பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் விற்பனையை கை விட போகுதா! உலகின் முதல் ஹைட்ரஜன் பவர்டு விமானத்தை தயாரிக்க போகுதாம்!
இந்தியாவின் முன்னணி ஆயில் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited) உள்ளது. இந்த நிறுவனம் உலகின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பறக்கும் வாகனத்தை தயாரிக்க இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாரத் பெட்ரோலியம் மட்டுமே இந்த பணியில் ஈடுபடப் போவதில்லை, இன்னும் சில நிறுவனங்களும் இணைந்தே இந்த பறக்கும் வாகனத்தைத் தயாரிக்க இருக்கின்றன. இதற்கான ஒப்பந்தத்திலேயே நிறுவனங்கள் சமீபத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.
அதாவது, ஹைட்ரஜனில் பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் பணியில் பங்களிக்க உள்ள நிறுவனங்கள் அனைத்தும் கூட்டணியைத் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடப்பட்டிருக்கின்றன. இந்த பறக்கும் வாகனம் செங்குத்தாக டேக் - ஆஃப் மற்றும் தரை இறங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

அதாவது, விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கும் பறக்கும் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் போல இது செயல்படும் என தெரிகின்றது. இந்த திறனைக் கொண்டு உள்ள காரணத்தினால் இந்த பறக்கும் ஹைட்ரஜன் பவர்டு வாகனத்திற்கு விமானத்திற்கு தேவைப்படுவதைப் போல ஓடுதளம் மற்றும் இறங்குதளம் என தனியாகத் தேவைப்படாது.
அத்துடன், ஹைட்ரஜனில் இயங்கும் என்பதால் இப்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்களைக் காட்டிலும் மிகக் குறைவான செலவிலேயே இதன் இயக்கத்தை மேற்கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது. அத்துடன், அது சுற்றுச் சூழலுக்கு உகந்த நண்பனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய ஓர் பறக்கும் வாகனத்தை தயாரிக்கவே பிரமாண்ட கூட்டணி தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

பாரத் பெட்ரோலியம் (BPCL), மஹாரத்னா பிஎஸ்யூ (Maharatna PSU), பிளஜ் ஏரோஸ்பேஸ் (BluJ Aerospace), புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிறுவனம் (Agency for New and Renewable Energy Research and Technology), கொச்சின் சர்வதேச ஏர்போர்ட் லிமிடெட் (Cochin International Airport Limited) மற்றும் கேரளா அரசாங்கம் உள்ளிட்டேரே உலகின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பறக்கும் வாகனத்தைத் தயார் செய்ய இணைந்திருக்கின்றனர்.
இந்த கூட்டணியில் பாரத் பெட்ரோலியத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என நீங்கள் கேட்கலாம். ஆயில் உற்பத்தி நிறுவனமான இது ஹைட்ரஜன், ஹைட்ரஜனை நிரப்பும் மையம் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது. முதல் கட்டமாக இந்த ஹைட்ரஜன் நிரப்பும் மையங்களை அது கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதியிலேயே கட்டமைக்க இருக்கின்றது.
ஆகையால், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திலேயே உலகின் முதல் ஹைட்ரஜனில் பறக்கும் வாகனம் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, பாரத் பெட்ரோலியம் உள் நாட்டிலேயே வைத்து புரோட்டான் எக்ஸ்சேஞ்ச் மெம்பரேன் (Proton Exchange Membrane) ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதன் வாயிலாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லிற்காக பிற நாடுகளை இந்தியா நம்பியிருப்பதை தவிர்த்துக் கொள்ள முடியும். அத்துடன், தடையில்லா இயக்கத்தை உறுதிப்படுத்தவும் இது பெரும் உதவியாக இருக்கும். நகர்புற போக்குவரத்தைக் கருத்தில் கொண்டே இந்த ஹைட்ரஜனில் பறக்கும் வாகனத்தை உருவாக்க இருக்கின்றனர்.
முதல் கட்டமாக கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திலும், இதற்கு பின்னர் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த சேவை பயன்பாட்டிற்கு வரும் என நம்பப்படுகின்றது. பாரத் பெட்ரோலியும் பசுமை இயக்க ஆற்றலை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றது. இதற்காக அந்த நிறுவனம் ரூ. 1 லட்சம் கோடியை ஒதுக்கி வைத்திருக்கின்றது.
இத்துடன், மின்சார வாகனம் (EV)-களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஹைட்ரஜன் வாகனங்களின் இயக்கத்திற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியிலும் அது களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விரைவில் மின்சாரத்தில் இயங்கும் கால் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது நாட்டில் ஹைட்ரஜனில் இயங்கும் பறக்கும் டாக்சிகளும் பயன்பாட்டிற்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது. இதற்கு இப்போதே இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications








