கப்பல் போன்ற எலக்ட்ரிக் காரில் சென்றது இவ்வளவு பெரிய நடிகரா! டெஸ்ட் டிரைவ் என்ற பெயரில் நாட்கணக்கில் சுத்தலாம்
எம்ஜி மோட்டார் (MG Motor), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். ஆனால், சீனாவை சேர்ந்த SAIC குழுமத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் எம்ஜி நிறுவனம் சமீபத்தில்தான் இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தது. இந்த கூட்டணிக்கு பிறகே இந்தியாவில் புதியது, புதியதாக எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆரம்பித்தது. எம்ஜி கோமெட் இவி (Comet EV) மற்றும் விண்ட்சர் இவி (Windsor EV) உள்ளிட்டவை இந்த வரிசையில் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த எலக்ட்ரிக் கார்கள் ஆகும்.
இவை இரண்டுமே விலை குறைவான எலக்ட்ரிக் கார்கள் என்பதால், விரைவாகவே மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற ஆரம்பித்தன. ஆனால், எம்ஜி மோட்டாரில் இருந்து அடுத்ததாக விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதுதான், எம்ஜி எம்9 (M9) எலக்ட்ரிக் கார் ஆகும்.

வருகிற ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காரை குறிப்பாக சினிமா (Cinema) நட்சத்திரங்கள் பலர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், இங்கு ஒரு சினிமா நடிகர் ஏற்கனவே எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காரை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். அது எப்படி... கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே வாங்க முடியும் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.
முதலில் எம்9 எலக்ட்ரிக் காரை வாங்கிய நடிகரை பற்றி பார்த்துவிடுவோம். மார்க்கெட்டுக்கு இன்னும் வராத இந்த எலக்ட்ரிக் காருடன் தற்போது மும்பை சாலைகளில் காட்சித்தந்து இருக்கும் நடிகர், ஆதித்யா ராய் கபூர் (Aditya Roy Kapur) ஆவார். பாலிவுட் சினிமாவின் பிரபலமான ராய் கபூர் குடும்பத்தில் பிறந்தவர், 39 வயதான ஆதித்யா ராய் கபூர் ஆவார்.

2009ஆம் ஆண்டில் இருந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், 2013ஆம் ஆண்டில்தான் முதல்முறையாக கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிக்க ஆரம்பித்தார். ஹீரோவாக இவர் நடித்த முதல் திரைப்படமான 'ஆஷிக் 2'-இல் இடம்பெற்ற 'தும் ஹி ஹோ' பாடல் 2013 சமயத்தில் இந்திய அளவில் பெரிதும் கவனத்தை பெற்றது.
இருப்பினும், கொரோனா காலத்திற்கு பிறகு நடிகர் ஆதித்யா ராய் கபூருக்கு சரிவர திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாக இவரது நடிப்பில் 'மெட்ரோ... இன் தினோ' என்கிற இந்தி திரைப்படம் திரைக்குவர உள்ள நிலையில், மும்பையில் உள்ள டி-சீரிஸ் (T-Series) திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து நடிகர் ஆதித்யா ராய் கபூர் வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டி-சீரிஸ் அலுவலகத்திற்கு ஆதித்யா ராய் கபூர் அவ்வப்போது வருவது வாடிக்கையான ஒன்றே ஆகும். ஆனால், தற்போது வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி இருப்பதற்கு காரணம், எம்ஜி எம்9 என்கிற இன்னும் இந்திய மார்க்கெட்டிற்கு வராத எலக்ட்ரிக் காரில் ஆதித்யா ராய் கபூர் வந்தது ஆகும். வீடியோவில், ஆதித்யா ராய் கபூர் பயன்படுத்தும் எம்9 காரில் சிவப்பு நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருப்பதை காணலாம்.
பொதுவாக, சிவப்பு நிற நம்பர் பிளேட் ஆனது தொழிற்சாலையில் இருந்து ஷோரூமுக்கு காரை கொண்டு செல்வதாக இருந்தாலோ அல்லது ஷோரூம் தொடர்பான ஏதேனும் சோதனை ஓட்டமாக இருந்தாலோ காரில் தற்காலிகமாக பொருத்தப்படுவது ஆகும். ஆதலால், இதனை பொது மக்கள் பயன்படுத்த முடியாது. ஆனால், நடிகர் ஆதித்யா ராய் கபூர் பயன்படுத்துவதற்கு காரணம், ஒருவேளை தனது லக்சரி வாழ்க்கை முறை எம்ஜி எம்9 எலக்ட்ரிக் கார் உடன் எவ்வாறு உள்ளது என்கிற சோதனை ஓட்டமாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ஆதித்யா ராய் கபூர் போன்ற விஐபிகளுக்கு விலையுயர்ந்த கார்கள் நீண்ட நாட்களுக்கு கூட டெஸ்ட் டிரைவிற்கு கொடுக்கப்படுவது உண்டு. குறிப்பாக, எம்ஜி எம்9 போன்ற அளவில் பெரியதான எம்பிவி கார்களை நிச்சயமாக டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த பின்னரே வாங்குவர். ஆக, எம்9 கார் அறிமுகமான பிறகு அதில் ஒன்றை நடிகர் ஆதித்யா ராய் கபூர் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








