2026ல் டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தப்போறங்களா? பிஎஸ்7ல் வருகிறது புதிய ரூல்ஸ்!
இந்தியா முழுவதும் தற்போது பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு மாசுவை வெளியிடும் வாகனங்களை தான் தயாரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில் பிஎஸ் 7 கட்டுபாட்டு விதிகள் அமலக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால் டீசல் இன்ஜின் கொண்ட பயணிகள் வாகனங்கள் விற்பனையிலிருந்து நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தற்போது மாசு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இயற்கைக்கு எதிரான மாசு மிகப்பெரிய அளவு தீங்கை விளைவித்துவருவதால் எதிர்காலத்தில் இந்த மாசு மிக மோசமான விளைவுகளை உருவாக்கலாம். இதனால் தற்போது உலகம் முழுவதும் மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இந்த மாசுவை கட்டுப்படுத்த பாரத் ஸ்டேஜ் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

இந்த பாரத் ஸ்டேஜ் விதிமுறைகள் மாசுவை வெளியிடும் அனைத்து துறைகளுக்கும் பொதுவாக கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ளது. குறிப்பாக வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தங்கள் தயாரிப்புகள் எவ்வளவு மாசுவை வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருக்கிறது. தற்போது இந்தியாவில் பிஎஸ் 6 கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ளது. விரைவில் பிஸ் 7 விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
பிஎஸ் 7 கட்டுப்பாட்டு விதிகள் 2026 அல்லது 2027ம் ஆண்டில் அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்தால் விரைவில் இந்திய சாலைகளிலிருந்து டீசல் இன்ஜின் கார்கள் காணாமல் போகும் என சொல்லப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றம் தான்.

வாகனங்களில் இருந்து வெளியேறும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஒரு கி.மீக்கு 60 மில்லி கிராமிற்கு மேல் இருக்க கூடாது என பிஎஸ் 6 விதிமுறையில் இருக்கிறது. இது பிஎஸ் 7 விதிமுறையில் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி குறைத்தால் மேலும் இதன் மாசுவை குறைக்க வாகன தயாரிப்பு நிறவனங்கள் தங்கள் வாகனங்களில் செலக்டிவ் கேட்டலிஸ்ட் ரிடெக்ஷன், டீசல் பர்டிகுலேட் ஃபில்டர்கள், அட் ப்ளூ டோஸிங் யூனிட் உள்ளிட்ட கருவிகளை பொருத்த வேண்டும்.
இந்த கருவிகளை பொருத்தினால் ஒரு வாகனத்தின் விலை ரூ1.8 லட்சம் முதல் ரூ2.5 லட்சம் என்ற அளவில்விலை அதிகமாக வாய்ப்புள்ளது. இவ்வளவு விலை அதிகமானால் இது மார்கெட்டில் விற்பனையாவது சிரமமாக இருக்கும். டீசல் கார்கள் செலவை குறைப்பதற்காக கொண்டு வரப்படும் நிலையில் இந்த அதிக விலை செலவை குறைக்காமல் அதிகரித்துவிடும். இதனால் டீசல் வாகனங்களை மக்கள் விரும்பமாட்டார்கள். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்களே தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பிஎஸ் 7 கட்டுப்பாட்டு விதிகளில் டீசல் இன்ஜின் மீதான கட்டுப்பாடு பயணிகள் வாகனங்கள் மீது தான் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பஸ்கள், டிரக்குகள், டிராக்டர்கள், கட்டுமான இயந்திரங்கள் எல்லாம் பிஎஸ் 7 கட்டுப்பாட்டு விதிகளில் பெரிய ஆபத்தை சந்திக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயந்திரங்களுக்கு தற்போது டீசல் தான் பிரதான எரிபொருளாக இருப்பதால் இந்த கட்டுப்பாட்டு விதிகளில் சில தளர்வுகள் இருக்கவும் வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டீசல் இன்ஜின்கள் ஒரு காலத்தில் சிறப்பாக விற்பனையாகும் இன்ஜினாக இருந்தாலும் மாருதி போன்ற நிறுவங்கள் டீசல் இன்ஜினை தற்போது நிறுத்திவிட்டன. பெட்ரோல் இன்ஜின் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்கிறது. தற்போது டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் டீசல் இன்ஜின் கொண்ட பயணிகள் வாகனங்களை அதிகமாக விற்பனை செய்தாலும் விரைவில் இந்த நிறுவனமும் டீசல் இன்ஜின் விற்பனையை நிறுத்த வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









