சொகுசு காரில் பந்தா காட்டாமல் தம்மாத்துண்டு வண்டியை ஓட்டிய சூப்பர் ஸ்டார்... ஆனா காரணம் இருக்கு...
ஏராளமான சொகுசு கார்கள் இருக்கும் நிலையில், தம்மாத்துண்டு வண்டியை சூப்பர் ஸ்டார் ஓட்டியதால், ரசிகர்கள் திகைத்து போயுள்ளனர்.

திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். குறிப்பாக நடிகர், நடிகைகள்தான் காஸ்ட்லி கார்களை வாங்கி குவிக்கின்றனர். கோடிகளில் சம்பளம் வாங்குவதால், கார்களின் விலை எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது.

பொதுவாக சொகுசு கார்களை வாங்குவதற்குதான் திரையுலகினர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு சிலர் ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது ஆர்வம் உடையவர்களாகவும் உள்ளனர். ஆனால் அரிதிலும் அரிதாக ஒரு சிலர் மட்டுமே வின்டேஜ் கார்களை அதிகமாக விரும்புகின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.

அமிதாப் பச்சன் வீட்டில் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. இதில், ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, பென்ட்லீ அர்னேஜ் ஆர், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்500, போர்ஜே கேமேன் எஸ், ரேஞ்ச் ரோவர் வோக், மினி கூப்பர் எஸ் ஆகியவை முக்கியமானவை. அமிதாப் பச்சன் கார்களை எவ்வளவு அதிகமாக நேசிக்க கூடியவர் என்பதற்கு இந்த கலெக்ஸன் ஒரு சாட்சி.

ஆனால் என்னதான் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் இருந்தாலும் கூட, வின்டேஜ் கார்கள்தான் அமிதாப் பச்சனின் முதன்மையான சாய்ஸ். தற்போது அமிதாப் பச்சன் அதனை நிரூபித்துள்ளார். மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட வின்டேஜ் காருடன் தான் இருப்பது போன்ற புகைப்படத்தை அமிதாப் பச்சன் தற்போது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில், ''உங்களால் பேச முடியாத நேரங்கள் இருந்திருக்கும். நான் தற்போது அப்படித்தான் உள்ளேன். எதையாவது வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். ஆனால் எதுவுமே வரவில்லை'' என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அழகான வின்டேஜ் கார்தான், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை பேச முடியாமல் வாயடைக்க செய்துள்ளது.

டிவிட்டரில் தற்போது இந்த பதிவு வைரலாகியுள்ளது. தன் வீட்டிற்கு வெளியே அந்த காரை நிறுத்தி அதனுடன் அட்டகாசமான ஒரு புகைப்படத்தை அமிதாப் பச்சன் எடுத்து கொண்டுள்ளார். ஆனால் ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. இந்த அழகான காரை தனக்காக அமிதாப் பச்சன் வாங்கியுள்ளாரா? என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அதற்கான விடை எங்களுக்கும் தெரியவில்லை.

ஆனால் அந்த கார் பற்றிய விஷயங்களை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். அமிதாப் பச்சன் வெளியிட்ட புகைப்படத்தில் இருப்பது ஃபோர்டு ப்ரீஃபெக்ட் (Ford Prefect) கார் ஆகும். கடந்த 1938ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை ஃபோர்டு நிறுவனம் ப்ரீஃபெக்ட் கார்களை உற்பத்தி செய்தது. உலகின் பல்வேறு நாடுகளில் ஃபோர்டு ப்ரீஃபெக்ட் கார் விற்பனை செய்யப்பட்டது.

இதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, அர்ஜென்டினா மற்றும் கனடா ஆகிய நாடுகள் முக்கியமானவை. சிறப்பு வாய்ந்த ஃபோர்டு ப்ரீஃபெக்ட் காருடன் அமிதாப் பச்சன் இருப்பது போன்ற படங்கள் மட்டுமல்லாது, அவர் அந்த காரை ஓட்டுவது போன்ற புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதில், அமிதாப் பச்சன் டிரைவர் இருக்கையில் உள்ளார். அவருக்கு பக்கத்தில் ஆண் ஒருவர் அமர்ந்துள்ளார். அவர்கள் தவிர பெண் ஒருவரும் பின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். இந்த காரை எடுத்து கொண்டு அமிதாப் பச்சன் தனது வீட்டிற்கு வெளியே ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்துள்ளார். அமிதாப் பச்சன் மட்டுமல்லாது, அவரது ரசிகர்களும் இந்த காரை விரும்பியுள்ளனர்.

அமிதாப் பச்சன் இந்த காரை வாங்கியுள்ளாரா? என்பது தெரியாத சூழலில், 'உங்கள் கலெக்ஸனில் புதிய கார் சேர்ந்ததற்காக வாழ்த்துக்கள்' என அவரது ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகரோ, 'புதிய காருடன் உங்களை பார்த்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என தெரிவித்துள்ளார். இன்னும் சிலரோ, கடந்த காலங்களில் மஞ்சள் நிற கார்களுடன் அமிதாப் பச்சன் இருந்த படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்று என்னதான் அதிநவீன கார்கள் வந்துவிட்டாலும் கூட, ஒரு சில கார்கள் மட்டும் காலத்தால் அழியாத காவியமாகி திகழ்கின்றன. அப்படிப்பட்ட ஒரு காரைதான் அமிதாப் பச்சன் தற்போது ஓட்டியுள்ளார். இது அமிதாப் பச்சனின் ரசிகர்களுக்கும், வின்டேஜ் கார் விரும்பிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








