ஒரு கிலோ கேக் வாங்கினால் 'அதிசய பொருள்' இலவசம்.. ஓவர் நைட்டில் வேர்ல்டு ஃபேமஸ் ஆன வேலூர் பேக்கரி
ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என வேலூரை சேர்ந்த பேக்கரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என வேலூரை சேர்ந்த பேக்கரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த அறிவிப்பு குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால்தான், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான எந்த திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (செப்.22) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 85.69 ரூபாய். மறுபக்கம் ஒரு லிட்டர் டீசல், 78.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலின் விலை மிக அதிகமாக இருப்பதால், சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் வேலூர் அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் டிசி (DC) பேக்கரி உரிமையாளர்கள் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் வேலூர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் ஓவர் நைட்டில் பிரபலமாகியுள்ளது டிசி பேக்கரி.

ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்பதுதான் அந்த அறிவிப்பு. வாடிக்கையாளர்கள் மத்தியில் பேக்கரியை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக, உரிமையாளர்கள் சீனிவாசன் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் சேர்ந்து எடுத்ததுதான் இந்த அதிரடியான முடிவு.

ஆனால் மக்களுக்கு எது தேவையோ, அதனை தெளிவாக புரிந்து கொண்டு, அட்டகாசமான அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு கிலோ கேக்குக்கு மட்டும்தான் இந்த ஆஃபரா? என நினைத்து விட வேண்டாம். இங்கு 495 ரூபாய்க்கு மேல் எது வாங்கினாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக கிடைக்கும்.

வேலூர் அண்ணா சாலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, டிசி பேக்கரி தொடங்கப்பட்டது. ஒரு சில ரெகுலர் வாடிக்கையாளர்களை பிடித்து விட்டாலும் கூட, பலருக்கு டிசி பேக்கரியை பற்றி பெரிதாக தெரியவில்லை. எனவே வரிசையாக பல ஆஃபர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

ஆனால் அவை எல்லாம் ஓரளவுக்கு மட்டுமே ரீச் ஆனது. அந்த நேரத்தில் சீனிவாசன் மற்றும் பாக்யராஜ் ஆகியோரின் சிந்தனையில் உதித்ததுதான் இந்த இலவச பெட்ரோல் திட்டம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இது போன்ற வித்தியாசமான முயற்சியை அவர்கள் எடுத்துள்ளனர்.

ஒரு கிலோ பர்த்டே கேக் அல்லது 495 ரூபாய்க்கு மேல் ஏதேனும் பர்சேஸ் செய்தால், இலவச கூப்பன் வழங்கப்படுகிறது. அதனை வாங்கி சென்று, இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பி கொள்ளலாம். இதற்காக 5 பெட்ரோல் பங்க்குகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆஃபர் நேற்று (செப்.21) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் பொதுமக்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஆஃபர் வெகுவாக கவர்ந்ததால், வாடிக்கையாளர்கள் பலர் பேக்கரியை மொய்க்க தொடங்கியுள்ளனர். தீயா வேலை செஞ்சிருக்கீங்க பாஸ்!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பலர் வேக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications