என்னங்க சொல்றீங்க... ரூ.27 லட்சத்தில் புகாட்டி காரா!! யாரா இருந்தாலும் ஏமாந்து போயிடுவாங்க...
ரூ.27 லட்சம் மதிப்பில் புகாட்டி சிரோன் (Bugatti Chiron) காரின் அச்சு அசல் போலி கார் வியாட்நாமில் உருவாக்கப்பட்டுள்ளது. கேரள இளைஞர்கள் இருவர் நேரில் வியாட்நாமிற்கு சென்று இந்த போலி சிரோன் கார் குறித்து பதிவிட்டுள்ள வீடியோவினை இனி பார்க்கலாம்.
ஸ்போர்ட்ஸ் கார்களில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? ஆம் எனில் நிச்சயம் உங்களுக்கு புகாட்டி சிரோனை பற்றி தெரிந்திருக்கும். பொது மக்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட உலகின் வேகமாக கார் சிரோன் ஆகும். இதனாலேயே இந்த காரின் விலை மிக அதிகம் என்பதால், பெரும் செல்வந்தர்களிடம் மட்டுமே புகாட்டி சிரோன் உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உருவாக்கப்படுவதால், சில பணக்காரர்களாலும் காசு இருந்தும் இந்த புகாட்டி காரை வாங்க முடிவதில்லை.

குறிப்பாக, நமது இந்தியாவில் யாரிடமும் சிரோன் கார் இல்லை. இருப்பினும், இங்கு சிலர் புகாட்டி சிரோனின் தோற்றத்தில் ஒரு காரை சொந்தமாக உருவாக்கியுள்ளனர். இவ்வாறு இந்த போலி புகாட்டி சிரோன் காரை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட 1 வருடம் தேவைப்பட்டுள்ளது. இந்த பணிகளை செய்தவர்கள் நம் இந்தியர்கள் கிடையாது. வியாட்நாம் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆவர்.
இவ்வாறு ஒரு கார் வியாட்நாமில் இருப்பதை அறிந்த கேரள இளைஞர்கள் இருவர் அந்த காரை நேரில் பார்த்து, அதுகுறித்த வீடியோவினை தங்களது யுடியூப் சேனலில் பதிவிட்டுள்ளனர். இருப்பினும் இந்த வீடியோவில், எவ்வாறு புகாட்டி சிரோன் போன்று கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பதை காட்டப்படவில்லை. அனைத்து பணிகளும் நிறைவடைந்த காரையே காட்டியுள்ளனர். காரின் தோற்றம் அருமையாக உள்ளதை இந்த இடத்தில் பதிவு செய்தே ஆக வேண்டும்.

கார் பார்ப்பதற்கு உண்மையில் புகாட்டி சிரோன் போன்றே உள்ளது. இது புகாட்டி சிரோன் என்று சொன்னால் யார் வேண்டுமாயின் ஏமாந்துவிடுவார்கள். இதில் இருந்து வடிவமைத்தவர்களின் திறமை தெரிய வருகிறது. நிச்சயமாக வடிவமைத்தவர்கள் நிஜ புகாட்டி சிரோன் காரின் பரிணாம அளவுகளை பரிந்துரைக்கு எடுத்து கொண்டிருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், நிஜ கார்களை உருவாக்க பயன்படுத்தப்படும் களிமண் போலி மாடலை இந்த போலி சிரோன் காரின் உருவாக்கத்திற்காகவும் பயன்படுத்தி உள்ளனர்.
காரின் உருவாக்கத்திற்கு இவர்கள் உலோக குழாய்களையும், உலோக தாள்களையும் பயன்படுத்தி உள்ளனர். இவை அனைத்தும் பொருத்தப்பட்ட பின்னர் கடைசியாக ஃபைபர் கிளாஸை காரின் வெளிப்பக்கம் முழுவதும் ஒட்டியுள்ளனர். இதனால் காரின் வெளிப்பக்க உடலுக்கு வலிமை கிடைத்துள்ளது. காரின் பெரும்பாலான பாடி பேனல்கள் ஃபைபர் கிளாஸால் உருவாக்கப்பட்டுள்ளன. சிரோன் காரின் ஹெட்லைட்கள் இந்த போலி காருக்காக சீனாவில் இருந்து வாங்கி, பொருத்தப்பட்டுள்ளன.

காருக்கு ஓரளவிற்கு ஏற்கக்கூடிய சிரோனின் தோற்றம் கிடைத்தவுடன் பெயிண்ட் அடித்துள்ளனர். ஆரம்பத்தில் நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. உண்மையான சிரோன் கார் இந்த நீலம்-கருப்பு நிற பெயிண்ட்டில் தான் இருக்கும். ஆனால் இந்த நிறத்தில் பெயிண்ட் இந்த போலி சிரோன் காருக்கு எடுப்பாக இல்லை போலும். இதனால் பேர்ல் மற்றும் வெள்ளை நிற பெயிண்ட் பின்னர் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் டொயோட்டாவின் பழைய டபிள்யூ16 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: என்னதான்... பார்த்து, பார்த்து இந்த காரை வடிவமைத்து இருந்தாலும், இது போலி மாடல் ஆகும். ஒரிஜினல் புகாட்டி சிரோன் காருக்கு அருகில் கூட இந்த போலி மாடலால் நிற்க முடியாது. இருந்தாலும், இந்த பணிகளை செய்த வியாட்நாம் இளைஞர்களின் திறமையை பாராட்டியாக வேண்டும். இந்த வேலைகளுக்கு மொத்தமாக ஆன செலவு ரூ.27 லட்சம் தான் என்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications
