அல்வா கொடுக்காம இருக்கனும்.. 2025பட்ஜெட்டை பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய ஆட்டோமொபைல் துறை!
ஒட்டுமொத்த இந்தியாவும் நாளைய நாளுக்காகவே காத்துக் கொண்டு இருக்கின்றது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நாளைய தினம் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் புதிய 2025-26 பட்ஜெட்டையே மொத்த நாடும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு உள்ளது. அல்வா கொடுக்குமா அல்லது நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்டெடுப்பதற்கான திட்டங்களை மோடி அரசாங்கம் அறிவிக்குமா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் என்ன மாதிரியான அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது.
துறையின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்றே அதன் எதிர்பார்ப்பு உள்ளது. மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற பெரிய பெரிய ஜாம்பவான் நிறுவனங்களும் இந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் மின்சார வாகனங்கள், பெட்ரோல்-ஹைபிரிட் வாகனங்களுக்கு என பிரத்யேக திட்டங்களை அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நம்மில் பலர் மத்தியில் எழும்பியிருக்கின்றது. இதுதவிர, வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பிலும் புதிய மாற்றங்களை அரசு இந்த பட்ஜெட் வாயிலாக மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், பழைய வாகனங்களுக்கான புதிய ஸ்கிராப் பாலிசியையும் மோடி அரசாங்கம் அறிவிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு ஆட்டோத்துறைக்கு எழும்பி இருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த எதிர்பார்பிற்கான பதிலும் நாளை தினமே கிடைக்க உள்ளது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி, ஹைப்ரிட் வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறைப்பு செய்வதற்கான அறிவிப்புகள் வெளியாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
ஆனால், உறுதிச் செய்யப்படாத தகவல் ஆகும். தற்போது விதிக்கப்படும் 28 சதவீத வரியில் இருந்து 18 சதவீமாக குறைக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரி விதிப்பு குறைப்பு செய்யப்படும் எனில் ஹைபிரிட் வாகனங்களின் விற்பனை இப்போது இருப்பதைக் காட்டிலும் பலமடங்காக அதிகரிக்கக் கூடும்.
இந்த வாகனங்களின் பயன்பாட்டால் காற்று மாசுபாட்டைக் கணிசமாக குறைக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், இப்போது மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு வழங்கி வரும் சில சிறப்பு சலுகைகள் பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைபிரிட் வாகனங்களுக்கும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல், மின்சார வாகனங்களின் இயக்கம் மற்றும் நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான சலுகைகளும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டும் அல்ல மின்சார வாகனங்கள் சார்ந்த சாதனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் அரசு 2025-26 பட்ஜெட் வாயிலாக மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல், ஹைட்ரஜன் பவர்டு வாகனங்களைக் கருத்தில் கொண்டும் சில திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என ஆட்டோத்துறை எதிர்பார்க்கின்றது. மேலும், நாடு முழுக்க மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் இந்த பட்ஜெட் வாயிலாக மத்திய அரசு முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நாட்டில் மின் வாகன இயக்கத்தை தடையின்றி மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கின்ற மாதிரியான பல்வேறு திட்டங்கள் 2025-26 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஹைபிரிட் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி மற்றும் சாலை வரி குறைப்பு, மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் ஆகியவையும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








