சீன பொருட்களுக்கு தான் தடை, சீன நிறுவனத்துக்கு அல்ல!! இந்தியாவை டார்க்கெட் செய்யும் பி.ஒய்.டி!
டெஸ்லா (Tesla)-ஐ போன்று பிஒய்டி நிறுவனமும் இந்தியாவில் மிக பெரிய தொகையை முதலீடு செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படி எவ்வளவு தொகையை பிஒய்டி நம் நாட்டில் முதலீடு செய்ய உள்ளது? இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு பாதிப்பா? வேறு என்னென்ன திட்டங்களை பிஒய்டி நிறுவனம் வைத்துள்ளது? என்ற கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.
இந்தியா மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பது மட்டுமின்றி, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்து மிக நீளமான சாலை கட்டமைப்பை கொண்ட நாடு நம் இந்தியா ஆகும். இதனாலோ என்னவோ இந்திய சந்தையில் களமிறங்க பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

பிரபலமான அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் நுழைய கடந்த பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வரும் விஷயத்தை கேள்விப்பட்டு இருப்பீர்கள். உலகளவில் அமெரிக்காவும், சீனாவுக்கும் இடையே பனி போர் நிலவி வருவதை பற்றி நான் கூற வேண்டியதில்லை. அப்படியென்றால், அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தியாவிற்குள் நுழைய தயாராகி வருகிறது என்றால், சீன நிறுவனம் ஒன்றும் களமிறங்கும். அதுதானே லாஜிக்.
அதன்படி, சீனாவின் ஷென்ஸென் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஒய்டி நிறுவனம் ஹைதராபாத்தை சேர்ந்த மேகா என்ஜினியரிங் & கட்டமைப்பு நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து இந்திய சந்தையில் களம்புக தயாராகி வருகிறது. சீனாவில் எலக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைப்ரீட் வாகனங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாக பிஒய்டி உள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,207 கோடி) முதலீடு செய்ய உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை ஏற்கனவே கூறியதுபோல், ஹைதராபாத்தை சேர்ந்த மேகா என்ஜீனியரிங் & கட்டமைப்புகள் நிறுவனத்துடன் இணைந்து பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரி தொழிற்சாலைக்காக முதலீடு செய்ய உள்ளது.
இதன் முதற்கட்டமாக, பிஒய்டி - மேகா நிறுவனங்கள் தங்களது கூட்டணியை அங்கீகரிக்க வேண்டி இந்திய ஒழுங்குமுறை அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன. பிஒய்டி நிறுவனம் சீனாவை போல் இந்தியாவிலும் அதன் அனைத்து விதமான எலக்ட்ரிக் வாகனங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், ஹேட்ச்பேக் கார்களில் இருந்து எஸ்யூவி ரக கார்கள் வரையில் எலக்ட்ரிக் மோட்டார்களுடன் அடங்கவுள்ளன.

பிஒய்டி நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் அட்டோ 3 எலக்ட்ரிக் எஸ்யூவி காரையும், இ6 எலக்ட்ரிக் எம்பிவி காரையும் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்த எலக்ட்ரிக் கார்கள் முழுவதுமாக இந்தியாவில் உருவாக்கப்படுவது இல்லை. பாகங்களாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சென்னைக்கு அருகே உள்ள தொழிற்சாலையில் ஓர் முழுமையான காராக அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
அட்டோ 3 மற்றும் இ6 கார்களில் தற்போதைக்கு அட்டோ 3 எலக்ட்ரிக் கார் மட்டுமே பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இ6 கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கும், அரசாங்கத்திற்கும் மட்டுமே இப்போதைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில், பிஒய்டி நிறுவனத்தின் பிரபலமான கார்களாக விளங்கும் சாங்க், யுவான் பிளஸ் மற்றும் கின் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்கு ஏற்ற பெயர்களில் எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டெஸ்லா, பிஒய்டி என முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இந்திய சந்தையில் நுழைய முயற்சிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவிலேயே தொழிற்சாலையை நிறுவுமாறு மத்திய அரசு வலியுறுத்துவதன் காரணமாகவே டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வர யோசிக்கிறது. ஆனால், பிஒய்டி 2 எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த நம்பிக்கை & தைரியத்தில் இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவ உள்ளது.


Click it and Unblock the Notifications









