எரிந்து கொண்டே கூட்டத்தை நோக்கி நகர்ந்த கார்.. திக் திக் நிமிடத்தின் வீடியோ! கார் நகர்ந்ததற்கு இதுதான் காரணமா!
கார் ஒன்று எரிந்துக் கொண்டே கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தவர்கள் மீது மோத வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த வீடியோவே தற்போது இணையத்தில் காட்டு தீயைப்போல் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. காருக்குள் டிரைவர் மற்றும் பயணி யாருமே இல்லாத நிலையில் அந்த வாகனம் எப்படி நகர்ந்தது? குறிப்பாக கூட்டத்தை நோக்கி எப்படி நேராக நகர்ந்தது? என்கிற சந்தேகமே நம்மில் பலருக்கு எழும்பி இருக்கின்றது. மேலும், காருக்கள் எந்த காரணத்தினால் தீ பற்றியிருக்கும் என்கிற காரணத்தையும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலேயே இந்த அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. தீ விபத்திற்கு உள்ளாகி இருக்கும் அந்த வாகனத்தின் உரிமையாளர் ஜிதேந்திரா ஜங்கிட் ஆவார். மன்சரோவர் பத்திரிக்கையாளர் காலனியில் உள்ள தர்சன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர் கடந்த சனிக்கிழமை அன்று அஜ்மர் சாலை வழியாக சுதர்சன்புரா புலியா-விற்கு சென்றிருக்கின்றார்.

அப்போதே இந்த அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அவர் வழக்கமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த, அந்நேரத்தில் காரினுள் இருந்து புகை வெளியே வர ஆரம்பித்திருக்கின்றது. இந்த நிலையிலேயே அவர் தன்னுடைய சகோதரருக்கு செல்போனில் அழைத்து இதுகுறித்து கூறியிருக்கின்றார். அவர், காரின் பான்னெட்டை திறந்து பார்க்க கூறியிருக்கின்றார்.
அவ்வாறு செய்தபோதே காரின் எஞ்சினுக்குள் தீப்பிடித்திருந்தது தெரிய வந்திருக்கின்றது. அந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென கார் முழுக்க பரவியிருக்கின்றது. இந்த நிலையிலேயே அக்கார் கூட்டம் கார் எரிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி வேகமாக நகர்ந்திருக்கின்றது. இதைப் பார்த்த கூட்டம் தலை தெரிக்க ஓட ஆரம்பித்தது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. குறிப்பாக, அனைவரும் அங்கிருந்த டூ-வீலர்களை எடுத்துவிட ஒருவரால் மட்டும் பைக்கை எடுக்க முடியவில்லை. இருப்பினும், வாகனம் மோத வந்த நேரத்தில் வாகனத்தை சாய்த்துவிட்டு எகிறிவிட, அவரும் அந்த வாகனமும் தப்பியது. லேசாக பைக்கை மோதிவிட்டே அந்த தீ பிடித்த கார் முன்னோக்கி சென்று மீண்டும் சாலை தடுப்பின் மீது மோதி நின்றது.
இந்த நிலையிலேயே காருக்குள் யாருமே இல்லாத நிலையில் எப்படி அந்த வாகனம் நகர்ந்தது என்கிற சந்தேகம் பலருக்கும் எழும்பியிருக்கின்றது. போலீஸாரின் தகவலின்படி, இந்த வாகனம் ஜிதேந்திரா ஜங்கிட், சுதர்சன்புரா புலியாவிற்கு செல்ல அங்கிருந்த மேம்பாலத்தை பயன்படுத்திய போதே காருக்குள் தீப்பிடித்திருக்கின்றது. இந்த நிலையிலேயே அவர் அப்படியே காரை விட்டுவிட்டு வெளியேறி இருக்கின்றார்.
மேலும், அவர் காரை நிறுத்தியது மேம்பாலத்தின் இறக்கமான பகுதி என கூறப்படுகின்றது. இதனால்தான் மெல்லமாக நகர தொடங்கிய அந்த கார் திடீரென அதிக வேகமாக நகர்ந்து மக்கள் கூட்டமாக நின்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்திருக்கின்றது. இதைக் கண்டே அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த சம்பவத்தின் வாயிலாக மக்கள் அனைவரும் ஓர் பாடம் கற்பிக்கப்பட்டு இருக்கின்றது. தீ பிடித்து எரியும் வாகனம் அல்லது தீ விபத்து ஏற்பட்டிருக்கும் இடத்திற்கு மிக அருகில் நின்று வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்பதுதான் அது ஆகும். அது மிகுந்த ஆபத்தான சூழலை ஏற்படுத்தக் கூடும்.
தீ விபத்துக்குள்ளாக இருக்கும் வாகனங்களில் பேட்டரி அல்லது பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறுவதற்கான சூழல் ஏற்படும் என்பதாலயே அதன் அருகில் நின்று வேடிக்கைப் பார்க்க வேண்டாம் என கூறப்படுகின்றது. பேட்டரி மற்றும் பெட்ரோல் டேங்க் மட்டுமல்ல சில மின்சாதனங்கள் வெடித்து சிதறுவதறக் கூடும். ஆகையால், தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருக்கும் வாகனத்தின் பக்கத்தில் நிற்பது மிகவும் ஆபத்தானது ஆகும்.
காரில் தீப்பிடிப்பதற்கான காரணங்கள்: கார்களில் பல்வேறு காரணங்களால் தீ விபத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மிக முக்கியமாக எரிபொருள் கசிவு காரணம் உள்ளது. இது தவிர மின்சாதன பொருட்களாலும் சில நேரங்கள் தீ விபத்துகள் அரங்கேறுகின்றன. குறிப்பாக, சந்தைக்கு பிறகான தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தும்போதே இந்த மாதிரியான ஆபத்தான சூழல் ஏற்படுகின்றன. இத்துடன், அதிகப்படியான வெப்பம், கன்வெர்ட்டர்களில் ஏற்படும் பிரச்னை, மோசமான பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களினாலும் கார்களில் தீ விபத்து என்பது ஏற்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் உரிமையாளர்கள் கார்களில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க அதை சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும். அத்துடன், மிக முக்கியமாக ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களை வாகனங்களில் பொருத்துவதை தவிர்த்தல் வேண்டும். மேலும், ஆயில் மற்றும் எரிபொருள் கசிவு உள்ளிட்டவற்றிற்கு உடனடி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் நிச்சயம் தீ விபத்தில் இருந்து வாகனங்களைக் காப்பாற்றிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








