நடிகரின் ஒன்றுவிட்ட சகோதரராக மாஸ் காட்டுறாரு! மார்க்கெட்டுக்கு வரும் பைக்கை முதல் ஆளா வாங்கி போடுவது இவர்தான்!
பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் (Bollywood Actor Shahid Kapoor) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரான நடிகர் இஷான் கட்டர் (Ishaan Khatter) மிகுந்த பைக் பிரியர் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். பைக்குகளில் சுற்றுப்பயணம் செய்வதில் ஆர்வமுள்ள இவர், தற்போது தனது கலெக்ஷனில் புதிய டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 1200 எக்ஸ் (Triumph Scrambler 1200 X) பைக்கை சேர்த்துள்ளார்.
இதன் மதிப்பு சுமார் ரூ.11.8 லட்சம் ஆகும். நடிகர் இஷான் கட்டரின் பைக் கலெக்ஷனில் ஏற்கனவே டிரையம்ப் ஸ்பீடு ட்வின் (Triumph Speed Twin) பைக் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட அந்த பைக்கிற்கு இணையாக, தற்போது புதிய ஸ்க்ராம்ப்ளர் 1200 எக்ஸ் இணைந்துள்ளது.

இஷான் கட்டர் தனது புதிய பைக்கில் வலம் வரும் வீடியோவை தீபேந்தர் தாக்கூர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மும்பையின் மேற்கு பாந்த்ரா (Bandra) பகுதியில் உள்ள காஃபி ஷாப் ஒன்றில் இருந்து இஷான் கட்டர் வெளியே வரும் காட்சியுடன் இந்த வீடியோ தொடங்குகிறது.
அங்கே வந்த நண்பர் ஒருவரிடம் தனது பைக் சாவியை காட்டிவிட்டு, காஃபி ஷாப் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை நோக்கி நடிகர் இஷான் கட்டர் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் சாவியைச் செருகி, ஹெல்மெட்டை அணிந்து பைக்கில் கிளம்பும் முன் கூடியிருந்த மக்களுக்கு கையசைத்துவிட்டு, சிறிது தூரம் பைக்கில் நின்றபடி சென்ற இஷான் கட்டர், பின்னர் அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார்.

இந்த இளம் பாலிவுட் நடிகர் புதியதாக வாங்கியிருக்கும் டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 1200 எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஏற்கனவே கூறியதுபோல் தற்சமயம் ரூ.11.8 லட்சம் ஆகும். சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான இந்த டிரையம்ப் பைக்கை இஷான் கட்டர் சாம்பல் கிரே நிறத்தில் வாங்கியுள்ளார்.
இந்த பைக் கார்னிவல் ரெட் மற்றும் சஃபையர் பிளாக் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. இந்த டாப்-எண்ட் ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் மார்ஸோச்சி 45 மிமீ USD ஃபோர்க்குகள் மற்றும் பிக்பேக் ரிசர்வாயர்களுடன் கூடிய இரட்டை பின் ஷாக்கள் சஸ்பென்ஷன்களாக உள்ளன. இந்த டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் முன் சக்கரம் 21-இன்ச்சிலும், பின் சக்கரம் 17-இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன.

டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 1200 எக்ஸ் பைக் 1200சிசி திரவ-குளிரூட்டப்பட்ட என்ஜினைக் கொண்டுள்ளது. இது 89 bhp அதிகபட்ச இயக்க ஆற்றலையும், 110 Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ரைட்-பை-வயர் த்ரோட்டில் ஆகிய அம்சங்கள் உள்ளன.
இஷான் கட்டரிடம் டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 1200 எக்ஸ் தவிர, டிரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய இந்த பைக்கில் நடிகர் ஷாருக்கான் (Sharrukh Khan) பிறந்தநாள் விழாவுக்கு இஷான் கட்டர் சென்றிருந்தார். புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.95 லட்சம் ஆகும். இந்த பைக்கில் 1200சிசி பேரலல்-ட்வின் என்ஜின் உள்ளது.

இது 103.5 bhp இயக்க ஆற்றலையும், 112 Nm டார்க்கையும் வெளியிடுகிறது. இஷான் கட்டரும் ஷாஹித் கபூரும் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஐரோப்பிய சாலைப் பயணத்தை மேற்கொண்டனர். அப்போது இருவரும் பி.எம்.டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ் (BMW R 1300 GS) பைக்கில் பயணம் செய்தனர். அந்த பயணத்தில் எடுக்கப்பட்ட பல படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, பாலிவுட் நடிகர் இஷான் கட்டரின் வாழ்க்கை சினிமாவையும், மோட்டார்சைக்கிள்களையும் சுற்றியே உள்ளது. புதியதாக வாங்கும் விலையுயர்ந்த பைக்குகளை அதன்பின் ஏதாவது ஒரு பயணத்திற்கு வெளியே கொண்டுவருவதை இந்த நடிகர் வாடிக்கையாக கொண்டுள்ளதால், புதிய ஸ்க்ராம்ப்ளர் 1200 எக்ஸ் பைக்கிலும் இன்னும் சில நாட்களில் இஷான் கட்டரை வெளியே காணலாம் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









