ஒரு குடும்பத்தை மீட்க பொலிரோ காரில் ஆற்று வெள்ளத்தை கடந்த போலீஸ்! சாத்தியமானது எப்படி?
ஆற்றில் சீறிப்பாயும் வெள்ளத்திற்கு நடுவே, மஹேந்திரா பொலிரோ காரின் உதவியுடன் தரைப்பாலத்தை கடந்து, ஒரு குடும்பத்தை போலீசார் பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.
ஆற்றில் சீறிப்பாயும் வெள்ளத்திற்கு நடுவே, மஹேந்திரா பொலிரோ காரின் உதவியுடன் தரைப்பாலத்தை கடந்து, ஒரு குடும்பத்தை போலீசார் பத்திரமாக மீட்டிருக்கின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மஹேந்திரா பொலிரோ காரில் உள்ள வசதிகளால், இந்த மீட்பு பணி எப்படி சாத்தியமானது? என்பது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

போலீஸ் என்றாலே நம்மில் பலருக்கும் அலர்ஜிதான். அலர்ஜியையும் தாண்டி அதனை வெறுப்பு என்றும் சொல்லலாம். போலீஸ் ஒழுங்காக வேலை செய்வதில்லை, சுய நலமாக நடந்து கொள்கின்றனர், லஞ்சம் வாங்குகின்றனர் என கடுமையாக விமர்சிப்பதை நம்மில் பலரும் வாடிக்கையாக கொண்டிருக்கிறோம்.

போலீஸிடம் கிடைத்த மோசமான அனுபவங்கள் நம்மை அப்படி பேச வைக்கிறது. ஆனால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்ட ஒரு குடும்பத்தை, மஹேந்திரா பொலிரோ காரின் உதவியுடன், போலீசார் மிக பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.

தங்கள் உயிரை துச்சமென நினைத்து, ஆற்று வெள்ளத்தில் மஹேந்திரா பொலிரோ காரை இறக்கி, அவர்கள் செய்த துணிச்சலான விஷயம், அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவை பார்த்தால், போலீஸை பற்றிய உங்களின் எண்ணம் மாறக்கூடும்.

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது பரப்புழா கிராமம். இந்த கிராமத்தில் ஆறு ஒன்று பாய்கிறது. இந்த ஆற்றை கடப்பதற்காக, கிராம மக்களுக்கு தரைப்பாலம் ஒன்று கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் ஆற்றின் ஒரு கரையில், ஒரு குடும்பத்தினர் சிக்கி கொண்டனர். தங்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு, அவர்கள் அனைவரும் ஆற்றை கடந்து சென்றேயாக வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் ஆற்றை கடக்க இருந்த ஒரே வாய்ப்பான தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி விட்டது.

நேரம் ஆக ஆக ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்து, நிலைமை மிக மோசமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருந்தது. எனவே தரைப்பாலம் வழியாக ஆற்றை கடந்தால், உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய அபாயம் இருந்தது. அந்த நேரத்தில், கேரள போலீசார் மஹேந்திரா பொலிரோ காரில் அங்கு வந்தனர்.

ஆற்றின் கரையில் சிக்கி தவித்த குடும்பத்தினரின் சூழ்நிலையை போலீசார் நன்றாகவே புரிந்து கொண்டனர். எனவே மஹேந்திரா பொலிரோ காரில், அவர்கள் அனைவரும் ஏற்றிக்கொண்டு, தரைப்பாலத்தை கடப்பது என்ற சவாலான முடிவை அவர்கள் எடுத்தனர்.

இதன்படி அவர்கள் அனைவரையும் மஹேந்திரா பொலிரோ காரில் ஏற்றிக்கொண்டு, ஆற்றை வெற்றிகரமாக கடந்து விட்டனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்தனர். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
போலீசாரின் இந்த மீட்பு பணியின்போது, ஏதேனும் சிறு தவறு நடந்திருந்தால் கூட, காரில் பயணித்த அனைவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். ஒருவேளை தண்ணீரின் வேகம் திடீரென அதிகரித்திருந்தால், கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கும்.

இல்லாவிட்டால் சீறிப்பாயும் தண்ணீர் காருக்குள் புகுந்து, கார் தரைப்பாலத்தின் நடு வழியில் நின்றிருந்தால், என்னவாகி இருக்கும்? என யோசித்து பாருங்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டுமே நடைபெறவில்லை. இதற்கு போலீசாருடன் சேர்த்து, மஹேந்திரா நிறுவனத்திற்கும் நன்றி சொல்ல வேண்டும்.

மஹேந்திரா பொலிரோ காரில், 2523 சிசி, 4 சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன், மஹேந்திரா பொலிரோ கார் விற்பனைக்கு வருகிறது.

மஹேந்திரா பொலிரோ காரின் க்ரவுண்டு க்ளியரன்ஸ் 183 எம்எம். க்ரவுண்டு க்ளியரன்ஸ் அதிகமாக இருந்தால்தான், கரடு முரடான சாலைகளிலும், ஆறு போன்ற தண்ணீர் நிறைந்து காணப்படும் நீர் நிலைகளிலும், மிக எளிதாக பயணிக்க முடியும்.

நீர் நிலைகளை கடப்பது, மலையேற்றம் போன்ற ஆப்ரோடு டிரைவிங்கிற்கு, கார்களில் உள்ள 4x4 சிஸ்டம் கை கொடுக்கும். கார்களில் உள்ள 4 சக்கரங்களும், இன்ஜின் பவரால் இயக்கப்படுவதுதான் 4 வீல் டிரைவ். எனவேதான் பொலிரோவின் 4x4 வேரியண்ட்டை, மஹேந்திரா நிறுவனம் போலீசாருக்கு விற்பனை செய்கிறது.

மஹேந்திரா பொலிரோ காரில் உள்ள இதுபோன்ற வசதிகளால்தான் போலீசாரால், ஆற்றை வெற்றிகரமாக கடக்க முடிந்திருக்கிறது. இதுதவிர கார் முழுவதும் பயணிகள் நிறைந்திருக்கும் சமயத்திலும், வேகமாக வரும் தண்ணீரை எதிர்த்து, மஹேந்திரா பொலிரோ காரால் பயணிக்க முடிந்திருக்கிறது. பொலிரோ உதவியுடன், வெற்றிகரமாக ஆற்றை கடந்த போலீசாரின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்.


Click it and Unblock the Notifications








