இந்த ஒரு விஷயத்தை ஃபாலோ பண்ணா போதும்... இந்த நாட்டில் லைசன்ஸ் இல்லாமலேயே காரை ஓட்டலாம்!!
வாகனங்களை இயக்க ஓட்டுனர் உரிமம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதாவது, நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டையோ அல்லது ஆதார் அட்டையோ எந்த அளவிற்கு முக்கியமானதோ அதேபோன்று பொது சாலையில் மோட்டார் வாகனங்களை இயக்குவோரிடம் ஓட்டுனர் உரிமம் இருத்தலும் வேண்டும்.
மணிக்கு 25கிமீ வேகத்திற்கு குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் தேவையில்லை. ஆனால் ஒரு நாட்டில் இளம் தலைமுறையினர் பிஎம்டபிள்யூ மற்றும் போர்ஷே போன்ற கார்களை இயக்குவதற்கு கூட ஓட்டுனர் உரிமம் தேவையில்லை என்பது போன்றதான ஒரு சட்டம் அமலில் உள்ளது. எந்த நாடு அது? எதற்காக இவ்வாறான சட்டத்தை அமல்படுத்தி உள்ளனர்? என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

உலகின் ஆட்டோமொபைல் வாகனங்களின் தாயகம் என்று ஜெர்மனியை சொல்லலாம். அந்த அளவிற்கு 100 ஆண்டுக்கும் மேல் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல இந்த நாட்டில் தான் தோன்றின. அதுமட்டுமின்றி, போக்குவரத்து விதிமுறைகளை உலகிலேயே முதன்முதலில் வகுத்த நாடுகளுள் ஜெர்மனியும் ஒன்றாகும். இந்த நாட்டில் 100 வருடங்களுக்கு முன் வகுக்கப்பட்ட சில போக்குவரத்து விதிமுறைகள் இப்போதும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அத்தகைய விதிமுறைகளில் 30kmph வேகத்திற்கு மேல் இயங்காத வாகனங்களை இயக்க ஓட்டுனர் உரிமம் தேவையில்லை என்பதும் ஒன்றாகும். இந்த விதிமுறை நமது இந்தியாவிலும் உள்ளது. ஆனால் நம் நாட்டில் 30kmph என இல்லாமல், 25kmph என கடைப்பிடித்து வருகிறோம். ஜெர்மனியில் இந்த விதிமுறை ஆனது முக்கியமாக அந்த சமயத்தில் விவசாயத்தில் வாகனங்களை இயக்குவோருக்காக கொண்டுவரப்பட்டது.
ஏனெனில், கடந்த நூற்றாண்டின் துவக்கங்களில் விவசாயங்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே ஆட்டோமொபைல் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், விவசாயத்தில் வாகனங்களை பயன்படுத்துவது அப்போதுதான் ஜெர்மனியில் மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. இந்த விஷயத்தில் நம் இந்தியாவை ஒப்பிட வேண்டாம். ஏனெனில் இந்த நிலையை சற்று தாமதமாகவே நாம் எட்டினோம்.

விவசாயங்களில் பெரும்பாலும் குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்களே பயன்படுத்துவர். அப்படி இருக்கையில், 100 வருடங்களுக்கு முன்பு விவசாய வாகனங்கள் எப்படி இருந்திருக்கும் என சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஜெர்மனியில் 15 வயதுக்கு மேல் உள்ள எவரும் 30kmph வேகத்திற்குள் இயங்கும் வாகனங்களை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கலாம்.
இந்த நிலையில் 15 வயதான இளம்பெண் ஒருவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வருகிறார். போலீஸாரிடமும் அவர் தண்டனையோ அல்லது அபராதமோ பெறுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் தனது பிஎம்டபிள்யூ காரை 30kmph வேகத்திற்கு மேல் இயங்காத வகையில் மாடிஃபை செய்துள்ளார். இந்த 15 வயது ஜெர்மனி பெண்ணின் பெயர் எவெலினா கிறிஸ்டியன்சன். இவரிடம் அடர் நீல நிறத்தில் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார் உள்ளது.
இந்த காரை கடந்த ஆண்டு ஏப்ரலில் தனது பிறந்த நாளுக்காக பெற்றதாக எவெலினா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் சில சாதனைகளை புரிந்ததற்காக எவெலினாவிற்கு இந்த காரை பரிசாக வழங்கி உள்ளனர். இதேபோன்று தான் சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் சிறுவன் ஒருவன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொது சாலையில் இயக்கிய போது போலீஸாரிடம் பிடிப்பட்டான். ஆனால் அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்க லைசன்ஸ் தேவையில்லாமல் இருந்ததால் தப்பித்தான்.


Click it and Unblock the Notifications