வந்தே பாரத் இரயில்கள் சும்மா டிரைலர் தான்!! சென்னை - மைசூருக்கு புல்லட் இரயில்கள் - டிராவல் டைம் 1.5 மணிநேரமே!
நாடு முழுவதும் வந்தே பாரத் இரயில்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் நமது சென்னையில் புல்லட் இரயில்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் இருந்து எந்த நகரத்திற்கு புல்லட் இரயில்கள் இயங்கவுள்ளன? எப்போது இது நடக்கும்? என அடுக்கடுக்காக கேள்விகள் தோன்றுகிறது அல்லவா. இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு, வாருங்கள் செய்திக்குள் போவோம்.
புல்லட் இரயில்கள் அவற்றின் அதிவேக இயக்கத்தினால் பிரபலமானவை ஆக உள்ளன. ஜப்பானில் தோன்றிய இத்தகைய இரயில்கள் இன்னும் நம் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. முதல் புல்லட் இரயில் சேவை மும்பை- அகமதாபாத் இடையே தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஏப்ரலில் தகவல்கள் வெளியாகின. 508கிமீ தொலைவிற்கு செயல்பட உள்ள இதுதான் இந்தியாவின் முதல் புல்லட் இரயில் சேவையாக விளங்கும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் புல்லட் இரயில்கள் அதிகப்பட்சமாக மணிக்கு 320கிமீ வேகத்திற்கு இயங்கக்கூடியவைகளாக இருக்கும் என கூறப்படுவதால், மும்பையில் இருந்து அகமதாபாத்தை 2 மணிநேரம் 10 நிமிடங்களிலேயே எட்டிவிடலாம். இதற்காக, ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் தொழிற்நுட்ப நிபுணத்துவ குழுக்கள் உடன் இணைந்து செயல்பட்டுவரும் நமது மத்திய அரசு, நிதியுதவியையும் ஜப்பானிடம் இருந்து எதிர்பார்ப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் மக்களைவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், தேசிய இரயில் திட்டத்தில் (NRP) அதிவேக இரயில் சேவை மேம்பாட்டு பணிகளுக்காக நாட்டில் 7 முக்கியத்துவமான வழித்தடங்கள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

அமைச்சர் கூறிய நாட்டின் 7 முக்கிய இரயில் வழித்தடங்களில் 481கிமீ தொலைவிலான சென்னை - மைசூரு வழித்தடமும் ஒன்றாக உள்ளது. இந்த வழித்தடத்திற்கு இடையே பெங்களுர் மாநகர இரயில் நிலையமும் உள்ளது. சென்னை - மைசூர் வழித்தடத்தில், விரைவான போக்குவரத்திற்காக கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் இரயில் சேவை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், புல்லட் இரயில்கள் அதனை காட்டிலும் விரைவானதாக இருக்கும்.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அதிவேக இரயில் சேவையாக மத்திய இரயில்வே அமைச்சகம் புல்லட் இரயில் நெட்வொர்க்கை கருதுவதாகவும், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான மிகவும் ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரே வழித்தடம் அமையவுள்ள பகுதிகளில் மண்ணின் தரம் எவ்வாறு உள்ளது என்பது சோதனை செய்யப்பட்டு, நிலங்களை கையப்படுத்தும் பணிகள் துவங்கும்.

எதிர்காலத்திற்காக அதிவேக இரயில் போக்குவரத்தை கொண்டுவருவதில் மத்திய இரயில்வே அமைச்சகம் திட்டவட்டமாக உள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே கூறியதுபோல், அதிவேக இரயில் சேவைக்காக ஜப்பானின் புல்லட் இரயில்களையே தற்போதைக்கு நம் மத்திய அரசு எதிர்பார்த்து உள்ளது. ஆனால் எப்படியிருந்தாலும், பெங்களூர் வழியே சென்னை - மைசூர் புல்லட் இரயில் சேவை துவங்கப்படுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
சென்னை - மைசூர் இடையே புல்லட் இரயில் சேவை ஆனது 2051ஆம் ஆண்டில் இருந்தே துவங்கப்படும் என நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ஹைதராபாத் - மும்பை இடையேயான 709கிமீ தொலைவிற்கும் 2051இல் இருந்து புல்லட் இரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. ஆனால் இவற்றிற்கு முன்பாகவே, 2041ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத்- பெங்களூர் புல்லட் இரயில் சேவை வந்துவிடுமாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கேற்ப பொது போக்குவரத்தை விரிவுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை ஆகும். இதனை செவ்வனே செய்துவரும் நமது மத்திய அரசின் எதிர்கால திட்டங்களுள் சிறப்பான ஒன்றாக புல்லட் இரயில் திட்டம் உள்ளது. ஏனெனில், ஜப்பான் போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாட்டில் வெற்றிப் பெற்றவைகளாக புல்லட் இரயில்கள் விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications









