இன்னும் கொஞ்சம் வருஷம் தான்... மத்திய அரசு விட போகும் இரயிலை பார்த்து மெர்சலாக போறோம்!!
குஜராத்தில் புல்லட் இரயில் சேவைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அதிரடியாக துவங்கியுள்ளன. இதுகுறித்து தேசிய அதிவேக இரயில் கார்ப்பிரேஷன் தனது அறிக்கையை இன்று (அக்.9) வெளியிட்டுள்ளது. அதனை பற்றியும், இந்தியாவில் புல்லட் இரயில் சேவை சாத்தியமானது தானா? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், மற்ற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் இந்தியா சற்று மெதுவாகவே வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கிறது என சொல்ல வேண்டும். குறிப்பாக, இரயில் சேவைகள் விஷயத்தில் இந்தியா பின்தங்கியே உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளில் புல்லட் இரயில்கள் நீண்ட வருடங்களாக செயல்பாட்டில் உள்ளன.

ஆனால் இந்தியாவில் இப்போதுவரையில் புல்லட் இரயில் சேவை எந்த பகுதியிலும் இல்லை. முதலாவதாக, தலைநகர் டெல்லியில் இன்னும் சில வருடங்களில் புல்லட் இரயில் சேவை வந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குஜராத்தில் புல்லட் இரயில் வழித்தடம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நிறைவடைந்து உள்ளன.
மும்பை- அஹமதாபாத் இடையே இந்த புல்லட் இரயில் சேவையை துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த புல்லட் இரயில் சேவைக்கான வழித்தடம் அமையவுள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றை கையகப்படுத்தும் பணிகள் குஜராத் மாநிலத்தில் 100% நிறைவடைந்து உள்ளதாக தேசிய அதிவேக இரயில் கார்ப்பிரேஷன் லிமிடெட் (NHSRCL) அக்டோபர் 9ஆம் தேதியான இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து NHSRCL சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குஜராத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடைசியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் சூரத் மாவட்டத்தில் காதோர் என்கிற கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், குஜராத்தில் மொத்தமாக 8 மாவட்டங்களில் 951.14 ஏக்கர் பரப்பளவில் நிலம் இந்த புல்லட் இரயில் வழித்தடத்திற்காக கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தமாக இந்த புல்லட் இரயில் வழித்தடத்திற்காக இதுவரையில் 99.95% நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலங்கள் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமின்றி, டாமன் & டையூ போன்ற யூனியன் பிரதேசங்களில் இருந்தும் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து NHSRCL வெளியிட்டுள்ள அறிக்கையில், 429.71 ஏக்கர் நிலங்கள் மஹாராஷ்டிராவில் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், இந்த குறிப்பிட்ட வழித்தடத்திற்கான புல்லட் இரயில் சேவையை வழங்கும் பணிகள் 99.83% நிறைவடைந்து விட்டதாகவும், யூனியன் பிரதேசத்தில் மட்டும் 7.90 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் NHSRCL தெரிவித்துள்ளது. குஜராத்தில் கையகப்படுத்தப்பட்ட மொத்த நிலங்களில் அதிகப்பட்சமாக சூரத்தில் 160.52 ஏக்கரும், வதோதாராவில் 142.30 ஏக்கரும் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த வழித்தடத்தில் புல்லட் இரயில் சேவைக்கான செயல்பாட்டு கண்ட்ரோல் மையம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதியிலும், குஜராத்தில் சூரத் மற்றும் சபர்மதியில் 2 மற்றும் மஹராஷ்டிராவில் தானேவில் ஒன்று என மொத்தம் 3 டிப்போக்களும் அமைக்கப்பட உள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சூரத் - பிலிமோரா இடையே முதற்கட்ட புல்லட் இரயில் சேவை 2026இல் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு நாடும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டுமெனில், பொது போக்குவரத்து அந்த நாட்டில் மேம்பட வேண்டியது அவசியமாகும். இதற்கு, புல்லட் இரயில் சேவை மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், வல்லரசு நாடுகள் அனைத்தும் பின்பற்றும் போக்குவரத்து முறை இதுவாகும்.


Click it and Unblock the Notifications









