எலெக்ட்ரிக் கார் வாங்குனா வருமான வரி குறையுமா? பிப். 1ம் தேதி வரப்போகும் முக்கிய அறிவிப்பு!
வரும் பிப்ரவரி 1ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பல்வேறு சலுகைகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தனிநபர் கட்டும் வருமான வரி குறைய வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது மிக முக்கியமான பேச்சு என்றால் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி நடக்க உள்ள மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்த பேச்சு தான். மத்திய அரசு தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்ய தீவிரமான பணிகளை செய்து வருகிறது. இந்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் செக்டாரில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் அறிவிப்புகளாக வெளியாகும் என மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. அதன்படி இந்த ஆண்டு ஆட்டோமொபைல் செக்டாரில் நிதி என்பது அதிகமாக ஒதுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தற்போது ஆட்டோமொபைல் செக்டார் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகமாக இருப்பதால் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசும் பசுமையான மொபிலிட்டியை விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக நமக்கு தெரிகிறது. இதனால் மத்திய அரசு ஏற்கனவே கொடுத்து வந்த ஃபேம் மானியத்தை தொடர்ந்து கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

மத்திய அரசு ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக வழங்கி வந்த ஃபேம் மானியத்தை தொடர்ந்து வழங்க அதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி என்பது குறைக்கப்படும் என்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களின் ஜிஎஸ்டியும் குறைக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த இரண்டு அறிவிப்பும் தற்போது மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்பட்டாலும், தனிநபர்களுக்கான மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வருமான வரியில் குறிப்பிட்ட அளவு பணத்தை குறைத்துக் கொள்ள மத்திய அரசு முன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னரும் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 80EED பிரிவின் கீழ் ரூ1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளித்து வந்தது. தற்போது வெளியாக உள்ள இந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பும் மேலும் இந்த ரூ1.5 லட்சம் என்பதை ரூ2.5 லட்சமாக உயர்த்துவதற்கான அறிவிப்பும் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆய்வுகளை செய்து வருவதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மத்திய அரசு ஏற்கனவே ஃபேம் என்ற மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கி வந்தன. எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தின் விலை குறைவதற்காக இந்த மானியத்தை முதல் கட்டமாக நேரடியாக வாடிக்கையாளர்களுக்கும் இரண்டாம் கட்டமாக நேரடியாக வாகன தயாரிப்பாளர்களுக்கும் வழங்கி வந்தன. கடந்த மே மாதம் வரை இந்த ஃபேம் மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதன் பிறகு இதில் பெரிய மாற்றம் செய்யப்பட்டு மானியம் குறைக்கப்பட்டது.

இந்த ஃபேம் மானியம் குறைக்கப்பட்டதால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகரித்து விற்பனை ஓரளவு மந்தமானது. ஆனால் அடுத்தடுத்து வந்த பண்டிகை காலங்களால் விற்பனை மீண்டும் பழைய நிலையை எட்டி விட்டது. இருந்தாலும் தற்போது மானியம் வழங்கினால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரிக்கும் என்பதால் மத்திய அரசு இந்த மானியத்தை வழங்க திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகன விற்பனைக்காக இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக தனிநபருக்கான வருமான வரியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சலுகை வழங்கும் திட்டத்தை நீட்டித்து அறிவிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த அறிவிப்பு வெளியானால் நிச்சயம் இந்திய மக்களுக்கு ஒரு ஜாக்பாட் தான்.


Click it and Unblock the Notifications









