பாலிவுட்டில் இதுக்கும் குறைச்சலே இல்ல!! குறிப்பா இந்த பிராண்ட் காரை வாங்குறாங்க - லிஸ்ட்டில் இருப்பவர்கள்...
பாலிவுட் பிரபலங்கள் என்றதுமே முதலாவதாக நமக்கு நினைவிற்கு வருவது அவர்களது சொகுசு கார்களும், லக்சரியான வாழ்க்கையும் தான். இந்த பாலிவுட் பிரபலம் இன்று இந்த சொகுசு காரை வாங்கினார் என்று அவ்வப்போது செய்திகளை பார்க்க முடிகிறது. அதேநேரம், பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலர் விலை குறைவான எம்ஜி கார்களையும் வைத்துள்ளனர். எம்ஜி கார்கள் சினிமா நட்சத்திரங்களுக்கு தான் விலை குறைவானது. மிடில்-கிளாஸ் மக்களுக்கு விலைமிக்கதே ஆகும்.
இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.7.98 லட்சம். அதுவே எலக்ட்ரிக் அல்லாத காராக குறைந்த விலையில் கிடைக்கும் எம்ஜி அஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.82 லட்சம் ஆகும். பிரிட்டிஷ் கார் பிராண்டான எம்ஜி மோட்டாரின் கார்களை பயன்படுத்தும் சில பாலிவுட் பிரபலங்களை இனி பார்க்கலாம்.

சன்னி லியோன்: பாலிவுட்டை தாண்டி உலகம் முழுவதும் பிரபலமான நடிகையான சன்னி லியோனிடம் எம்ஜி க்ளோஸ்டர் கார் உள்ளது. இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்வதிலேயே விலையுயர்ந்த காரான க்ளோஸ்டர் ஓர் முழு-அளவு எஸ்யூவி கார் ஆகும். இந்த காரை நடிகை சன்னி லியோன் வெள்ளை நிறத்தில் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு வரையில் சன்னி லியோன் தனது தினசரி பயன்பாட்டிற்கு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் என்ற லக்சரி காரையே பயன்படுத்தி வந்தார். ஆனால், மும்பையில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கனமழையில் சன்னி லியோனின் இந்த பிஎம்டபிள்யூ கார் சேதமடைந்துவிட்டது. அதன் இடத்தை நிரப்பும் பொருட்டும், அதேநேரம் இந்திய சாலைகளுக்கு ஏற்ப அதிக கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்ட ஆஃப்-ரோடு திறன்களுடனும் காரை தேடிய சன்னி லியோனுக்கு எம்ஜி க்ளோஸ்டர் பிடித்துப்போனது.

ஹேமா மாலினி: ஹேமா மாலினி பாலிவுட் நட்சத்திரம் என கூறினாலும், நம் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. பாலிவுட் சினிமா வட்டாரத்தில் எம்ஜி கார் ஒன்றை முதன்முறையாக வாங்கியவர் இவர் தான். 2019இல் இந்தியாவில் தனது முதல் காராக ஹெக்டரை எம்ஜி மோட்டார் அறிமுகப்படுத்தியது.
அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே எம்ஜி ஹெக்டர் காரை ஹேமா மாலினி வாங்கிவிட்டார். இவர் வைத்திருக்கும் ஹெக்டர் கார் சில்வர் நிறத்தில் உள்ளது. புகழ்பெற்ற நடிகை ஹேமா மாலினியின் கார் கலெக்ஷனில் எம்ஜி ஹெக்டர் மட்டுமின்றி, பல்வேறு மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களும் உள்ளன.

ஷாருக்கான்: முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் உள்ள லக்சரி கார்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இவரிடம் கார்கள் வரிசைக்கட்டி உள்ளன. ஹூண்டாய் நிறுவனத்திற்கு சில காலம் அம்பாசிடாராகவும் ஷாருக்கான் இருந்துள்ளார். எம்ஜி பிராண்டில் இவரிடம் க்ளோஸ்டர் என்ற லக்சரி எஸ்யூவி கார் உள்ளது.
ஷாருக்கானிடம் இருப்பது வெள்ளை நிறத்திலான க்ளோஸ்டர் கார் ஆகும். இதனை அவர் தனது பாதுகாப்பு வாகனங்களுள் ஒன்றாக பயன்படுத்தி வருகிறார். நடிகர் ஷாருக்கானிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களில் ஆடி, பிஎம்டபிள்யூ என ரோல்ஸ்-ராய்ஸ் கார் வரையில் உள்ளன. ஷாருக்கான் அவ்வப்போது அவரது ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரில் தான் காட்சித் தருகிறார்.

சுஷ்மிதா சென்: பிரபல நடிகை சுஷ்மிதா சென் சமீபத்தில்தான் புத்தம் புதிய காராக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி.எல்.இ கூபே காரை வாங்கினார். இவரிடம் வெள்ளை நிறத்தில் எம்ஜி க்ளோஸ்டர் கார் உள்ளது. சமீப காலமாக வெளியாகும் சுஷ்மிதா சென்னின் புகைப்படங்களில் அவரது க்ளோஸ்டர் காரை பரவலாக பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் நடிகர்கள் லக்சரி கார்களை பயன்படுத்தவே விரும்புவர். ஆனால் மைலேஜ் என்ற ஒரு விஷயத்தினால், முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அவற்றை பயன்படுத்துகின்றனர். அதுவே, அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதாக இருந்தாலோ அல்லது இதர வீட்டு வேலைகளுக்கோ எம்ஜி போன்ற கார்களை பயன்படுத்துவதே நல்லது என நினைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









