார் கார்.

பென்ட்லீ கார்
தீயில் கருகிய 4 கார்களில் பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் மாடலும் ஒன்று. இரண்டு கதவுகள் கொண்ட கான்டினென்டல் ஜிடி காரின் அதிக வீல்பேஸ் கொண்ட மாடலாக ஃப்ளையிங் ஸ்பர் வந்தது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்6
தீயில் கருகிய கார்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 கார்தான் மிக மோசமாக சேதமடைந்தது. அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போயுள்ளது.

பல கோடி சேதம்
தீயில் கருகி சூப்பர் கார்களின் உரிமையாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் சில கார்கள் ரிப்பேர் செய்ய முடியாத அளவுக்கு உருக்குலைந்து போய்விட்டன. அப்படி ரிப்பேர் செய்யும் பட்சத்தில் 5 லட்சம் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








