சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ் அப்பில் எடுப்பது இவ்வளவு ஈஸியா? இது தான் ரூல்ஸ்!
சென்னை மெட்ரோவிற்கான டிக்கெட்டை இனி வாட்ஸ்அப் மூலமும் எடுக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது மட்டுமல்ல இந்த டிக்கெட்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பயணத்திற்கான டிக்கெட்டை வாட்ஸ் அப்பில் எடுப்பது எப்படி என விரிவாக காணலாம் வாருங்கள்.
சென்னையில் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில் மூலம் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட் எடுக்கும் வசதியைப் பல விதங்களில் எடுக்கும் வகையில் புதிய புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலுக்கு டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் நிர்வாக இயக்குநர் சித்திக் துவக்கி வைத்தார். இதன்படி மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் இனி தங்கள் வாட்ஸ் அப் மூலமாகவே ரயில் டிக்கெட்களை புக்கிங் செய்து கொள்ள முடியும். இப்படியாக புக்கிங் செய்பவர்களுக்கு 20 சதவீதம் டிக்கெட் விலையில் தள்ளுபடியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டை வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்க 8300086000 என்ற எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்ணை உங்கள் செல்போனில் சேமித்துக்கொண்ட பின்பு இந்த நம்பருக்கு வாட்ஸ்அப்பில் ஏதாவது மெசேஜ் அனுப்பினால் போதும் பதிலுக்கு உங்களுக்கு வசதியான மொழியைத் தேர்வு செய்யச் சொல்லி கேள்வி ஒன்று வரும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

இதில் உங்கள் மொழியைத் தேர்வு செய்த பின்பு 2 ஆப்ஷன் வரும் ஒன்று டிக்கெட்டை புக் செய்யும் ஆப்ஷன் மற்றொன்று நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள மெட்ரோ ஸ்டேஷனை கண்டுபிடிக்கும் ஆப்ஷன் இந்த இரண்டில் டிக்கெட் புக் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்த பின்பு நீங்கள் மெட்ரோ ரயிலில் ஏறும் ஸ்டேஷனையும் இறங்கும் ஸ்டேஷனையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
இதன் பின்பு இந்த டிக்கெட்டிற்கான கட்டணம் உங்களுக்குக் காட்டப்படும். இந்த கட்டணத்தை நீங்கள் யூபிஐ, நெட்பேங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் கட்ட முடியும். பணத்தைச் செலுத்திய பின்பு ஒரு க்யூ ஆர் கோர்டு உங்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு வரும் அந்த க்யூஆர் கோடு தான் உங்கள் டிக்கெட் இதைப் பயன்படுத்தி நீங்கள் பயணம் செய்யலாம்.

இப்படியாக புக் செய்யப்படும் டிக்கெட்களை புக் செய்த நாளிலேயே பயன்படுத்த வேண்டும். மறுநாளுக்கு அது செல்லாமல் போய் விடும். அதே நேரம் என்ட்ரி ஸ்டேஷனில் நுழைந்த 120 நிமிடங்களுக்குள் வெளியேறிவிட வேண்டும். என்ட்ரி ஆன ஸ்டேஷனிலிருந்தே வெளியேற வேண்டும் என்றால் 20 நிமிடங்களுக்குள் வெளியேறிவிடவேண்டும்.
மெட்ரோ ரயில் செயல்படும் நேரத்தில்தான் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும் மற்ற நேரங்களில் புக்கிங் செய்ய முடியாது. ஒரு முறை புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது. இவை எல்லாம் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் புக் செய்ய மெட்ரோ நிர்வாகம் விதித்துள்ள விதிமுறைகள்.
இதே வாட்ஸ் அப் நம்பரில் மெட்ரோ ரயிலின் கட்டண விபரங்கள், விதிமுறைகள், உதவி எண்கள், மெட்ரோ ரயில் செயல்படும் நேரம் குறித்த தகவல்கள், நீங்கள் அதிகம் பயணிக்கும் ரூட்டை புக் மார்க் செய்யும் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதையும் மக்கள் பயன்படுத்தி தகவல்களைத் தெரிந்து கொண்டு பயணங்களைச் சுலபமாக்கிக்கொள்ளலாம்.
சென்னை மெட்ரோவில் தினமும் சுமார் 2.5 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இவர்களுக்கு நேரடியாகச் சென்று டிக்கெட் எடுக்கும் ஆப்ஷன் போக மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு மெட்ரோ கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஒரே மெட்ரோ கார்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோகளிலும் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னை பஸ்களிலும் இந்த மெட்ரோ கார்டு மூலம் பயணிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெட்ரோ பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாகி வரும் சூழ்நிலையில் இப்படியாக பல்வேறு வழிகளில் மெட்ரோ டிக்கெட்களை எடுக்கும் வசதி நிச்சயம் மக்களுக்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது. இதனால் மக்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இன்னும் புதிய மற்றும் எளிமையான வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications
