மோடி 3.0 வந்தாலும் புல்லட் ரயில் வருவது டவுட் தானா? இது என்னடா புது உருட்டா இருக்குது!
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் பாதையாக மும்பை-ஆமதாபாத் ரயில் பாதை கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில் இது 2026-ம் ஆண்டுக்குள் முழுமையாக கட்டமைக்கப்படுமா என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போது மத்திய அரசு பதில் வழங்கியுள்ளது. இந்த பதில் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எப்படி 2026-ம் ஆண்டிற்குள் புல்லட் ரயில் பயணித்து விடலாம் என நினைத்த மக்கள் பலருக்கு இந்த தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயிலை கொண்டு வருவதற்காக மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே தற்போது புல்லட் ரயில் பாதை தனித்துவமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையில் வரும் 2026ம் ஆண்டிற்குள் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மத்திய அரசும் இந்த பணிகள் எந்த அளவுக்கு வேகமாக நடக்கிறது என அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இதனால் மும்பை ஆமதாபாத் இடையே பயணிக்கும் மக்கள் மத்தியில் விரைவில் புல்லட் ரயில் பயணித்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த புல்லட் ரயில் திட்டத்தை நேஷனல் ஹை ஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம்தான் மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமான பணிகளுக்கான கான்ட்ராக்ட்களை ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளை செய்து வருகிறது. புல்லட் ரயில் இந்தியாவிற்கு வருகை முழுமையாக இந்த நிறுவனம்தான் ஏற்று பணி செய்து வருகிறது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவிற்குள் புல்லட் ரயில் வந்துவிடுமா என்று கேள்வி மத்திய அரசுக்கு எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் தற்போது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில மக்களை பெரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத்தனை நாட்கள் 2026ம் ஆண்டு புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என பேசப்பட்டுள்ள நிலையில் அதிகாரப்பூர்வமாக வந்துள்ள அறிவிப்பில் தகவல் வேறு மாறியாக உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் புல்லட் ரயில் திட்டத்திற்கான அனைத்து காண்ட்ராக்ட்டுகளையும் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது ஒவ்வொரு காண்ட்ராக்டாக வழங்கப்பட்டு காண்ட்ராக்ட் முடியும் நிலையில் தான் அடுத்த காண்ட்ராக்ட்க்கு விண்ணப்பம் பெறப்பட்டு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து காண்ட்ராக்ட்டுகளும் வழங்கப்படும் போது தான் உறுதியாக எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் தெரியும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டமைக்கப்படும் புல்லட் ரயில் பாதை என்பது சுமார் 58கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இதில் குஜராத் மாநிலத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. தற்போது சுமார் 163கிலோமீட்டர் நீலத்திற்கான பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது இதுபோக பல்வேறு இடங்களில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள பணிகளுக்கான 100சதவீத டெண்டர்களும் ஒதுக்கப்பட்டுவிட்டன. மகாராஷ்டிரா மாநிலம் ஒதுக்கப்பட வேண்டிய டெண்டர்கள் மட்டுமே பாக்கியுள்ளது.
இந்த டெண்டர்கள் எல்லாம் ஒதுக்கப்பட்டு விட்டால் பணிகள் நிறைவடையும் காலம் குறித்த தகவல் கிடைத்துவிடும். அதன் பின்னர்தான் புல்லட் ரயில் எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலை உறுதியாக கூற முடியும். தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் பாதையில் புல்லட் ரயில்கள் 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தாலும் எந்தவித பிரச்சனையும் ஏற்படாதவாறு கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய அரசு தான் அளித்துள்ள இந்த பதிலால் 2026-ம் ஆண்டும் புல்லட் ரயில் வருவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. பணிகளில் சுனக்கம் ஏற்பட்டாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ இன்னும் புல்லட் ரயில் வருவதற்கு சில காலங்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் மத்திய அரசு பணிகளை துரிதமாக முடித்து 2026-ம் நிதியாண்டில் இதை பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகளை எடுத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டில் வேகமாக பயணிக்கும் ரயிலின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. புல்லட் ரயில் போன்ற ரயில்வே தொழில்நுட்பங்கள் இந்தியா போன்ற நாட்டிற்கு வந்தால் அது இந்தியாவின் வளர்ச்சியை அதிகமாக மாற்றுவதற்கு ஒரு பெரிய துணையாக இருக்கும். இதனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு புல்லட் ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications









