4 வருஷத்துக்கு முன் சுஷாந்த் சொன்ன விஷயம்... இப்போ கண் கலங்கும் மக்கள்... நல்ல மனுஷன விட்டுட்டோம்...
4 வருடங்களுக்கு முன்னர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சொன்ன ஒரு விஷயத்தை நினைத்து, ரசிகர்கள் தற்போது கண் கலங்கி வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகர்களில் ஒருவராக உயர்ந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அந்த படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் டோனியாகவே வாழ்ந்து காட்டினார்.

நடை, உடை, பாவனை என டோனியின் அனைத்து மேனரிஸங்களையும் அப்படியே திரையில் கொண்டு வந்து ரசிகர்களை அவர் வியப்பில் ஆழ்த்தினார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நடிப்பு திறமைக்கு இப்படம் சின்னஞ்சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. இப்படி அசாத்திய திறமை வாய்ந்த இந்த இளம் நடிகர் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட் திரையுலகின் வாரிசு அரசியல் காரணமாகவே சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்று வெளியாகி வரும் தகவல்கள், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மறுபக்கம் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நினைவுகளை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த வகையில், கடந்த 2006ம் ஆண்டில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் உலா வந்து கொண்டுள்ளது.

அந்த புகைப்படத்தில், மஞ்சள் நிற ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றில் சுஷாந்த் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அது ஹோண்டா நிறுவனத்தின் பைக் ஆகும். சுஷாந்த் சிங் ராஜ்புத் கருப்பு நிற சட்டை, ஜீன்ஸ் அணிந்து கொண்டு அந்த பைக்கில் அமர்ந்துள்ளார். அத்துடன் அவரது கையில் ஹெல்மெட்டும் உள்ளது. அப்போதே பொறுப்பான நபராக சுஷாந்த் சிங் இருந்ததை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

இன்று இந்தியாவில் சாலை விபத்துக்களால் நடைபெறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு, இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதே முக்கிய காரணமாக உள்ளது. அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், டூவீலர்களில் பயணிக்கும் பலர் ஹெல்மெட் அணிவதில்லை.

ஆனால் சுஷாந்த் சிங் எவ்வளவு பொறுப்பான நபர் என்பதை அவரது கையில் இருக்கும் ஹெல்மெட்டே எடுத்து காட்டுகிறது. மேலும் இந்த பைக்கை தனது வீட்டில் அடம் பிடித்து சுஷாந்த் சிங் ராஜ்புத் வாங்கவில்லை. இன்று இளைஞர்கள் பலர் மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் விர்ரென்று பறப்பதை சாலைகளில் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.

கல்லூரி காலத்திலேயே பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்குகளை ஒரு சில இளைஞர்கள் ஓட்டுகின்றனர். பெரும்பாலும் பெற்றோரிடம் அடம் பிடித்து, மாத தவணையிலாவது ஸ்போர்ட்ஸ் பைக்குகளை வாங்கி விடுகின்றனர். ஆனால் சுஷாந்த் சிங் ராஜ்புத், கல்லூரி காலத்தில் தனது சொந்த உழைப்பின் மூலமாக ஹோண்டா ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கியுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது கடின உழைப்பின் மூலம் வாங்கிய முதல் பைக் இதுவாகும். கல்லூரி நாட்களில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்ற மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது வழக்கம். டியூஷன் எடுத்ததன் மூலமாக சம்பாதித்த பணத்தில்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்த ஹோண்டா பைக்கை வாங்கினார். இந்த புகைப்படத்தை சுஷாந்த் சிங் கடந்த 2016ம் ஆண்டு பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.

''மாணவர்களுக்கு டியூஷன் எடுத்ததன் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கிய முதல் பைக். சில விஷயங்கள் உங்களை நன்றாக உணர வைக்கும்'' என அந்த பதிவில் சுஷாந்த் கூறியிருந்தார். தற்போது அந்த படத்தை அவரது ரசிகர்கள் கண்ணீருடன் சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த ஹோண்டா பைக் தவிர மற்றொரு பைக் மீதும் சுஷாந்த் சிங் காதல் கொண்டிருந்தார்.

அது அவரது பிஎம்டபிள்யூ கே1300ஆர் (BMW K1300R) பைக். அந்த பைக்கில் சுஷாந்த் சிங் அமர்ந்திருப்பதை போன்ற போட்டோவையும் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதுதவிர டோனியுடன் சுஷாந்த் சிங் பைக்கில் அமர்ந்திருப்பதை போன்ற ஒரு புகைப்படமும் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

பைக்குகள் மட்டுமல்லாது ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே (Maserati Quattroporte) ஆகிய கார்களையும் சுஷாந்த் சிங் ராஜ்புத் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பைக்குகள் மற்றும் கார்கள் மீதும் சுஷாந்த் சிங் ராஜ்புத் காதல் கொண்டிருந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








